செவ்வாய், 25 ஜூன், 2019

ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விவரம்!

ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விவரம்!மின்னம்பலம் : நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கைச் சில வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டுமென்று தொழிலதிபர் ஐசரி கணேஷ் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
கடந்த 23ஆம் தேதியன்று சென்னை மயிலாப்பூர் புனித எப்பாஸ் மேல்நிலைப்பள்ளியில் நடிகர் சங்கப் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதற்கு முந்தைய நாள், நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சென்னை மாநகரக் காவல் துறை அளிப்பது தொடர்பான அவசர வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது கடந்த சனிக்கிழமை (ஜூன் 22) அன்று மாலை 5 மணியளவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வீட்டில் நடைபெற்றது.

அப்போது, நடிகர் சங்கத் தேர்தலை உரிய பாதுகாப்புடன் மயிலாப்பூரிலுள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார் நீதிபதி. அது மட்டுமல்லாமல், சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட ஐசரி கணேஷ் மற்றும் அவரது நண்பர் அனந்தராமன் மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்தார். இதன் பின்னணி விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேலூர் சென்றுள்ளார். காலை 11.55 மணியளவில் சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் எம்.ஜோதிராமன் அவரை செல்போனில் அழைத்துப் பேசியுள்ளார். அப்போது, நடிகர் சங்கத் தேர்தலை நடத்த அனுமதிப்பது தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி உத்தரவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது வேலூர் பயணத்தை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கு விசாரணையை மாலை 5 மணியளவில் தனது வீட்டில் வைத்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு ஊடகங்களில் வெளியானது.
கடந்த 22ஆம் தேதி மாலை 4.20 மணியளவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே ஆனந்த் வெங்கடேஷின் கார் கடந்தபோது, அவரை செல்போனில் அழைத்துப் பேசியுள்ளார் அனந்தராமன். ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால், அவரிடம் பேசியுள்ளார் ஆனந்த் வெங்கடேஷ். வழக்கமாகப் பேசுவது போல உரையாடிய அனந்தராமன், நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு பற்றிக் கேட்டுள்ளார்.
“ஐசரி கணேஷ் இந்த வழக்கு விசாரணையைச் சில வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டுமென்று விரும்புவதாகவும், ஜூன் 23 அன்று நடிகர் சங்கத் தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று அவர் விரும்புவதாகவும் தெரிவித்தார் அனந்தராமன். இதனைக் கேட்டதும், நான் உடனடியாக அவரது போன் காலை கட் செய்தேன். மாலை 4.45 மணியளவில், ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் காவல் துறையினரும் என் வீட்டின் முன்பாக இருந்தனர். லிப்டில் ஏறி இரண்டாம் தளத்தில் உள்ள வீட்டை அடைந்தபோது, அங்கு அனந்தராமன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.
அப்போது, மீண்டும் இந்த வழக்கு விசாரணையை 2 அல்லது 3 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டுமென்று அவர் வற்புறுத்தினார். அவர் நடத்திவரும் அமைப்புக்கு ஐசரி கணேஷ் பல்வேறு வசதிகள் செய்து தந்ததாகக் குறிப்பிட்டார். வழக்கை ஒத்திவைத்தால் அதற்குத் தகுந்தவாறு ஐசரி கணேஷ் திருப்பி அளிப்பார் என்றும் தெரிவித்தார். இதனைக் கேட்டதும், அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினேன். வெகுதாமதமாகத்தான் என் வீட்டில் இருந்தவாறே அனந்தராமன் போன் செய்தார் என்பதை எனது மனைவி, மகன் மூலமாகத் தெரிந்துகொண்டேன். வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஒருவர் நீதிமன்றத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிப்பது கண்டு அதிர்ச்சியடைந்தேன்” என்று ஆனந்த் வெங்கடேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே, தானாக முன்வந்து ஐசரி கணேஷ், அனந்தராமன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இந்த வழக்கு விசாரணையைப் பட்டியலிடுமாறு அவர் பதிவாளருக்குப் பரிந்துரை செய்துள்ளார். சுமார் 4 வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: