திங்கள், 31 ஜூலை, 2017

ஆண்கள் விந்தணு எண்ணிக்கையில் வீழ்ச்சி!

வட அமெரிக்கா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த ஆண்களின் விந்தணு எண்ணிக்கை கடந்த 1973 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 50 முதல் 60 சதவிகிதம் வரை குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஜெருசலேமைச் சேர்ந்த ஹிப்ரூ பல்கலைக்கழகம் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளது. அதில், 42,935 ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் ஆச்சர்யமளிக்கும் தகவலும் ஒன்றுண்டு. ஆம்... ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆண்கள் விந்தணு எண்ணிக்கையில் குறைவு எதுவும் ஏற்படவில்லை. எனினும், இந்த ஆய்வு முடிவுகள் இப்பகுதியில் குறிப்பிட்ட தரவுகளைக் கொண்டே கணக்கிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த ஆய்வின் முடிவு என்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதே. ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா என்று கடந்த பல ஆண்டுகளாகவே விஞ்ஞானிகள் இடையே விவாதம் நடந்து வருகிறது. ஆனால், இந்த ஆய்வின் தரம் என்பது முற்றிலும் வேறுபட்டது. முந்தைய ஆய்வுகளில் சிக்கலை ஏற்படுத்திய கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் முறையில் திட்டமிட்டபடி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் தரமானது என்றும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக உள்ளதாகவும் பெரும்பாலான விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக ஆண் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டு வருகிறது. விரை விதை புற்றுநோய் போன்றவை அதிகரித்துள்ளது இதற்குச் சிறந்த உதாரணம். இதன் காரணமாக ஆண் இனப்பெருக்க ஆரோக்கியம் என்பது கடும் தாக்குதலில் உள்ளதுடன் தொடர்ந்து குறைந்து வருகிறது. இது தொடர்ந்தால் 2060ஆம் ஆண்டுவாக்கில் ஆண்களுக்கு விந்தணு என்பது இல்லாமலேயே போய்விடும் என்று எச்சரிக்கின்றனர்.
சுற்றுச்சூழல் மாறுபாடே ஆண்கள் விந்தணு குறைபாட்டுக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது. மாசு காரணமாக ஆண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பருமன் மற்றும் விந்தணு குறைபாட்டுக்கு இடையே தொடர்பு உள்ளது. புகை பிடிப்பதை நிறுத்துவது மூலம் விந்தணு குறைபாட்டை ஓரளவு சரிசெய்யலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் கடைப்பிடிப்பதன் மூலம் இந்தப் பிரச்னையின் பாதிப்பைக் குறைக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: