ஞாயிறு, 28 மே, 2017

1200 தோல் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ... மாட்டிறைச்சி தடையால் ...

மாட்டு இறைச்சிக்கு தடை: 1200 தோல் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் 1200 தோல் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேலூர்:
தமிழ்நாட்டில் வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதில் வேலூர் மாவட்டத்தில் தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளன.
இந்தியாவிலேயே முதன் முதலாக வேலூர் மாவட்டத்தில் தான் தோல் உற்பத்தி கூடங்கள் தொடங்கப்பட்டன. தோல் உற்பத்திக்கு தேவையான மாட்டு தோல், முஸ்லிம்கள் அதிகம் கைவசம் வைத்திருந்ததால் 18-ம் நூற்றாண்டு காலத்தில் ராணிப்பேட்டை பகுதியில் தோல் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை பகுதிகளில் 1226 தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள், தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என தனிதனியாக உள்ளன.
வேலூர் மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூலம் நேரடியாக 50 ஆயிரம் பேரும், மறைமுகமாக 20 ஆயிரம் பேரும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
தோல் மற்றும் காலணி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேரடியாக 55 ஆயிரம் பேரும், மறைமுகமாக 20 ஆயிரம் பேரும் வேலை செய்கின்றனர்.
இந்தியாவில் தோல் ஆடை மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 37 சதவீதம் வேலூர் மாவட்டத்தில் இருந்து தான் செல்கிறது. இங்கு உற்பத்தியாகும் தோல் ஆடைகள் குளிருக்கு இதமாக இருப்பதால் வெளிநாட்டினர் விரும்பி அணிகின்றனர். தோல் ஆடைகள், ஷூக்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், இத்தாலி, ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தோல் தொழிற்சாலைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கிறது. ஏற்றுமதியால் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி அன்னிய செலவாணி கிடைக்கிறது.
ஒரு தொழிற்சாலையை மூடினால் திரும்பவும், அதை திறக்க பல லட்சம் ரூபாய் செலவாகும்.
வேலூர் மாவட்டத்தில் மாசு கட்டுப்பாடு நெருக்கடி சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக தோல் தொழிற்சாலைகள் புதியதாக வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க ஆந்திர அரசு இங்குள்ள தோல் தொழிற்சாலைக்கு இடம் கொடுத்து அங்கு தோல் தொழிற்சாலைகளை ஊக்குவித்து வருகிறது. இதுவரை 12 தோல் தொழிற்சாலைகள் ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தோல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது இருப்பு வைக்கப்பட்டுள்ள தோல் மூலம் பொருட்கள் உற்பத்தி நடக்கிறது.
ஒரு சில மாதங்களில் தோல் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும். சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் நிலைகேள்விக்குறியாகும் சூழல் தற்போது உருவாகி உள்ளது.
அரசு இதில் தலையிட்டு தோல் பொருட்கள் உற்பத்திக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக ஆம்பூர் தோல் உற்பத்தியாளர் சங்க தலைவர் பயாஸ் அகமது கூறியதாவது:-
வேலூர் மாவட்ட தோல் தொழிற்சாலைகளுக்கு வடமாநிலங்களில் இருந்தும் மற்றும் தமிழகத்தில் மாட்டு இறைச்சி அறுவை கூடங்களில் சேமிக்கப்படும் மாட்டு தோல்கள் கொண்டு வரப்படுகின்றன.
தற்போது மத்தியஅரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் தோல் தொழிற்சாலைகளுக்கு தேவையான தோல் வருவது அடியோடு நிறுத்தப்பட்டு தோல் தொழில் அடியோடு பாதிக்கும்.
இங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டால் வெளிநாட்டு நிறுவனங்கள் தோல் பொருட்கள், காலணி விற்பனையில் இறங்குவார்கள் இந்த சட்டத்தின் மூலம் வெளிநாட்டு தோல் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.  மாலைமலர்

கருத்துகள் இல்லை: