செவ்வாய், 5 மார்ச், 2019

பேரறிவாளன், நளினி... 7 பேரும் மார்ச் 10ம் தேதி விடுதலை... ? உச்சக்கட்ட பரபரப்பு ..

மத்திய அரசின் முட்டுக்கட்டை
tamil.oneindia.com - sherlinsekar-lekhaka.: சென்னை: சிறையில் இருக்கும் 7 தமிழர்களையும் விடுவிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் வருகிற 10 ம் தேதி அவர்கள் விடுதலையாக வாய்ப்புள்ளதாகவும் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில் அவர்களின் தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.
இப்படியாக நீண்டு கொண்டிருந்த வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் நீண்ட சட்டப் போராட்டத்தின் விளைவாக இவர்களது விடுதலை குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூற அப்போதைய முதலைமைச்சர் ஜெயலலிதா இவர்களை விடுவிக்க முடிவு செய்ததோடு அமைச்சரவையின் முடிவை மத்திய அரசுக்கு அனுப்பியும் வைத்தார்.
ஆனால் மத்திய அரசு இவர்களின் விடுதலைக்கு நீதிமன்றத்தில் தடை கோர மீண்டும் நீதிமன்றத்தின் கைகளுக்கே சென்றது இந்த விவகாரம். 4 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் தற்போது உச்ச நீதிமன்றம் மீண்டும் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு செய்து அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி தன்னிடம் இருந்த பந்தை ஆளுநரின் பக்கம் தள்ளிவிட்டது.

7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநர் பன்வாரி லால் புரோகிதத்துக்கு அனுப்பப் பட்டது.
அன்றைய தேதியில் இருந்து இன்று வரை அது கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அவர்களை விடுவிக்கக் கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

சிறையில் இருந்தவாறே நளினியும் முருகனும் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதற்கிடையே பேரறிவாளன் தங்களை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம் இயற்றியும் ஏன் தங்களை இன்னும் விடுவிக்கவில்லை? தாமதத்திற்கு காரணம் என்ன என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்த கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.

இந்த நிலையில்தான் தமிழகத்தில் தங்களின் அரசியல் செல்வாக்கை உயர்த்தும் பொருட்டும் வரும் தேர்தலில் தமிழக மக்களின் பெரும் ஆதரவை பெறும் வகையிலும் வரும் 10ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் நமக்கு கிடைத்தன. இதன் அடிப்படையில் வழக்கறிஞர் புகழேந்தியிடம் ஒன் இந்தியா தமிழுக்காக பேசியபோது 10ம் தேதிக்குள் அவர்கள் அனைவரையும் விடுவிப்பார்கள் என்று முக்கியமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

இந்த தகவல் மத்தியிலிருந்து வந்த தகவல் என்று நம்மிடம் கூறியவர் இப்போதைக்கு இதற்கு மேல் எதுவும் கூற முடியாது, மிக முக்கியமான நபரிடம் இருந்து வந்த தகவல் இது என்பதால் இதற்கு மேல் உள்ள தகவல்களை கூற இயலவில்லை. 7 பேரையும் விடுவிக்க கோரி மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவதாக இருந்தோம். இந்த நிலையில் மிக முக்கியமான நபரிடம் இருந்து 7 பேரும் வரும் 10 ம் தேதிக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது அதனால் போராட்டத்தை கைவிட்டுவிட்டோம் என்று நம்மிடம் தெரிவித்தார்

எதுவாக இருந்தாலும் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை கழித்தவர்களுக்கு விடுதலை என்பதை தமிழகமே எதிர்பார்க்கிறது என்பதுதான் நிஜம்

கருத்துகள் இல்லை: