வியாழன், 1 ஜூன், 2017

திராவிடத்தை எதிர்த்து பேசியவர்கள் ... பார்பனீயத்தின் பாதங்களில் விழுந்ததுதான் வரலாறு?

marx.anthonisamy: திராவிடக் கருத்தாக்கம் வாழ்க! வளர்க !
சற்று முன் ஒரு வட இந்திய இதழிலிருந்து, "இந்த 'திராவிடநாடு' என 'ஹேஷ் டாக்' பிரச்சாரம் நடக்கிறதே அதனால் ஏதும் அரசியல் ரீதியான பயன் உண்டா? 1963 லேயே திராவிடநாடு கோரிக்கை சட்டவிரோதமாக ஆக்கப்பட்ட நிலையில் இதெல்லாம் சாத்தியமா?" - என்று கேட்டார்கள்.
நான் சொன்னது:
"திராவிடநாடு மட்டுமல்ல எந்த நாடும் கேட்டுப் பிரிவினை கேட்பதுதான் இங்கு சட்டவிரோதம் ஆக்கப்பட்டுள்ளது. திராவிடநாட்டுக்கு மட்டும் போடப்பட்ட சட்டம் இல்லை என்பதை முதலில் நாம் கவனத்தில் வைக்க வேண்டும்..
அடுத்து, திராவிடநாடு என்பது சாத்தியமாகுமா ஆகாதா என்பதற்கு அப்பால் அப்படியான ஒரு அடையாளம் இயல்பானது என்பது கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் முன்பே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயம்.
தென்மாநிலங்களின் மொழிகள் வடமாநில மொழிகளான இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் அவற்றை திராவிட மொழிகள் எனவும் மொழியியல் அடிப்படையில் நிறுவப்பட்ட உண்மை, இந்த இருநூறு ஆண்டுகளில் யாராலும் தவறு எனச் சொல்லப்படவில்லை. தொடர்ந்த ஆய்வுகள் அதனை உறுதிப்படுத்தியே உள்ளன.
இரண்டாவது: இன்றளவும் திராவிட மொழி பேசும் மாநிலங்கள் பல அம்சங்களில் பொதுமைத் தனமை உடையவையாகவே தொடர்கின்றன. இப்பகுதிகளில்தான் பா.ஜ.க இன்றளவும் பெரிய அள்வில் தம் செல்வாக்கை வளர்க்க இயலவில்லை. மொத்தமுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் வெறும் 2 சத அளவே அவர்கள் உள்ளனர்.
மூன்றாவதாக: இப்பகுதிகளில்தான் வடமாநிலங்களைக் காட்டிலும் கல்வி வளர்ச்சி, Human Development Index ஆகியன வடமாநிலங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளன. குழந்தை இறப்பு வீதம் குறைவாக இருத்தல் என்பனபோன்ற பல அம்சங்கள் இதில் உள்ளடக்கம். நீண்ட காலமாகவே திராவிட மொழிப் பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிறபடுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது இதன் அடிப்படை.
நான்காவதாக: இன்று பாஜக கொண்டுவர முனையும் மாட்டுக்கறித் தடை பிரச்சினையிலும் திராவிடமொழி பேசும் மாநிலங்களில்தான் கடுமையான எதிர்ப்புகள் அலைமோதுவதையும் நாம் இணைத்துக்கொள்ளலாம்.
எனவே திராவிடநாடு எனும் அடிப்படையில் இப்படியான ஒரு அடையாள உருவாக்கம் புத்தியிர்ப்புப் பெறுவது முற்றிலும் நியாயமானது, வரவேற்கத் தக்கது"
என்றேன்.
திராவிடம் என்கிற கருத்தக்கத்தை எதிர்த்துத் தீவிரமாகப் பேசிய குழுக்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் பார்ப்பனீயத்தைப் புகழும் இழிநிலைக்குத் தாழ்ந்து கிடப்பதையும் (எ.கா மணியரசன் போன்றோரின் இயக்கங்கள்) கவனத்தில் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: