புதன், 6 மார்ச், 2019

40 தொகுதிகளிலும் வீறுகொண்டு பணியாற்றுவோம்: மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்!

40 தொகுதிகளிலும் வீறுகொண்டு பணியாற்றுவோம்: மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்!மின்னம்பலம் : வரும் மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற வீறுகொண்டு பணியாற்றுவோம் என்று மதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு 1+1(மாநிலங்களவை உறுப்பினர்) தொகுதி வழங்கப்பட்டு நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்த நிலையில் மதிமுகவின் 27-ஆவது பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமையில் இன்று (மார்ச் 6) சென்னை அண்ணா நகரிலுள்ள விஜயஸ்ரீ மஹாலில் கூடியது. முதலில் மதிமுக தலைவர்கள் எழுதிய நூல்களின் வெளியிட்டு விழா நடைபெற்றது. அதன்பின்பு 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதல் தீர்மானத்தில், “இந்துத்துவ சனாதனச் சக்திகளை, மக்களவைத் தேர்தல் களத்தில் வீழ்த்தி புறமுதுகிட்டு ஓடச் செய்ய வேண்டிய மாபெரும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்காக, திராவிட இயக்கங்களின் ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையுடன் திராவிட முன்னேற்றக் கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் கரம் கோர்த்துள்ளன.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் 21 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அணி வெற்றி வாகை சூடுவதற்கு வீறுகொண்டு பணியாற்றுவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது தீர்மானத்தில், “பா.ஜ.க. ஆட்சியைத் தூக்கி எறியவும், மத்திய அரசுக்கு அடிமைச் சேவகம் புரியும் அ.இ.அ.தி.மு.க. அரசை வீழ்த்தவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான வெற்றிக் கூட்டணியை ஆதரித்து, மகத்தான வரலாற்று மாற்றத்திற்கு வித்திடும் வகையில் வாக்கு அளிக்க வேண்டும்” என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், “எழுவர் விடுதலையில் ஆறு மாதங்களாக இழுத்தடிக்கின்ற, அரசியல் சட்டத்தை மதிக்காமல், தான்தோன்றித் தனமாகச் செயல்பட்டு வருகின்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு இப்பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது; ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றது” என்று மூன்றாவது தீர்மானமும், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 22 ஆண்டுகள் போராடி தற்போது ஆலைக்கு தடை ஆணை பெற்ற வைகோவுக்கு பாராட்டு தெரிவித்து நான்காவது தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக ஒரு தொகுதி ஒதுக்கியுள்ள நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுகவிடம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பொதுக் குழுவில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: