ஞாயிறு, 3 மார்ச், 2019

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் உண்டா, இல்லையா?

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் உண்டா, இல்லையா? மின்னம்பலம் : திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பற்றிய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக இன்று (மார்ச் 3) விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், இன்று கட்சி வேலைகள் இருப்பதாகச் சொல்லி அறிவாலயத்துக்கு திருமாவளவன் உள்ளிட்ட குழுவினர் செல்லவில்லை.
இதனால் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் உண்டா இல்லையா என்ற கேள்வி மீண்டும் அரசியல் வட்டாரங்களை அதிர்வு படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி அறிவாலயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் –திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கூட்டணி பற்றி முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் சுமார் ஒருவாரம் ஆகியும் விடுதலைச் சிறுத்தைகளை அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்கவில்லை.
இடைப்பட்ட நாட்களில் திமுக கூட்டணிக்கு தேமுதிக வருமா இல்லையா என்பதிலேயே பரபரப்பாகக் கழிந்தன. தேமுதிக ஒருவேளை கூட்டணிக்கு வந்துவிட்டால் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகளுக்கு சீட்டுகளை அதன் பின் நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று கருதியே திமுக அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தியது.

இந்நிலையில் நேற்று (மார்ச் 2) இரவு அறிவாலயத்தில் இருந்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு, ‘நாளை மார்ச் 3 ஆம் தேதி பகலில் அறிவாலயத்துக்கு தொகுதிப் பங்கீடு குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள்’ என்று அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் இன்று திருமாவளவன் அறிவாலயத்துக்கு செல்லவில்லை. மாறாக விடுதலைச் சிறுத்தைகளின் இணைய தளங்கள் துவக்க விழாவில் இன்று கலந்துகொண்டார்.
இதுபற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்தது. ஆனால் விடுதலைச் சிறுத்தைகளின் இணைய தள துவக்க விழாவை ஏற்கனவே நாங்கள் ஒருங்கிணைத்திருந்தோம். அடுத்தடுத்து நான் கலந்துகொள்ள நிகழ்ச்சிகள் இருந்ததால் இன்று பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. நாளை திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று கூறினார் திருமாவளவன்.

தேமுதிக முடிவெடுக்க யோசிப்பதால்தான் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தாமதமாகிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
“எனக்கு அது தெரியாது. தேமுதிகவுடன் திமுக பேசிவருகிறதா என்பதை திமுகதான் சொல்ல வேண்டும். எங்கள் பேச்சுவார்த்தை சுமுகமாக செல்கிறது” என்று கூறினார் திருமாவளவன்.
திருமாவளவன் இப்படிச் சொன்னாலும் திமுகவின் அழைப்பை இன்று மறுத்து, நாளை வருகிறேன் என்று அவர் சொன்னதற்கு வருத்தத்தில் இருப்பதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து திமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய இரு தரப்பிலும் பேசியபோது, “ஆரம்பத்திலேயே பாமகவை கூட்டணிக்கு சேர்க்க திமுக திரைமறைவுப் பேச்சுவார்த்தை நடத்தியபோதே திருமாவளவன் திமுக அணியில் தனக்கு நிலையற்ற தன்மையை உணர்ந்தார். பிப்ரவரி 19 ஆம் தேதி ஒருவழியாக அதிமுகவோடு பாமக கூட்டணி சேர்ந்த பின்னால், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்வது உறுதியானது.
ஆனால் அதன் பின்னரும் திமுகவுக்குள் இருக்கும் குறிப்பிட்ட சில மாவட்டச் செயலாளர்கள், ‘பாமக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. விடுதலைச் சிறுத்தைகள் நம் கூட்டணிக்கு வேண்டாம்’ என்று சொல்லி சில மாவட்டங்களில் இருந்து கிடைத்த தகவல்களை ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து திமுக கூட்டணியில் சிறுத்தைகள் இருக்கலாமா வேண்டாமா என்ற விவாதம் மீண்டும் திமுக தலைமையில் நடந்திருக்கிறது. தன்னை முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்த பின்னும் இப்படி சில விவாதங்கள் திமுகவில் நடப்பது திருமாவளவனுக்கும் தெரிந்து அவர் மனதளவில் காயப்பட்டிருக்கிறார்.
இதுபற்றி ஸ்டாலினுக்கும் தகவல் போக, ஸ்டாலினோ திமுக கூட்டணியில் திருமாவளவன் தொடரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். கடந்த ஒருவார காலமாக தேமுதிகவுக்காக திமுக காத்திருப்பதால், இப்போதைக்கு நம்மை எல்லாம் அழைக்கமாட்டார்கள் என்று கணித்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தேதி கொடுத்துவிட்டார் திருமாவளவன். இன்று கூட திமுக அழைத்தவுடனே அவரால் அறிவாலயம் போயிருக்க முடியும். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை திமுக நடத்தும் விதம் பற்றிய தனது வருத்தத்தைப் பதிவு செய்யும் விதமாகவே இன்று பங்கேற்க இயலாது என்று சொல்லி நாளை செல்கிறார் திருமாவளவன்” என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: