திங்கள், 3 ஏப்ரல், 2017

இன்று மராட்டிய மன்னன் வீர சிவாஜி நினைவு நாள்...

Stanley Rajan : 8ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே இத்தேசம் அந்நியருக்கு எதிர்ப்பினை தெரிவித்துகொண்டே இருந்தது, இங்கே ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் எல்லோரும் பெரும் எதிர்ப்பினை சந்தித்துகொண்டே இருந்தனர்
கோரி, கஜினி முதலான மன்னர்கள் கொள்ளையடித்துவிட்டு ஆப்கனுக்கே ஓடினர், இங்கிருந்து ஆளும் எண்ணமெல்லாம் இல்லை, எதிர்ப்பு அப்படி இருந்தது.
இங்கிருந்து ஆண்டவர்களும் நிம்மதியாக ஆளவில்லை, பெரும் எதிர்ப்புகள்ராஜ்புத்கள் முதல் பல இந்து மன்னர்களிடம் இருந்து வந்துகொண்டேதான் இருந்தது
பின்னாளைய பாபர் வந்து முகல் வம்சத்தை ஸ்தாபித்தாலும் அவருக்கும் ஆப்கன் ஏக்கம் இருந்திருக்கின்றது, அவர் கல்லறை அங்குதான் இருக்கின்றது. இந்தியாவில் தங்கள் வம்சம் ஆளும் என அவர் நினைத்திருக்க வாய்பில்லை
பாபரின் வம்சாவளி அக்பர்தான் இந்துஸ்தானத்தில் ஆள இந்துக்கள் ஆதரவு அவசியம் என உணர்ந்தவர், அப்படி ராஜஸ்தான் இளவரசி ஜோத்பாயினை அவர் திருமணம் செய்து இம்மக்களோடு உறவாடிய பின்புதான் முகலாய வம்சம் இங்கு நிலைபெற்றது , அமைதி திரும்பியது

அந்த அமைதியில்தான் முகலாய அரசு வளம்பெற்றது, ஷாஜகான் போன்றோர் தாஜ்மஹால் போன்றவைகளை கட்ட முடிந்தது, இன்னும் பல கலை அடையாளங்கள் எழும்பின‌.
அதாவது இந்துக்களை அமைதிபடுத்தாமல் இங்கு ஆளவே முடியாது என்ற உண்மை, அவர்களை திருப்திபடுத்தி அமைதியாக்கினால் , இத்தேசம் அமைதியானால் அது எவ்வளவு வளமானது என்ற உண்மை விளங்கிகொண்டிருந்த நேரம்
அமைதியான இந்தியா அன்று செல்வத்தில் கொழித்துகொண்டிருந்தது..
ஆனால் இந்த யதார்த்ததை உணராத மன்னன் ஒருவன் வந்தார் அவர் பெயர் அவுரங்கசீப், கொஞ்சம் அல்ல நிறையவே வித்தியாசமான மன்னர்
ஷாஜகானை சிறையில் அடைத்து ஆட்சிக்கு வந்தவர், ஆனால் மத கடமைகளில் கறாரானவர். மிக எளிமையாக வாழ்ந்தார் என்றுதான் அவரின் வரலாறு சொல்கின்றது, ஆனால் மத விவகாரங்களில் கெடுபிடி
இது இந்திய நிலையினை மாற்றிற்று, ஆங்காங்கு எதிர்ப்பு குரல்கள் எழும்பின, அவற்றில் விஜயநகர இந்து சாம்ராஜ்யம் போலவே முக்கியமானது மராட்டியர் குரல்
சிறிய குரலாக எழுந்த எதிர்ப்பின் சூறாவளியாக தோன்றியவர்தான் சிவாஜி, அவர் தந்தை சிற்றரசர். போர் கலைகளில் வல்லவரானார் சிவாஜி
முதலில் முகலாய பேரரசின் குறுநில மன்னர்களான சுல்தான்களுடன் அவருக்கு மோதல் இருந்தது, பல போர்களில் வென்றார், அவருடைய புகழ் பரவியது
அதாவது மிக சிறிய படையினை வைத்துகொண்டு பெரும் படைகளை வெல்லும் யுத்தபாணி சிவாஜியுடையது, வெற்றி மேல் வெற்றிபெற்றார், அப்பக்கம் சுல்தான்கள், இப்பக்கம் அவர்களுக்கு ஆதரவான தொடக்க பிரிட்டிஷ் படைகள் என இரு பக்கமும் வெற்றிபெற்றவர் சிவாஜி
ஒரு விஷயம் குறிப்பிட்டு சொல்லவேண்டும், அந்நாளில் வலிமையான கடற்படை வைத்திருந்த இந்திய மன்னன் சிவாஜி மட்டுமே, அவர் இருக்கும் வரை வெள்ளையர் அரசாள்வது பற்றி சிந்திக்கவே இல்லை
பல இடங்களில் அவர் வெள்ளையரை தட்டி வைத்திருந்தார்
அவுரங்க சீப்பும் சிவாஜியும் சந்திக்கும் வேளை வந்தது, இருவரும் பலசாலிகள், அவுரங்கசீப்பின் படை மிக பெரிது, யுத்தமும் நடந்தது இருவருமே பேச்சுவார்த்தைக்கு இணங்கினார்கள்,
அதாவது இருவருமே பேச்சுவார்த்தைக்கு இறங்கியிருக்கின்றார்கள், ஆனானபட்ட அவுரங்கசீப்பே பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கின்றார் என்றால் சிவாஜி எப்படிபட்ட பிம்பமாக அவருக்கு தோன்றியிருப்பார் என்பது யாரும் எளிதில் யூகிக்க கூடிய விஷயம்..
ஆனால் அவுரங்கசீப்பின் அணுகுமுறை சிவாஜி யுத்த கைதி என்பது போல இருந்தது
காவலில் வைக்கபட்ட சிவாஜி தப்பினார், பின் வலிமையான படை திரட்டி யுத்தத்தின் தன்மையினை மாற்றினார்
அதாவது தென்னகம் முழுக்க முதலில் கைபற்றினார், செஞ்சி அவர்களின் இரண்டாம் தலைநகராயிற்று, அதன் பின் அசைக்க முடியாத மன்னர் ஆனார்.
அப்சல்கான் என எத்தனை திறமையான தளபதிகள் வந்தாலும் சிவாஜியின் வியூகத்தின் முன் நிற்கமுடியவில்லை
ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், இந்தியாவில் இந்துக்களை மதித்து நடத்தினால் மட்டுமே ஆளமுடியும் என அக்பர் நிரூபித்ததை மறந்து, இல்லை வாளாலும் ஆளமுடியும் என கிளம்பிய ஒளரங்கசீப்பின் பிடரியில் அடித்தவர் சிவாஜி
சிவாஜியும், நாயக்க மன்னர்களின் விஜயநகர சாம்ப்ராஜ்யமும் எழும்பவில்லை எனில் இஸ்லாமிய இந்தியாவாக என்றோ விஸ்தரிக்கபட்டிருக்கும்,ராஜ்புத் மன்னர்களுக்கு பின் பெரும் எதிர்ப்பினை ஆப்கானிய அரசர்களுக்கு கொடுத்தவர்கள் இவர்கள்.
வெறும் 53 ஆண்டுகள் மட்டும் வாழ்ந்த சிவாஜி கிட்டதட்ட 33 ஆண்டுகால வாழ்க்கையினை போர்முனையிலே கழித்தவர், ஒயாத போர்களில் இருந்தவர்
ஒரு புதியபாணி போர்முறையினை அறிமுகபடுத்தியவர் அவர், கிட்டதட்ட அது செங்கிஸ்கானின் பாணி போன்றது, அந்த யுத்த முறையில்தான் சிவாஜிக்கு பின்னும் மராட்டியம் அவுரங்க சீப்பிற்கு தண்ணிகாட்டியது
தான் நினைத்ததை நடத்தமுடியாமலே மறைந்தார் அவுரங்கசீப்.
அவரின் குழப்பமான நடவடிக்கைக்கு பின் முகலாய அரசும் வலுவிழந்தது, சுருக்கமாக சொன்னால் பெரும் சாம்ராஜ்யமான் முகலாய சாம்ராஜ்யத்தின் சரிவினை தொடங்கி வைத்தவர் சிவாஜி
ஒரு சாதாரண சிற்றரசன், பெரும் முகலாயருக்கு எதிராக, அதுவும் இது பெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யம் என மார்தட்டிய அவுரங்கசீப்பிற்கு எதிராக "இந்து ராஜ்யம்" அமைத்து காட்டியது பெரும் விஷயம், அதுவும் 20 ஆண்டுகளுக்குள் அமைத்தது பெரும் வீரம், ஒப்புகொள்ளத்தான் வேண்டும்.
இது நான் அமைத்த இந்து ராஜ்யம், இதற்கு நான் சத்ரபதி என அவர் முடிசூட்டிகொண்டபொழுது தடுக்க யாராலும் முடியவில்லை
ஆப்கானியர் ஆளவந்த 800 ஆண்டுகாலத்தில் அவர்களுக்கு சவால்விட்டு முடிசூடிய ஒரே இந்திய மன்னன் வீரசிவாஜி
முகலாயரையும், பிரிட்டிசாரையும் ஒருசேர கட்டுபடுத்திய அவரின் ஆற்றல்தான் வரலாற்றில் நின்றது
யுத்தம் என்பது சாதரண விஷயமல்ல, மக்களை வாழ வைக்க வேண்டும், அவர்களிடமிருந்து வரி பெறவேண்டும், பின் படை திரட்ட வேண்டும், பயிற்சி அளிக்க வேண்டும், இன்னும் ஏராள சங்கதிகள் உண்டு, ஒன்றில் சறுக்கினாலும் முடிந்தது விஷயம்
ஆனால் தொடர்ச்சியாக ஏராளமான போர்களை சிவாஜி நடத்தினார் என்றால், அதுவும் பெரும் பேரரசினை எதிர்த்து நடத்தினார் என்றால் அவரின் அணுகுமுறையும், நிர்வாகமும் முக்கிய காரணம்.
இந்திய வரலாற்றில் அந்த வீர சிவாஜி பெரும் இடம் ஏன் பிடித்திருக்கின்றார் என்றால் இப்படித்தான்
இன்று அவரின் நினைவுநாள்
அன்றே அந்நியருக்கு எதிராக பெரும் கனலுடன் சுழன்று, அவர்களுக்கு சம்மட்டி அடி அடித்த சிவாஜி பெரும் அஞ்சலிக்குரியவர்
அவரை போலவே எல்லா மன்னர்களும் பிரிட்டிசாரை கட்டுபடுத்தி வைத்திருந்தால் வரலாறு மாறியிருக்கும், முதன் முதலில் இந்தியாவில் பிரிட்டிசாரை பற்றி எச்சரித்தவர் சிவாஜிதான்
அவர்களை ஆதரித்த பின்னாளைய சுல்தான்களும் ,நிஜாம்களும் பின்பு வாங்கிகட்டி கொண்டனர்
இந்திய வரலாற்றில் பெரும் திருப்பம் கொடுத்தவர் மாவீரன் சிவாஜி, அவருக்கு வீரவணக்கம் செலுத்த இத்தேசம் கடமைபட்டிருக்கின்றது..முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: