திங்கள், 24 ஜூன், 2019

தங்கத்தை தூக்கிய தங்கமணி- பழனியப்பனை தூக்கும் வேலுமணி.. தங்கதமிழின் ஆடியோ லீக்


டிஜிட்டல் திண்ணை: தங்கத்தை தூக்கிய தங்கமணி- பழனியப்பனை தூக்கும் வேலுமணிமின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“அமமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எப்படி அமைச்சர் தங்கமணியை சந்தித்து டீல் பேசினார் என்பதெல்லாம் மின்னம்பலத்தில் ஏற்கனவே விரிவாக வெளிவந்திருக்கின்றன.
அமைச்சர் தங்கமணியை சென்னை எழும்பூரில் சந்தித்துப் பேசி டீலை இறுதி செய்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். மின்னம்பலம் செய்திக்குப் பின் வந்த பேட்டிகளில் அண்ணன் எடப்பாடியின் ஆட்சி என்று தங்க தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுச் சொல்ல, அவர் அதிமுகவுக்கு திரும்பப் போவது உறுதியாகிவிட்டது. எடப்பாடி அண்ணன் என்றால் தினகரன் யார் என்று தங்கத்துக்கு புகழேந்தி கேள்விகேட்டிருக்கிறார்.

இதற்கிடையே தங்க தமிழ்செல்வனைப் போலவே அமமுகவின் முக்கியப் பொறுப்பாளரான பழனியப்பனை அதிமுகவுக்குக் கொண்டுவரும் ஆபரேஷனும் சூடுபிடித்திருக்கிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு முக்கியத் தூண்களாகவிருக்கும் தங்க தமிழ்செல்வனுக்கும், முன்னாள் அமைச்சர் பழனியப்பனையும் தாய்க்கழகமான அதிமுகவில் சேர்க்க, பவர்ஃபுல் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணியிடம் அசைன்மென்ட் கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இதன்படி முன்னாள் அமைச்சர் பழனியப்பனிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சம்பந்தி மற்றும் உறவினர்கள், சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து பேசிவரும் நிலையில்,இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி சில நாட்களுக்கு முன் பழனியப்பனைத் தொடர்புகொண்டு பேசினார். வாட்ஸ் அப் காலில் பேசிய இருவரது உரையாடலும் சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நீடித்திருக்கிறது.
பரஸ்பரம் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டு குடும்ப நிலவரங்கள் பற்றித்தான் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். வரும் நவம்பர் மாதம் பழனியப்பன் தன் மகளுக்குத் திருமணத்துக்கு தேதி நிச்சயித்திருக்கிறார். இதுபற்றி பேசிய வேலுமணி கல்யாணப் பேச்சில் இருந்தே கட்சிப் பேச்சுக்கு வந்திருக்கிறார்.
‘அம்மா ஆட்சியில அமைச்சரா இருந்தவரு நீங்க. உங்க பொண்ணு திருமணத்தை சி.எம். அண்ணனை கூப்பிட்டு கிராண்டா நடத்தணும்னு எங்களுக்கெல்லாம் ஆசை. அங்க இனிமே இருந்து என்னண்ணே பண்ணப் போறீங்க?’ என்று கேட்டிருக்கிறார் வேலுமணி. அவர் பேசப் பேச பழனியப்பன் போனை எடுத்துக் கொண்டு ஓரமாய் போய் தனியாகப் போயிருக்கிறார். யாருமற்ற இடத்தில் நின்று வேலுமணியிடம் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்த அலைபேசி உரையாடலுக்குப் பிறகு வேலுமணியும், பழனியப்பனும் சந்திக்கவும் அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் இரு தரப்பிலும்.
நவம்பர் மாதம் நடக்க இருக்கும் பழனியப்பன் மகள் திருமணம் முதல்வர் எடப்பாடியின் தலைமையில், அமைச்சர்கள் பங்கேற்க நடக்க வேண்டும் என்று வேலுமணி அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். பழனியப்பனுக்கும் இந்த ஆசை உள்ளூர இருப்பதாகவே தெரிகிறது என்கிறார்கள் பழனியப்பன் ஆதரவாளர்கள். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அமமுக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பழனியப்பனுக்கு ராஜ்யசபா எம்.பி பதவிக் கொடுத்து கட்சியில் இணைத்துவிடலாம் என்ற அழுத்தமான நம்பிக்கையில் இருக்கிறாராம் அமைச்சர் வேலுமணி.
அமமுக கூடாரத்தை காலிசெய்ய என்ன வேண்டுமானாலும் செய்ய திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்காக தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பனை அடுத்து இன்னுமிருக்கும் முக்கிய தலைகளுக்கும் வலை விரித்திருக்கிறார் எடப்பாடி” என்று முடிந்தது வாட்ஸ் அப் மெசேஜ்.
இந்த செய்தியை தன் டைம் லைனில் ஷேர் செய்துகொண்டது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை: