ஞாயிறு, 28 மே, 2017

கிருஷ்ணா டாவின்சி... உண்மைக்காக ஊடகத்தைப் பயன்படுத்திய நாயகன்

கிருஷ்ணா டாவின்சி விருதுகள்
- உண்மைக்காகப் போராடும் ஊடகக்காரர்களுக்கான அங்கீகாரம்!
ஊடகங்களின் நேர்மைக் குறைவு பலருக்குத் தெரியாது. வெளிப்படையாகத் தெரியாத வகையில் ஊழல் செய்வதில் அரசியல்வாதிகளைக் காட்டிலும் ஊடக அதிகாரத்திலிருப்போர் சிறந்தவர்கள். பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியவன் என்பதாலும் இப்போதும் பல்வேறு ஊடகக்காரர்களின் நெருங்கிய தோழன் என்பதாலும் என்னால் இக்கருத்துகளை அறுதியிட்டுக் கூற முடியும்.
கிருஷ்ணா டாவின்சி எனும் மிகச் சிறந்த ஊடகக்காரர் இயற்கை எய்தி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் குமுதம் இதழின் நற்காலத்தை வடிவமைத்தவர்களில் ஒருவர். குமுதம் வழியாக சமூகத்திற்கு நற்செய்திகளை உரைத்தவர்கள் சிலர். அவர்களில் கிருஷ்ணா டாவின்சிக்கு முதலிடம் உண்டு. நான் அவருடன் பணியாற்றியவன், அவர் துணையுடன் பல முக்கியமான பணிகளை குமுதம் இதழில் செய்தவன்.
கிருஷ்ணாவின் புன்னகை, மிடுக்கான தோற்றம், அசைந்துகொடுக்காத பிடிவாதம் ஆகியவை இளம் ஊடகக்காரர்களுக்குத் தேவையான முன்மாதிரி இயல்புகள். ஊழியர்களுக்கு முறையான ஊதியம் பெற்றுத் தருவதில் அவர் காட்டிய அக்கறையை இப்போது நினைத்தாலும் நன்றிப் பெருக்கு ஊற்றெடுக்கிறது. பெண்கள் ஊடகத் துறையில் நன்கு செயல்பட வேண்டும் என்ற விருப்பம் கிருஷ்ணாவிற்கு அதிகம். பல இளம் பெண்களை ஊடகக்காரர்களாக வளர்த்தெடுத்தவர் அவர்.
கண்ணியத்துடன் பெண்களை நடத்துவதில் கூடுதல் அக்கறை காட்டுவார். நிறுவனத்திற்குள் பெண்களுக்கு ஏற்படும் சில சங்கடங்களைக்கூட தாமாக முன்வந்து சரி செய்வார்.
அரசியல்வாதிகள் பலர் அவருடன் நெருக்கம் காட்ட முனைந்தனர். கிருஷ்ணா அவர்கள் அனைவரையும் புன்சிரிப்புடன் விலக்கி வைப்பார். அரசியல் ஊழல்களை, சமூக வன்முறைகளை, அநீதிகளை வெளிப்படுத்தும் எந்தக் கட்டுரையையும் அவர் போற்றிப் பாதுகாத்தார். பிராய்லர் கோழிக் கறியின் ஆபத்துகளைப் பற்றி நான் எழுதிய கட்டுரை அவர் மேசைக்குச் சென்றது. அதைப் படித்த பின்னர் அந்த இதழின் அட்டைப் படக் கட்டுரையாக வெளியிட்டார். அக்கட்டுரைக்கு அவர் வைத்த தலைப்பு மிகத் துணிச்சலானது. ‘சிக்கன் எமன்’ என்று தலைப்பிட்டு மண்டையோட்டுக் குறியுடன் அட்டைப் படத்தை வடிவமைத்தார் அவர்.
இக்கட்டுரை வெளியானதும் பிராய்லர் பண்ணை உரிமையாளர்களிடமிருந்து எனக்குக் கொலை மிரட்டல்கள் வரத் துவங்கின. சென்னையில் நான் தனியாக வாழ்ந்தவன். அந்த நாட்களில் கிருஷ்ணா என்னைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்துக் கொண்டார்.
கல்பாக்கம் அணு உலைக்கு எதிரான எனது கட்டுரைக்கு அவர் சூட்டிய தலைப்பு, ‘கொல்பாக்கம்’ என்பது. பணக்காரர்கள் பலர் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அவற்றைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது இப்போது பேசப்படுகிறது. விஜய் மல்லையா என்ற நபரை எல்லா ஊடகங்களும் அம்பலப்படுத்துகின்றன. 2001 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ‘ஒரு லட்சம் கோடி ரூபாய் மோசடி’ எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரையை கிருஷ்ணா அட்டைப் படக் கட்டுரையாக வெளியிடச் செய்தார்.
அக்கட்டுரையில், அப்போதைய ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி தலைவர்கள் பெயர்களும் அவர்கள் வாங்கிய கடன் தொகைகளும் வெளியிடப்பட்டிருந்தன. அந்த அரசியல் பிரமுகர்கள் இப்போதும் சமூகத்தின் நன்மதிப்புடன் வலம் வருபவர்கள்தான். இவர்கள் எல்லோரும் பல நூறு கோடிகள் கடன் வாங்கியதும் உங்களுக்குத் தெரியாது, அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்பதும் இப்போது உங்களுக்குத் தெரியாது.
இந்தக் கட்டுரையால் எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் அனைத்திற்கும் கிருஷ்ணாவின் அர்த்தம் செறிந்த புன்னகையே பதிலானது. நான் அவரது செல்லப் பிள்ளை என்பதால் அவரது புன்னகையும் அவருடனான பெட்டிக் கடை தருணங்களுமே எனக்குப்போதுமானவையாக இருந்தன.
சென்னை சேலையூர் அருகே இருந்த தி.மு.க பிரமுகர் ஒருவர், அவர் பகுதி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ரேசன் கடையை மறுத்துக் கொண்டிருந்தார். நானும் புகைப்படக்காரரும் அப்பகுதிக்குச் சென்று செய்திகளைச் சேகரித்து படங்களுடன் பதிவு செய்தோம். குமுதம் வெளியானதும், அந்த பிரமுகர் ஏராளமான ஆட்களுடன் அலுவலகத்திற்கு வந்துவிட்டார். அதற்கு முதல் நாள் மாலை அவர் என்னுடன் தொலைபேசியில் பேசி, ‘உன்னை முடித்து விடுவேன்’ என்று கடுமையாக எச்சரித்திருந்தார்.
அலுவலகத்தின் வரவேற்பறையில் அவர் ஆட்களுடன் இருக்கும்போது, அவரைச் சந்தித்து சமாதானம் செய்யும்படி என்னை அனுப்பினார் துணை ஆசிரியர்களில் ஒருவர். என்னை அடையாளம் கண்டுகொண்டால் நிலைமை சிக்காலாகும் என்பதால் நான் தயங்கிக் கொண்டிருந்தேன். கிருஷ்ணா வழக்கமான புன்னகையுடன், ‘செந்தமிழன் வெளில போயிருக்காருன்னு…நீங்களே போய் சொல்லுங்க செந்தமிழன்’ என்றார். நான் வரவேற்பறைக்குச் சென்று கிருஷ்ணா கூறியது போலப் பேசினேன். செந்தமிழன் எனும் ஆள் மீது அவர்கள் கடும்கோபத்தில் இருந்ததை நன்றாக உணர முடிந்தது.
கிருஷ்ணா டாவின்சியின் அரவணைப்பில் இருக்கும் செய்தியாளர்கள் எதற்கும் எவருக்கும் அஞ்சத் தேவையில்லை. கிருஷ்ணா உண்மைக்காக ஊடகத்தைப் பயன்படுத்திய நாயகன், தன்னை நம்பி வந்த செய்தியாளர்களை அரவணைக்கும் தாய், எந்த பேதமும் காணாமல் சமத்துவமாக நடத்தும் தோழன், ஊடகக்காரர்களுக்கு நல்ல வாழ்க்கை நிலை வேண்டும் என்பதை விரும்பி, தன்னாலியன்றவற்றைச் செய்து தந்த தகப்பன்.
எனக்கும் காந்திமதிக்கும் திருமணம் செய்து வைப்பதில் முனைப்பு காட்டியவரும் அவர்தான். சொந்த வாழ்க்கையில் அவருக்கும் எனக்குமான உறவு நிலைகளில் எவ்வளவோ இன்பமான தருணங்கள் உண்டு. நாங்கள் ஒன்றாக இருந்த எல்லா நாட்களிலும் வாழ்க்கையைக் கொண்டாடினோம்.
‘நான் ஓர் ஊடகக்காரன். எனக்கு எவரைக் கண்டும் அச்சமில்லை. நான் உண்மையைத்தான் பேசுவேன், எழுதுவேன். எவர் தயவும் எனக்குத் தேவையில்லை. ஊடக முதலாளியின் மீதும் எனக்கு பயம் இல்லை. நான் முதலாளிகளை நம்பி வாழவில்லை’ என்ற எண்ணத்துடன் ஊடகங்களில் பணியாற்ற விரும்பும் அனைவருக்கும் கிருஷ்ணா டாவின்சி பாதுகாவலன்.
இந்த நல்வாய்ப்பு எனக்கும் வேறு சிலருக்கும் கிடைத்தது. நாங்கள் திமிர் பிடித்துத் திரிந்தோம். எவரையும் எதிர்த்து எழுதினோம். பணம் வாங்கிக் கொண்டு ஊடக அறத்தை விற்பனை செய்த கழிசடைகளுக்கு மத்தியில் நாங்கள் தலை நிமிர்ந்து நடந்தோம். கிருஷ்ணாதான் எங்களுக்கான இந்தத் தெளிவையும் துணிவையும் கொடுத்தார்.
நம்மாழ்வார் ஐயாவை பொது ஊடகத்தில் முதன் முறையாக அறிமுகம் செய்தது குமுதம் இதழ்தான். ‘தாய் மண்ணே வணக்கம்’ எனும் தொடரை நம்மாழ்வார் ஐயா எழுதினார். கிருஷ்ணா டாவின்சிதான் இத்தொடரின் பின்னால் இருந்தவர். கிருஷ்ணா செய்த ஊடக நுண் அரசியல் பணிகள் ஏராளம்.
ஏதேனும் ஒரு துறையின் சீரழிவை வெளிப்படுத்த வேண்டும் என என்னைப் போன்றோர் அவசரப்பட்டால், கிருஷ்ணா மென் புன்னகையுடன் கூறுவார், ‘அவசரப்படாம இருங்க. இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வெளில கொண்டு வரணும். இல்லன்னா…நம்மள வேலை செய்ய விட மாட்டானுங்க…’
நீடித்த மாற்றம், நிதானமான செயல்வேகம், பொறுமை ஆகியவற்றை எங்களுக்குக் கற்றுத்தந்த ஆசான் அவர்.
கிருஷ்ணா மீது எனக்குத் தீராத காதல் உண்டு. என்னை வடிவமைத்தவர்களில் அவர் முக்கியமானவர். எனது நன்றிப் பெருக்கை எப்படி வெளிப்படுத்துவதெனத் தெரியவில்லை. அவர் பேரால் சிறந்த ஊடகக்காரர்களுக்கு விருது வழங்குவது உருப்படியான செயலாக இருக்கும் என நினைத்தேன். செம்மை குழுவினர் இதற்கு உடன்பட்டிருக்கிறார்கள்.
ஜூன் 5 ஆம் தேதி சென்னையில் நிகழும், செம்மை ஊர் சந்தையில் இந்த ஆண்டுக்கான ‘கிருஷ்ணா டாவின்சி விருதுகள்’ வழங்க உள்ளோம்.
ஊடகங்களில் நேர்மையாகவும் துணிவாகவும் பணியாற்றும் சிலரையும், சமூக வலைதளத்திலும் தான் வாழும் ஊரிலும் தமிழ் மரபுகளைப் போற்றிச் செயல்படுத்தும் ஒரு பெண்ணையும் விருதுகளுக்குத் தெரிவு செய்துள்ளோம்.
கிருஷ்ணா டாவின்சியின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய சிறு வெளியீட்டையும் ஊர் சந்தையில் வெளியிட உள்ளோம். இந்தக் கட்டுரை எனக்கும் அவருக்குமான உறவின் அடிப்படையில் எழுதப்பட்டது. அவர் வாழ்க்கையை விளக்கமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்தச் சமூகத்தில் நேர்மையான ஊடகக்காரர்கள் அனைவரும், தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்தான். சமூகத்தின் நல்வாழ்விற்காக தமது நலன்களை விட்டுத் தரத் துணிந்த உன்னத உயிர்கள் அவர்கள். ஓர் உண்மைச் செய்தி உங்களை வந்தடையும் வரைக்கும், நேர்மையான ஊடகக்காரர் படும்பாடு என்னவென்று உங்களால் கற்பனை செய்யக் கூட முடியாது.
நேர்மையானவர்கள் எண்ணற்றோர் இருக்கிறார்கள். அவர்களில் வெகு சிலரைத் தெரிவு செய்துள்ளோம். இவர்கள் செய்த பணிகளைச் சிறு வெளியீடாக வெளியிடப் போகிறோம்.
நிகழ்ச்சிக்கு வாருங்கள், நமக்காக உழைக்கும் உண்மையான ஊடகக்காரர்களை வாழ்த்துங்கள். அவர்களது பங்களிப்புகள் அடங்கிய வெளியீடுகளை வாங்கிச் சென்று சக உறவுகளுக்கும் வழங்குங்கள்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் என்றோ ஒரு நாள் இந்த வெளியீடுகளைக் காணும் எதிர்காலச் சமூகத்திற்குத் தங்கள் வாழ்க்கைக்காகப் போராடிய நாயகர்களைத் தெரிய வேண்டுமல்லவா!
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விருது பெறுவோர் படங்களையும் அவர்களின் பங்களிப்புகள் குறித்த சுருக்கங்களையும் பொறுமையாகப் படியுங்கள்.
இப்பணியில் என்னுடன் இணைந்துகொண்டு பயணிக்கும் கலாநிதி, ஆனந்த் செல்லையா ஆகியோரும் ஊடகக்காரர்கள்தான். மிகுந்த நேர்மையுடனும் தன்னலமற்றும் பணி செய்த இவ்விருவரும் செம்மை குடும்பத்தின் முன்னணி உறுப்பினர்களாகியுள்ளனர். விருது நிகழ்வுக்காக உழைக்கும் இவ்விருவருக்கும் என் நன்றிகள்.
என்னையும் கிருஷ்ணா டாவின்சியையும் இணைத்து வைத்த என் இறை, உண்மைக்காகப் போராடும் எல்லா ஊடகக்காரர்களையும் பாதுகாக்கட்டும்!   senthamizhanpakkangal.blogspot.com

கருத்துகள் இல்லை: