ஞாயிறு, 28 மே, 2017

ஏர் இந்தியாவில் இருந்து வெளியேற மத்திய அரசு முடிவு?

ஏர் இந்தியாவில் இருந்து வெளியேற மத்திய அரசு முடிவு?
பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம் கடன் சுமையால் தத்தளித்து வருகிறது. ஏர் இந்தியாவின் கடன் ரூ. 50 ஆயிரம் கோடியாக உள்ளது. எனவே ஏர் இந்தியாவில் இருந்து வெளியேற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், “சரியான முதலீட்டாளரை எதிர்பார்த்து உள்ளோம். அப்படி ஒரு நபர் கிடைத்தால், ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்து மத்திய அரசு வெளியேறும்'' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், விமான போக்குவரத்து சந்தையில், 84 சதவிகிதம் தனியார் நிறுவனங்களால் கையாளப்படுகிறது. எனவே, 100 சதவிகிதமும் தனியாரிடம் செல்வதில் எந்தத் தவறும் இல்லை. விமான போக்குவரத்தில் ஏர் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் குறைவு. ஆனால், அந்த நிறுவனத்தின் கடன் சுமை 2016ம் ஆண்டு டிசம்பர் வரை, 50 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது..
உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் டிக்கெட் விற்பனை, 14.1 சதவிகிதம் எனக் குறைந்துள்ளது. இதில், இண்டிகோ நிறுவனத்தின் பங்களிப்பு, 39.8 சதவிகிதம்; ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்களிப்பு, 15.5 சதவிகிதம் ஆகும்.
பிரதமராக வாஜ்பாய் இருந்த போது நான் சிறிய காலத்திற்கு விமான போக்குவரத்து துறை அமைச்சராகப் பணியாற்றி உள்ளேன். அப்போது ஏர் இந்தியாவின் பங்குகளை முழுமையாக விற்பனை செய்ய வேண்டும் என்ற கோப்பில் கையெழுத்திட்டுள்ளேன். விமான போக்குவரத்து நிறுவனத்தை நடத்த வேண்டியது அரசின் பணியல்ல. எனினும், இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது தற்போதைய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கெஜபதி ராஜு தான் என்று தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் ஏர் இந்தியா மொத்த வருவாயாக ரூ.21,000 கோடியை ஈட்டியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பயணிகள் மூலம் கிடைத்த வருவாய் மட்டும் ரூ.16,500 கோடியாகும்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: