ஞாயிறு, 30 ஜூலை, 2017

மெரீனாவில் போலீஸ் குவிப்பு!

மெரினாவில் போலீஸ் குவிப்பு!
மெரினாவில் மீண்டும் இளைஞர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவிய செய்தியை அடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளம் மூலம் இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் மெரினாவில் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததை நம்மால் மறக்க முடியாது. அதைத்தொடர்ந்து மெரினாவில் போராட்டம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. பின்னர் அடிக்கடி வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாகச் செய்தி வெளியாகி காவல்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராகப் போராடும் மக்களுக்கும், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தித் தொடர் போராட்டம் நடத்தும் மக்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக வாட்ஸ்அப்பில் செய்தி பரவியுள்ளது. இந்தச் செய்தியை அடுத்து நேற்று ஜூலை 29ஆம் தேதி மெரினாவில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். கலங்கரை விளக்கம் முதல் நேப்பியார் பாலம் வரை போலீஸார் நிறுத்தப்பட்டனர். மெரினாவுக்கு இருசக்கர வாகனங்களில் வரும் இளைஞர்களை நிறுத்தி, அவர்களது கைப்பேசிகளில் போராட்டம் குறித்து பகிரப்பட்ட செய்திகள் உள்ளனவா என ஆய்வு செய்தனர்.
போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என மீண்டும் செய்தி வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்தும் மெரினாவில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை: