வியாழன், 4 ஜனவரி, 2018

நீரிழிவு நோயாளிகள் செலவு: கனிமொழி கேள்வி!

மின்னம்பலம் :நீரிழிவு நோயாளிகள் சிகிச்சைக்காகத் தங்கள் வருமானத்தில் 25 சதவிகிதம் செலவழிப்பது குறித்து மாநிலங்கவையில் திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பினார்.
சமீபத்தில் லேடி ஹார்திங் கல்லூரி வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள நீரிழிவு நோயாளிகள், நீரிழிவுநோய் சிகிச்சைக்காக ஆண்டுதோறும் ரூ. 8,958 செலவிடுவதாக ஆய்வறிக்கை வெளியிட்டது. இது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மாநிலங்களவையில் எழுத்துபூர்வமான கேள்வி எழுப்பியுள்ளார்.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்கள், தங்கள் மொத்த வருமானத்தில் 25 சதவிகிதத்தை நீரிழிவு நோய் சிகிச்சைக்காக செலவிடுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இதற்கு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல், “லேடி ஹார்திங் கல்லூரி சில அமைப்புகளோடு சேர்ந்து இது குறித்த ஒரு ஆய்வை நடத்தியுள்ளது மக்களின் சுகாதாரம் மாநிலங்களின் பட்டியல் அடிப்படையில் வருவதால், இத்தகைய செலவினங்களை க் குறைக்கும் பொறுப்பு மாநிலங்களையே சார்ந்துள்ளது. எனினும் இந்தச் செலவினத்தைக் குறைக்கும் பொருட்டு, மாநிலங்களுக்குப் போதுமான நிதியை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது” என்று பதிலளித்துள்ளார்.
மத்திய அரசு, தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய், வாத நோய் ஆகியவற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவி செய்துவருவதாகவும், ஆரம்ப காலத்தில் நோயைக் கண்டுபிடிப்பது, சிகிச்சை முறைகளுக்கு மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் சமூக மருத்துவ மையங்கள் மூலமாக உதவிகள் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாகாவும் அமைச்சர் தெரிவித்தார்.
2017-18ஆம் நிதியாண்டில் மட்டும் இது போன்ற நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக, நாட்டின் 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக, நோயாளிகள் மற்றும் அவர் குடும்பத்தினர் நீரிழிவுநோய் சிகிச்சைக்காக செலவிடும் தொகைகளைக் குறைக்க முடியும்.
மாநில அரசுகள், நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக, ஸ்வஸ்த்யா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஆறு புதிய அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
ஜன் அவுஷாதி திட்டத்தின் கீழ் மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், இலவச மருந்துகளும் , இலவச நோய் கண்டறியும் கருவிகளும் வழங்கப்பட்டுவருகின்றன. மலிவு விலையில் மருந்துகளை வழங்க, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேரடியான விற்பனை நிலையங்களைத் தொடங்கியுள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: