வியாழன், 17 டிசம்பர், 2015

சட்டத்தின் முன் அனைவரும் சமமா? இல்லை என்கிறது உயர்நீதிமன்றம் ..வைகோ கண்டனம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடை விதித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
 இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்‘ என்று 2006-ல் தி.மு.க. அரசு கொண்டுவந்த சட்டத்தை ரத்து செய்தும், ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு அரசியல் சட்டம் வகுத்துள்ள சமூக சமத்துவ உரிமையை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
சமூக நீதித் தத்துவத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டில், அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும்; இதன் மூலம் கோயில்களில் மதத்தின் பெயராலும், ஆகம நெறிகள் என்ற பெயராலும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக உள்ள ஒருசிலர் மட்டுமே அர்ச்சகர் ஆகும் உரிமையும், தகுதியும் படைத்தவர்கள் என்பதைத் தகர்க்க வேண்டும்; அங்கும் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் கனவுகண்டார்.


1970-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் நாள், தி.மு.க. அரசு தமிழக சட்டப்பேரவையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு 14-3-1972-ல் தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளித்தது.

ஆனால், கோயிலில் அர்ச்சகர் ஆவதற்கு ஆகம விதிகள்படி குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவராகத்தான் இருக்க வேண்டும். கோயிலின் மரபு பழக்க வழக்கத்திற்கு மாறாக எவரும் அர்ச்சகராக முடியாது என்று அதே தீர்ப்பில்கூறி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்குத் தடைபோட்டது.

மீண்டும் 2006-ல் தி.மு.க. அரசு வந்தபோது, அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வழி செய்யும் வகையில், இந்து அறநிலையத்துறைச் சட்டத்தில் திருத்தம் செய்து, சட்டம் இயற்றியது.
நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அர்ச்சகர் ஆக பயிற்சி பெறும் மாணவர் தகுதி பாடத்திட்டம், பயிற்சி முறைகள், பயிற்சிக் காலம் ஆகியவை குறித்துத் தீர்மானிக்கப்பட்டன. இதற்காக சைவ நெறி மற்றும் வைணவ நெறி பயிற்று மையங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டன. அர்ச்சகர் பயிற்சித் திட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மொத்தம் 207 பேர் தேர்வு செய்யப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒன்றைரை ஆண்டு கால பயிற்சிக்குப் பின்னர் அர்ச்சகர் சான்றிதழ் வழங்கி அவர்களை அர்ச்சகர் ஆக்க அரசு முடிவு செய்தபோது, மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று இடைக்காலத் தடை ஆணை பெற்றனர்.

2011-ல் ஜெயலலிதா அரசு பொறுப்பு ஏற்ற பிறகு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் மெத்தனப்போக்கு ஏற்பட்டது. வழக்கைத் துரிதப்படுத்தி, சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையை நீக்க விரும்பாமல், இந்த வழக்கை இழுத்தடித்து ஜெயலலிதா அரசு காலதாமதம் செய்தது.

ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை தகர்த்துவிட்டது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்து அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் சமூக நீதியை நிலைநாட்ட முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.  dailythanthi.com

கருத்துகள் இல்லை: