புதன், 2 ஆகஸ்ட், 2017

அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியும் முடக்கம்?

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், குவாரி உள்ளிட்ட சொத்துகளை வருமானவரித்துறை ஆகஸ்ட் 1 ஆம் தேதி இன்று அதிரடியாக முடக்கியுள்ளது.
சசிகலா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்காக பணப்பட்டுவாடா செய்யும் பொறுப்பை கவனித்து வந்தவர் என்றும், வாக்காளர்களுக்கு ரூ4,000 பணம் லஞ்சமாகக் கொடுத்தார் என்றும் இவர் மீது புகார்கள் கிளம்பின. இதையடுத்து விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சோதனையின் போது ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் சிக்கின. இதனைத் தொடர்ந்து விஜயபாஸ்கர், அவரது மனைவி, மற்றும் தந்தை ஆகியோரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட நிலப் பதிவாளருக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், திருவேங்கைவாசல் குவாரி உள்ளிட்ட சொத்துகள் முடக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஜயபாஸ்கர் சொத்துகளை முடக்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அமைச்சர் பதவியில் இருக்கும்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அவருடைய பதவியும் பறிபோகுமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் தற்போது எழுந்துள்ளது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: