புதன், 14 ஆகஸ்ட், 2019

ஜம்முவுக்கும் காஷ்மீருக்கும் மார்ச் மாதம் தேர்தல்? லடாக்கிற்கு சட்டமன்றமே கிடையாது

ஜம்மு காஷ்மீர்: மார்ச் மாதம் தேர்தல்?மின்னம்பலம் : ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் கடந்த 10 நாட்களாக இழுத்து மூடப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வரும் மார்ச் மாதம் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படக் கூடும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று ஆகஸ்ட் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை டெல்லியில் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக திடீர் ஆலோசனை நடத்தியதாகவும், உள் துறை அமைச்சகத்தின் முறையான அறிவுறுத்தலுக்காகக் காத்திருப்பதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்புச் சட்டம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி உள் துறை அமைச்சர் அமித் ஷாவால் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இதுவரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த 370ஆவது சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு அரசியல் சாசனத்திலிருந்து நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் ஆகியவை ஒரு யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதி தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டன.

ஏற்கெனவே இருந்த நிலைமையின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலம் 111 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 24 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. ஆனால், அவற்றில் தேர்தல் நடத்தப்பட்டதில்லை. லடாக் பகுதி நான்கு சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்றிருந்தது.
மறுசீரமைப்புச் சட்டத்துக்குப் பிறகு தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் பூமியின் பிரதேசத்தில் சட்டமன்றத் தொகுதிகளை வரையறுக்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டது. இதனடிப்படையில் புதிய சட்டமன்றத்தில் 114 சட்டமன்றத் தொகுதிகள் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 24 தொகுதிகள் உட்பட) இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றத்தில் முன்பு இருந்ததைவிட ஏழு தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கான தனித்தொகுதிகள் பற்றிய ஆலோசனையும் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அநேகமாக வரும் மார்ச் மாதம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்குத் தேர்தல் நடத்தப்படலாம் என்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கியமான அரசியல் தலைவர்கள், குறிப்பாக முன்னாள் முதல்வர்களை எல்லாம் கைது செய்து கடந்த 10 நாட்கள் ஆகும் நிலையில் தேர்தல் ஆணையம் டெல்லியில் காஷ்மீரின் தேர்தல் பற்றி ஆலோசனை நடத்தியிருக்கிறது.
லடாக் பகுதி சட்டமன்றம் அல்லாத யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: