செவ்வாய், 25 ஜூன், 2019

ஜூலை 18-ந் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்

மாலைமலர் :பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்ள 6 தமிழக
எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவதால், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
புதுடெல்லி: பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்ள தமிழ்நாட்டு எம்.பி.க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் காலியாகும் இந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. ஜூலை 1 முதல் 8 வரை வேட்புமனு தாக்கல். ஜூலை 9-ம் தேதி வேட்புமனு பரிசீலனை. வேட்புமனுக்களை திரும்பப்பெற ஜூலை 11-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு எம்.பி.யை தேர்வுசெய்ய 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். தற்போது சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் தி.மு.க.வை சேர்ந்த 3 எம்.பி.க்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த 3 எம்.பி.க்களும் மாநிலங்களவை உறுப்பினர்களாகும் வாய்ப்புள்ளது. தமிழக சட்டசபையில் ஜூலை 18-ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்து அன்று மாலை சுமார் 5 மணியளவில் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: