செவ்வாய், 30 மே, 2017

BBC :மாட்டிறைச்சிக்கு தடை போட மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை?

இந்தியா முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை முறைப்படுத்த, விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்ட ரீதியாக யாருக்கு அதிகாரம் இருக்கிறது, அதன் விளைவுகள் என்ன, தார்மிக ரீதியாக ஏற்படும் தாக்கம் என்ன என்பது குறித்து ஒரு பார்வை.>தென்னிந்தியாவில், இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, திராவிட நாடு என்ற கோரிக்கை கேரளத்தில் இருந்து எழுப்பப்பட்டிருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த மொழி உரிமை செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன், "இதை ஒரு தனிப்பட்ட சம்பவம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. பொதுவாகவே, கலாசாரம், மொழி உள்ளிட்ட உரிமைகளில் நரேந்திர மோதி அரசு தலையிடுவதாக தென் மாநிலங்களில் அதிருப்தி உருவாகியுள்ளது" என்றார். >தென்னிந்தியா வஞ்சிக்கப்படுகிது, மத்திய அரசு ஓர வஞ்சனை செய்கிறது என்ற கருத்து தமிழ்நாடு, கேரளம் கர்நாடகத்தில் ஆழமாக இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டுகிறார்.


இந்த மூன்று மாநிலங்களில்தான், வடமாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்து வந்தர்களால் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஏழைகள் மட்டுமன்றி, நடுத்தர மற்றும் உயர்வருவாய் ரகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசுப் பணி, சேவைப்பணி உள்ளிட்டவை தட்டிப்பறிக்கப்படுவதாகவும், அதற்கு பாரதீய ஜனதா அரசு சாதகமாக செயல்படுவதாகவும் நினைக்கிறார்கள் என்ற காரணத்தை அதற்கு அடிப்படையாகக் கூறுகிறார்.
முன்பு, தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் இதுபோன்ற அதிருப்தி இருக்காது. ஆனால், மாட்டிறைச்சி விவகாரம், பிற தென் மாநில மக்களிடத்திலும் கடுமையான எதிர்வினைகளை உருவாக்கி இருக்கிறது என ஆழி செந்தில்நாதன் குறிப்பிட்டார்.
மீண்டும் `திராவிட நாடு' கோஷம் ஏன்?
இளைஞர்கள் மத்தியில் உளவியல் ரீதியாக ஒருவிதமான கருத்து ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசுக்கு எதிரான அந்தக் கருத்துத்தான் திராவிட நாடு. அதை ஒரு `கீ வேர்டு' என்று ஆங்கிலத்தில் கூறுவதைப் போல அவர்களின் மனதில் பதிந்திருக்கிறது என்று சொல்லலாம்.

பெருகும் வெறுப்பு
இந்திய அரசை நம்ப முடியாது என்ற மன நிலை கடந்த 10 ஆண்டுகளாக தமிழக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதன் விளைவுதான் ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்கிறார் ஆழி செந்தில்நாதன்.
ஈழப் போருக்குப் பிறகு, இயல்பாகவே, டெல்லி நமது உரிமையைப் பறிக்கிறது. மொழி, கலாசாரத்தில் தலையிடுகிறது. குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அது வெளிப்படையாக வந்துவிட்டது. அது பாரதீய ஜனதாவுக்கு எதிராக மட்டுமன்றி, மத்திய அரசுக்கு எதிரான தாக மாறிவிட்டது என்று அவர் தெரிவித்தார்.

கூடங்குளம், நெடுவாசால், விவசாயிகள் போராட்டம் என, எல்லாமே மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள்தான். அப்படியானால், இங்கு இருப்பவர்கள் எல்லாம் தேசதுரோகிகளாக மாறிவிட்டார்களா?
தெற்கும் மற்றும் கிழக்கு இந்தியா ஒரு நிலைப்பாட்டையும், வடக்கு மற்றும் மேற்கு இந்தியா ஒரு நிலைப்பாட்டையும் கொண்டிருக்கின்றன. அதாவது வடக்கு மற்றும் மேற்கு இந்தியா மோதிக்கு ஆதரவாக உள்ளன. அதற்காக, கேரளத்தினரை தேச விரோதிகள் என முத்திரை குத்திவிட முடியுமா? அவர்களைவிட தேசபக்தி மிக்கவர்கள் என மற்றவர்களைக் கூறிவிட முடியாது.
இவை எல்லாமே, கூட்டாட்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு மேலும் ஒரு உந்துதலைக் கொடுக்கும். மோதி அரசு வந்ததில் இருந்து, வலுவான பிராந்தியக் கட்சிகளைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் திட்டமிட்டு ஈடுபட்டு வருகிறது. இதை மாநிலக் கட்சிகள் மிகக்கடுமையாக எதிர்க்கும். கூட்டாட்சிக்கான போராட்டம் மிகப்பெரியதாக உருவெடுக்கும். அடக்க முயற்சித்தால் மிகப்பெரிய விளைவுகள் ஏற்படும் என்றார் ஆழி செந்தில்நாதன்.
பாரதீய ஜனதா கருத்து
இதுகுறித்து, பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் கேட்டபோது, இந்த சட்டமே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

"மாட்டிறைச்சியை தடை செய்யவில்லை. மாறாக, முறையற்ற மாட்டு வியாபாரத்தைத் தடுத்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் மிருக வளம் நம் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காகவே இந்தப் புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது".

இந்தப் பிரச்சனையை அடுத்து, திராவிட நாடு கோரிக்கை எழுந்திருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, எந்த ஒரு நல்ல நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது மலிவான அணுகுமுறை என்றும் அதை அரசாங்கம் எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
சட்ட ரீதியான தாக்கம் என்ன?
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிகளை, நிராகரிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ளது என்கிறார் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம்.
அரசியல் சட்டத்தின் வழிகாட்டுக் கொள்கைகளின் (Directive Principles of the constitution) படி, பால் கொடுக்கும் கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்கிறார் ழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூறுகிறார்.

கடந்த 1958-ஆம் ஆண்டு, பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில், இதுபோன்று ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதாவது, பால் கொடுக்கும் கால்நடைகளாக இருந்தால் 2-3 ஆண்டு காலத்துக்கு அதைக் காப்பாற்ற வேண்டும். அதற்குப் பிறகு பால் கொடுத்தாலும் அதை வெட்டுவதற்குத் தடை இல்லை.
அரசியல் சட்டப்பிரிவு 15, பிரிவு 2-ன் கீழ், அந்த சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்குத்தான் உண்டு. அதில் மத்திய அரசு தலையிட முடியாது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கிலும், மாநில அரசுகளுக்குத்தான் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது என்று வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை: