வியாழன், 6 ஏப்ரல், 2017

மீண்டும் வெடிக்கிறது நெடுவாசல் ... போராட்ட குழு தீர்மானம்!

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நெடுவாசல் கிராமத்தைச் சுற்றியுள்ள 100 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் போராட முடிவு செய்துள்ளதால் நெடுவாசல் மீண்டும் போராட்டக்களமாக மாறவுள்ளது.
இந்தியா முழுவதுமாக 31 இடங்களில் சிறிய அளவில் ஹைட்ரோ கார்பன்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டது. அதில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலும் ஒன்றாகும்.
அதையடுத்து, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இயற்கை எரிவாயு எடுப்பதுக்கு கர்நாடக பாஜக எம்.பி. குடும்பத்தைச் சேர்ந்த ஜெம் லாபரட்டரீஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்றும் கூறி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிறகு, இது எதிர்ப்பு போராட்டமாக மாறியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நெடுவாசலுக்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவளித்தனர். மேலும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித்தலைவர்களும் போராட்டத்துக்கு நேரில் வந்து ஆதரவளித்தனர்
இந்தத் திட்டத்துக்காக அடையாளம் காணப்பட்ட வடகாடு, நல்லாண்டார் கொல்லை உள்ளிட்ட பல கிராமங்களிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு ஏற்பட்டது.
இதற்குப் பிறகு மாநில முதலமைச்சர் பழனிசாமியைச் சந்தித்த போராட்டக் குழுவினர், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கோரினர். இதற்குப் பிறகு மார்ச் 9ஆம் தேதி வியாழக்கிழமை மாலையில் போராட்டக்குழுவினர் மத்தியில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாநில அரசு இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு எடுத்துவரும் நடவடிக்கை குறித்துக் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்துக்கு மாநில அரசு வழங்க வேண்டிய அனுமதிகளை வழங்காது என்றும் அவர் கூறினார். அதையடுத்து, தொடர்ந்து 22 நாள்களாக போராடிய மக்களிடம் விவசாயத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தை கொண்டு வர மாட்டோம் என்று மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், மக்களின் எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் 27ஆம் தேதி நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பு 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த 32 வகையான அனுமதிகளை அந்த நிறுவனங்கள் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர் போராட்டத்தை வாபஸ் பெறவைத்துவிட்டு மக்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் நெடுவாசல் போராட்டக் குழுவினரோ, மத்திய அரசு அனுமதி அளித்தாலும் தங்கள் உடலில் உயிர் இருக்கும் வரை ஒரு பிடி மண்ணை கூட அள்ள விட மாட்டோம் என்றனர். இந்நிலையில் விவசாயிகள் பிரச்னை, நெடுவாசல் பிரச்னை, மீனவர்கள் பிரச்னை என தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் திட்டத்தைக் கொண்டுவரக் கூடாது என்று போராடியும் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்ததால் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். அதையடுத்து, ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் திரும்ப பெறக்கோரி ஏப்ரல் 6-ஆம் தேதி 100 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் போராட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நெடுவாசல் மீண்டும் போராட்டக்களமாக மாறுகிறது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: