வெள்ளி, 8 மார்ச், 2019

சாரு நிவேதிதா .. எழுத்தாளனுக்கு வருமானமும் இல்லை.. மரியாதையும் இல்லை ?

Charu Nivedita : தமிழ்ச் சமூகத்துக்கும் எழுத்துக்கும் என்றைக்குமே
தகராறுதான். சங்க காலத்தில் புலவர்கள் மன்னர்களிடம் பிச்சை எடுத்த கதையையெல்லாம் பார்க்கும்போது கொஞ்சம் தெம்பாகத்தான் இருக்கிறது – சரி, உள்ளதுதானே என்று. ஆனால் என் நண்பர்களின் உதவியால் கடந்த பத்து ஆண்டுகளாக நான் அந்தப் பிரச்சினை இல்லாமல் இருந்தேன். இப்போது ஜனவரி முதல் தேதியிலிருந்து பண வரத்து நின்று போனதால் யோசித்துக் கொண்டிருக்கிறேன். பாரதி புதுச்சேரியில் வாழ்ந்த போது பல மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை. வீட்டு ஓனர் செட்டியார் வந்து பயந்து பயந்து கேட்கிறார். ”அடப் போம் ஐயா, இந்தியாவுக்கு சீக்கிரமே சுதந்திரம் கிடைத்து விடும்; தருகிறேன்” என்கிறார் பாரதி. செட்டியாரும் பின்னாலேயே நகர்ந்து வெளியேறுகிறார். காந்தியின் எதிரே கால் மேல் கால் போட்டு அமர்ந்து மிஸ்டர் காந்தி என்று அழைத்து உங்கள் போராட்டத்தை ஆசீர்வதிக்கிறேன் என்று சொன்னவர் பாரதி. சொல்ல முடிந்தது என்பதுதான் விசேஷம். இந்தக் காலத்தில் கமலை கடவுள் என்று சொல்லிக் கூனிக் குறுகி சலாம் போட்டால் எனக்குப் பணக் கவலை இருக்காது. இந்தக் காலத்திலும் பாரதி போல் வாழ வேண்டும் என்றால் கஷ்டம்தான். பாரதி காலத்தில் கவிஞனை வறுமையும் தரித்திரமும் மட்டுமே துரத்தியது. ஆனால் இப்போது எழுத்தாளன் என்பதற்கான மரியாதையும் இல்லாத காலம்.
இப்படி எழுதுவது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஏனென்றால், என் வாசகர்கள் என்னைக் கொண்டாடுகிறார்கள். நான் மட்டும் அல்ல; எல்லா எழுத்தாளர்களுமே அப்படித்தான். ஆனால் புத்தகம் என்னவோ நூறு பிரதிதானே விற்கிறது?

ஆனால் நான் ஒரு நாவல் எழுதினால் உடனடியாக 2000 பிரதிகள் விற்கும் சாத்தியம் இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் 20000 பிரதிகள் விற்றால் மட்டுமே எழுத்தாளன் சங்ககாலப் புலவனைப் போல் பிச்சை எடுக்காமல் அல்லது கமல், ஷங்கர் போன்றவர்களின் முன்னே கூனிக் குறுகாமல் வாழ முடியும். சினிமாவுக்கு வசனம் எழுதினால் ஷங்கரை லியனார்டோ டாவின்ஸி என்று புகழ வேண்டியிருக்கிறது ஐயா? என்ன செய்ய?
ஜனவரியிலிருந்து என் சேமிப்பைப் கொண்டு வீட்டு வாடகை லொட்டு லொசுக்கு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டேன். அதிக நாள் தாங்காது. திடீரென்று குடிசைக்கும் போக முடியாது. Zoltan Fabriயின் Fifth Seal என்ற படம் பார்த்திருக்கிறீர்களா? ஹங்கெரியில் நாஜி ராணுவம் நுழைந்து விடுகிறது. நாஜி ஆக்ரமிப்புக்கு எதிரான மூன்று நண்பர்களை நாஜிகள் கைது செய்து அழைத்துச் சென்று சித்ரவதை செய்கிறார்கள். மூவரில் ஒருவன் ஆக்டிவிஸ்ட். மற்ற இருவரும் ஆதரவாளர்கள் மட்டுமே. ஆக்டிவிஸ்டைக் குற்றுயிரும் குலை உயிருமாக அடித்துக் கட்டிப் போட்டு ராணுவத் தலைவன் மற்ற இருவரிடமும் சொல்கிறான். ”இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் நண்பன் சாகப் போகிறான். அவன் கன்னத்தில் அறைந்தால் நீங்கள் நல்ல குடிமகன்கள் என்றும் அறையவில்லை என்றால் நீங்களும் கலகக்காரர்கள் என்றும் அர்த்தமாகும். நீங்களும் அவனைப் போல் கொல்லப்படுவீர்கள்” என்று சொல்கிறான். ஒருவனால் அறைய முடியவில்லை. மற்றவன் தன் நண்பனை அறைந்து விட்டு நகருக்குள் செல்கிறான். காரணம், அவன் அனாதையான யூதக் குழந்தைகளை எடுத்து வளர்க்கிறான். அந்த அனாதை இல்லக் காப்பகக்காரனைப் போன்றதுதான் என் நிலையும். என்னை நம்பி அரை டஜன் பூனைகளும் ஒரு நாயும் இருக்கின்றன. திடீரென்று குடிசைக்குப் போக முடியாது. ஆனாலும் செலவுகளைக் குறைத்துக் கொண்டிருக்கிறேன். நாகேஸ்வரராவ் பூங்காவுக்கு ஆட்டோவில் செல்லாமல் நடந்தே செல்கிறேன். ஸ்விக்கியில் ஆர்டர் பண்ணுவதில்லை. அவந்திகா சமைக்காத போது நான் சமைத்தே சாப்பிட்டுக் கொள்கிறேன். காலை உணவும் வெளியில் சாப்பிடுவதில்லை. எந்த அளவுக்கு செலவைக் குறைத்து வாழ்கிறேன் என்பதற்கு ஒரு உதாரணம் இது:
நேற்று இரவு ஒன்பது மணிக்கு சிஸ்ஸிக்கு உணவு தருவதற்காக எங்கள் அபார்ட்மெண்ட்டுக்கு வெளியே போனாள் அவந்திகா. எப்போதும் நானும் துணைக்குக் கூடப் போவேன். நேற்று ப்ரூஃப் ரீடிங் வேலை அதிகம் இருந்ததாலும் கொஞ்சம் களைப்பாக இருந்ததாலும் நான் போகவில்லை. அதனால் பைக்கில் வரும் செயின் திருடர்களுக்குப் பயந்து கழுத்தைச் சுற்றி ஒரு பெரிய துணியைச் சுற்றிக் கொண்டு பயங்கரவாதியைப் போல் கிளம்பினாள் அவந்திகா. யாரும் வசிக்காத எதிர்வீட்டில் தாய்ப்பூனையால் கைவிடப்பட்ட ஒரு பூனைக்குட்டி தஞ்சம் புகுந்திருக்கிறது. அதன் பெயர் சிஸ்ஸி. வெளியே சுதந்திரமாக நடமாடினால் நாய்கள் கடித்து விடும்; வாகனங்கள் அடித்து விடும் என்று ஆள் இல்லாத அந்த வீட்டிலேயே வாழ்ந்து வருகிறது சிஸ்ஸி. வயது ஒரு மாதம் இருக்கும். அதற்கு இரண்டு வேளை உணவிடுகிறோம் நானும் அவந்திகாவும். போனவள் கையில் வேறொரு அழகான பூனைக்குட்டியோடு வந்தாள். ஒரு மாதக் குட்டி. தாய்ப்பூனையால் கைவிடப்பட்டது. ஐயோ என்று பதறி விட்டேன். உடனடியாக என் நினைவுக்கு வந்தது பணம்தான். பணம் இல்லாத இந்த நேரத்தில் இன்னொரு பூனைக்கும் உணவு தர முடியுமா? தாங்குமா? என்ன விஷயம் என்றால், எங்கள் குடியிருப்பின் வளாகத்தில் ஒரு காரின் கீழே பதுங்கிக் கொண்டு கதறிக் கொண்டிருந்ததாம். வெளியே போனால் நாய்கள் குதறி விடும். உள்ளேயும் பாதுகாப்பு இல்லை. கெய்ரோவும் மற்ற பூனைகளும் கொன்று விடும். வீட்டுக்கு எடுத்து வந்து பால் கொடுத்து, பிறகு கடற்கரைப் பக்கம் கொண்டு போய் அங்கே கடலிலிருந்து அப்போது இறங்கி வலையிலிருந்து மீன்களை எடுத்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் விஷயத்தைச் சொல்லிக் கொடுத்தோம். அவர்கள் கொடுத்த சிறிய அளவிலான பச்சை மீன்களை ஆசை ஆசையாகச் சாப்பிட்டது. அவர்களிடமே கொடுத்து விட்டுத் திரும்பினோம். இரவு பதினொன்று ஆகி விட்டது. பணம் இருந்திருந்தால் அதுவும் எங்கள் பூனை ஜமாவோடு சேர்ந்திருக்கும்.
பணத்துக்கு ஏற்பாடு செய்யலாம் என்றுதான் சாருஆன்லைனைப் படிப்பவர்கள் ஏதேனும் அவர்களின் விருப்பப்படி கட்டணம் செலுத்தலாம் என்று எழுதி வைத்தேன். செம ரெஸ்பான்ஸ். இருநூறு இருநூறாக அனுப்பினார்கள். திட்டம் வெற்றிதான். ஏனென்றால், மாதக் கட்டணம் இருநூறு என்று 200 பேர் அனுப்பினால் 40000. போதும். எதேஷ்டம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஐந்து பேர்தான் அனுப்பினார்கள். யார் அவர்கள் என்று புலன் விசாரணை செய்த போது இருவர் ஹவுஸ்வைஃப் என்று மூவர் மாணவர்கள் என்றும் தெரிந்தது. அற்புதம்.
இந்த நிலையில்தான் மாமல்லன் உதவிக்கு வந்தார். அவர் என்ன அம்பானியா? பண உதவி அல்ல. மீன் இல்லை; மீன்வலைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். இன்னும் புத்தகம் ஆகாத உன்னுடைய ஏராளமான எழுத்துக்களை கிண்டிலில் போடலாம் என்றார். முதல் மூன்று புத்தகங்களுக்கு அவரே தொழில்நுட்ப வேலையெல்லாம் செய்து அவரே கிண்டிலில் பப்ளிஷும் செய்தார். இனி நண்பர்கள் பிடித்துக் கொள்வார்கள். 25 ஆண்டுகளுக்குப் பிறகு நான் எழுதிய மயானக் கொல்லை என்ற நாடகமும் கிண்டில் புத்தகமாக வருகிறது. இந்த மூன்றையுமே ஒவ்வொரு மணி நேரத்தில் செய்து முடித்தார். எதற்குச் சொல்கிறேன் என்றால், சிலர் ரெண்டு நாள் ஆச்சு மூணு நாள் ஆச்சு என்று மூக்கால் அழுகிறார்கள். தொழில்நுட்பம் தெரியவில்லை.
https://www.amazon.in/dp/B07PGQNMCH
https://www.amazon.in/dp/B07PHWXBX3
மயானக் கொல்லை லிங்க் விரைவில் தருகிறேன்.
மாமல்லனுக்கு நன்றி. கிண்டிலில் வாங்கிப் படியுங்கள். இந்த இணையதளத்துக்கும் கட்டணம் செலுத்துங்கள். திரும்பவும் சொல்கிறேன். கட்டணம் செலுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை; அது ஒரு பெரிய விஷயம் அல்ல. காரணம், பணம் எப்போதுமே என் சிந்தனைக்கு அப்பாற்பட்டது.
***
இனி சாருஆன்லைன் இணைய தளத்தில் வாரம் இரண்டு கட்டுரைகள் எழுதுவேன். சினிமா, இசை, அரசியல், இலக்கியம். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்த. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.
ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
என் மின்னஞ்சல் முகவரி: charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006

கருத்துகள் இல்லை: