சனி, 29 ஜூன், 2019

ஸ்டாலின் குடும்பம் மீது மத்திய அரசு குறி..? வைகோ, வில்சன், சண்முகம் .. ராஜ்யசபாவுக்கு ?

டிஜிட்டல் திண்ணை:    ஸ்டாலின் குடும்பம் மீது மத்திய அரசு குறி!மின்னம்பலம் : அலுவலக வைஃபை ஆன் செய்த அடுத்த நொடி, வாட்ஸ் அப் ஆன்லைன் வந்தது. மெசேஜ் டைப் செய்துகொண்டிருந்தது.
“திமுகவில் ராஜ்யசபா தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. ராஜ்யசபா தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடக்க இருக்கிறது. ஜூலை 8 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. திமுக, அதிமுக தலா மூன்று உறுப்பினர்களை தேர்வு செய்து அனுப்பும் இந்த வேலைகளில் இரு கட்சிகளுமே தீவிரமாக இறங்கிவிட்டன.
திமுக சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒன்று போக மீதியிருக்கும் இரு ராஜ்யசபா இடங்களுக்கு பலத்த போட்டி இருப்பதைப் பற்றி ஏற்கனவே மின்னம்பலத்தில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

இதற்கிடையேதான் ஸ்டாலினின் மாப்பிள்ளையான சபரீசனை ராஜ்யசபா எம்பி ஆக்குவதற்கான ஒரு திடீர் மூவ் கடந்த சில தினங்களாக தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இளைஞரணித் துணைச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் தனக்கு நெருக்கமான வட்டாரத்தில், ‘சபரீசனுக்குதான் ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கப் போறாரு தலைவர்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். இந்தக் கருத்துருவாக்கத்தின் பின்னால் ஸ்டாலின் குடும்பத்தினர்தான் இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் கலைஞர் சிலை திறப்பு விழாவுக்காக சோனியாவை சந்திக்க திமுக தலைவர் ஸ்டாலின் டெல்லி சென்றபோது அவருடன் சபரீசனும் சோனியா, ராகுலோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அதற்கு முன்பிருந்தே டெல்லியில் திமுகவுக்காக சபரீசன் லாபி செய்து வந்தார் என்றபோதும், அந்தப் புகைப்படமே சபரீசனின் டெல்லி முகத்தை எடுத்துக் காட்டியது. அதன் பின் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைவதற்கு முன்பாகவும் சில நாட்கள் சபரீசன் டெல்லியில் தொடர்வாசம் மேற்கொண்டார். பாஜகவிலுள்ள உயர் மட்டப் புள்ளிகள் சிலருடன் சபரீசன் டச்சில் இருக்கிறார் என்று கூட அப்போது செய்திகள் வெளிவந்தன.
தமிழகத்தில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவருவது உள்ளிட்ட வேலைகளில் சபரீசன் இறங்கியிருந்தார். இப்படியாக மேடைகளில் தோன்றி உதயநிதி போல மைக் பிடித்து பேசி பிரச்சாரம் செய்யவில்லை என்றால் கூட பின்புல அரசியலில் சபரீசனின் பெயர் சில மாதங்களாகவே தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் திருச்சியில் நடந்த அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்பு விழாவில் சபரீசனும் கலந்துகொண்டு ஸ்டாலின், ஐ. பெரியசாமி, கே.என். நேரு, உதயநிதி, அன்பில் மகேஷ் ஆகியோரோடு போஸ் கொடுத்தார்.
இந்தச் சூழலில்தான் சபரீசன் ராஜ்யசபா செல்கிறார் என்ற பேச்சு திமுகவுக்குள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டாலின் குடும்பத்தினர் இதில் தீவிரமாக இருக்கிறார்கள். அவர்கள் ஸ்டாலினிடம், ‘ தமிழ்நாட்ல மட்டும் பாஜகவை காலூன்ற விடாமல் திமுக ஜெயித்துவிட்டதில் பாஜகவுக்கு நம்ம மேல ரொம்ப கோபம். அதுவும் குறிப்பாக நம்ம குடும்பம் மேல மத்திய அரசு கடுமையான கோபத்துல இருக்கிறதா சொல்றாங்க. இந்த நேரத்துல கலைஞர் சிலைய திறக்க மம்தா பானர்ஜியை கூப்பிட்டிருக்கோம். இந்தியாவுல மம்தா, சந்திரபாபு நாயுடுன்னு ரெண்டே ரெண்டு அரசியல்வாதிகளைதான் முழுமையா ஒடுக்க நினைக்கிறார் மோடி. நாம கலைஞர் சிலைய திறக்க மம்தாவை கூப்பிட்டுருப்பதால திமுக மேல் குறிப்பா நம்ம குடும்பத்தின் மேல கடுமையான கோபத்துல இருக்காங்க டெல்லியில. சபரீசன் வேற நிறைய பிசினஸ் செஞ்சுக்கிட்டிருக்காரு. அரசியல் ரீதியா நம்மை நெருங்க முடியாததால குடும்பத்துக்கு சட்ட ரீதியா குடைச்சல் கொடுக்கத் தயாராகிட்டாங்க. இந்த நிலையில நாம சபரீசனை எம்.பி.யாக்கினா அவருக்கு ஒரு பாதுகாப்பா இருக்கும்’ என்று ஸ்டாலினிடம் குடும்பத்தின் சார்பில் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே உதயநிதிக்கு இளைஞரணி பதவி வேண்டும் என்றும் இதேபோலதான் குடும்பத்தில் இருந்து ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. திமுக சட்ட திருத்த தீர்மானக் குழு சார்பில் உதயநிதியை இளைஞரணிச் செயலாளர் ஆக்க வேண்டும் என்ற கடிதத்தை எழுதி அதை வழக்கறிஞர் வில்சன் ஸ்டாலின் முன்பு நீட்டி, ‘ஒரு சின்ன கோரிக்கை’ என்று சொன்னார். ஆனால் ஸ்டாலினோ,. ‘இது சின்ன கோரிக்கையில்லை, ரொம்பப் பெரிய கோரிக்கை’ என்று சொல்லிச் சிரித்தார். இந்தத் தகவலும் மின்னம்பலத்தில் ஏற்கனவே வெளியாகியிருந்தது. மாவட்டம் தோறும் உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் கொடுக்க வேண்டும் என்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஆனால் ஸ்டாலின் அதை அப்படியே ஓரமாக வைத்திருக்கிறார்.
உதயநிதிக்கான கோரிக்கையே இப்படி ஓரமாக இருக்கும் நிலையில் மாப்பிள்ளை சபரீசனுக்கு எம்பி என்ற கோரிக்கையும் குடும்பத்தில் இருந்தே எழுந்திருக்கிறது. இதுபற்றி தனது குடும்பத்தினரிடம் பேசிய ஸ்டாலின், ‘மத்திய அரசு நம்ம குடும்பத்து மேல எந்த வழியிலாவது பாயலாமானு நேரம் பார்த்துக்கிட்டிருக்காங்க, உண்மைதான். ஆனா அதையெல்லாம் நாம சட்டப்படி பாத்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டார்.
ராஜ்யசபா தேர்தலுக்கான மனு தாக்கல் ஜூலை 8 ஆம் தேதி நிறைவடைய இருக்கு நிலையில் வழக்கறிஞர் வில்சன், தொமுக பொதுச் செயலாளர் சண்முகம் ஆகிய இருவரிடமும் வேட்பு மனுக்களை தயார் செய்யுங்கள் என்றும் சொல்லிவிட்டார் ஸ்டாலின்” என்ற செய்திக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: