வியாழன், 30 ஜூலை, 2015

டாக்டர் அப்துல் கலாம் பற்றி சாருநிவேதா விமர்சனம் ! நிர்வாண நகரத்தில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன்?

charuonline.comபல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர் போன்ற மிகப் பெரிய பதவியில் இருக்கும் நபர்களிடம் நான் பேசியிருக்கிறேன். அவர்களின் கருத்துக்கள் சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் ஒரு பாமர மனிதனுக்குரியவையாகவே இருக்கக் கண்டு திகைத்திருக்கிறேன். (சில உதாரணங்கள்: ராணுவ ஆட்சி வந்தா எல்லாம் சரியாப் போய்டும் சார்; உங்களை டிவியில பார்த்திருக்கிறேன்; நீங்க புக்ஸ் கூட எழுதியிருக்கீங்கிளா?; எதைப் பத்தி எழுதுவீங்க?; சிவாஜி மாதிரி நடிகன் உலகத்துலேயே கிடையாது; நம்ப நாடு மாதிரி ஒலகத்துலயே கிடையாது சார்; (கொஞ்சம் விவரம் தெரிந்தவராக, ஒன்றிரண்டு புக்ஸ் படித்தவராக இருந்தால்) ரைட்டர்ஸ்லாம் ஏன் சார் சண்டை போட்டுக்கிறீங்க, ஒத்துமையா இருந்தா எவ்ளவோ முன்னேற்லாம்.) இது போன்ற உளறல்களுக்கெல்லாம் காரணம், இலக்கியய வாசிப்பு இல்லை என்பதுதான். அப்படி இலக்கிய வாசிப்பு இல்லாதவர்கள் கூட புத்தகம் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அந்தப் புத்தகங்கள் அதை எழுதியவர்களின் மிக உயர்ந்த சமூக அந்தஸ்தின் காரணமாக லட்சக் கணக்கில் விற்கின்றன. இது எல்லாமே 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு மகத்தான கலாச்சாரத்தின் வீழ்ச்சியின் குறியீடு. நம் அன்புக்குரிய டாக்டர் அப்துல் கலாமும் அந்தக் குறியீடுகளில் ஒருவரே.
 நான் ஒரு பயந்தாங்கொள்ளி. ஏய் என்று மிரட்டினாலே தேகமெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடும். எங்காவது அடிதடி என்றால் அந்தப் பக்கமே போக மாட்டேன். ஆனால் மற்ற பயந்தாங்கொள்ளிகளுக்கும் எனக்கும் உள்ள சில வித்தியாசங்களில் முக்கியமானது என்னவென்றால், என் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தாலும் என் கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன்.
துப்பாக்கி வெடிக்கும் வரை சொல்லிக் கொண்டு தான் இருப்பேன். மற்றபடி மற்ற பயந்தாங்கொள்ளிகளைப் போலவே மரண பயத்தில் என் தேகமெல்லாம் நடுங்கும். கால் சராய் நனைந்து விடும். அதிலெல்லாம் எந்த மாற்றமும் இராது. ஒரே ஒரு விஷயம், துப்பாக்கி வெடிக்கும் வரை என் கருத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பேன்.
இப்போதும் அப்படித்தான் இதை எழுத ஆரம்பித்திருக்கிறேன்..charuonline.com என்ற என் இணையதளத்தில்தான் இதை எழுதியிருப்பேன். ஆனால் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத கோழைகள் அந்தத் தளத்தை முடக்கி விட்டதால் இங்கே முகநூலில் எழுதுகிறேன். முகநூலில் எழுதுவதில் என்ன தயக்கம் என்றால் இங்கே யார் வேண்டுமானாலும் வந்து எந்தக் கருத்தை வேண்டுமானாலும் எனக்கு எதிராகப் பதிவு செய்யலாம். அதன் மூலம் அவரும் எனக்குச் சமமாக விவாதிப்பவராகி விடுகிறார். யார் யாரை வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம். கேள்வி கேட்பாரே கிடையாது. ஞாநி, வண்ணதாசன் போன்ற ஜாம்பவான்களே தெறித்து ஓடுகிறார்கள். இருந்தாலும் இப்போது இந்தக் கருத்தைப் பொதுவெளியில் பதிவு செய்ய வேறு எனக்கு எந்த இடமும் இல்லாததால் இங்கே முகநூலில் பதிவு செய்கிறேன்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்த செய்தியால் தேசமே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. நானும் இந்தத் துக்கத்தில் கலந்து கொள்கிறேன். ஆனால் வேறு விதமாக. கலாம் பற்றிப் பேசும் போது அவர் நல்லவர் என்று பாராட்டுகிறார்கள். ஒருவரை நல்லவர் என்று பாராட்டுகின்ற அளவுக்காக நாட்டில் நல்லவர்களின் எண்ணிக்கை அருகி விட்டது? மனிதனாகப் பிறந்த ஒருவரின் அடிப்படைப் பண்பு அல்லவா அது?
கலாமின் அடுத்த பெருமையாக அவர் தமிழையும் திருக்குறளையும் நேசித்தவர் என்று அறிகிறோம். இங்கே தான் கொஞ்சம் இடிக்கிறது. நீங்களோ நானோ தமிழை நேசித்தால் அதனால் சமூக அளவில் பெரிய தாக்கம் ஏற்பட்டு விடப் போவதில்லை. ஆனால் அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தவர். தேசம் முழுவதும் லட்சக் கணக்கான மாணவர்களோடு நேரடியாக உரையாடிக் கொண்டிருந்தவர். கல்வியாளர்களிடையே செல்வாக்கு வாய்ந்தவர். அப்படிப்பட்டவர் ஒரு துயரமான விஷயத்தைப் பற்றித் தன் வருத்தத்தையாவது தெரிவித்திருக்கலாம். தமிழ்நாட்டில் தமிழுக்கு மதிப்பே இல்லை. மேட்டுக்குடியைக் கூட விட்டு விடுவோம்; சாதாரண நடுத்தர வர்க்கத்தினர் செல்லக் கூடிய உணவு விடுதிகளில் கூட அங்கே பணிபுரியும் பரிசாரகர்கள் ஆங்கிலத்தில்தான் பேசி நம்மைக் கொல்லுகிறார்கள். வங்கிக்குச் சென்றால் அங்கே ஆங்கிலம். நவீனமான கடைக்குப் போனால் அங்கே ஆங்கிலம். (தெருமுக்கில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில் மட்டுமே தமிழில் பேசுகிறார்கள்.) எங்கே போனாலும் ஆங்கிலம். ஒவ்வொரு ஷாப்பிங் மாலிலும் பிரம்மாண்டமான புத்தகக் கடைகள் இருக்கின்றன. அங்கே இருப்பதெல்லாம் ஆங்கிலப் புத்தகங்கள். போனால் போகிறது என்று ஒன்றிரண்டு தமிழ்ப் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள். 5000 ஆங்கிலப் புத்தகம் இருந்தால் 50 தமிழ்ப் புத்தகம் உள்ளது. இதற்கெல்லாம் கலாம் என்ன செய்வார் என்கிறீர்களா? கலாம் உலகமெல்லாம் சுற்றியவர். உலகில் எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட அவலத்தை அவர் பார்த்திருக்க மாட்டார். எனவே இது பற்றி அவர் தனது கருத்தைச் சொல்லியிருக்க வேண்டும். அவர் சொன்னால் நாலு பேர் கேட்டிருப்பார்கள். ஏனென்றால், அவர் பதவிக் காலம் முடிந்ததும் முடங்கி இருந்தவர் அல்ல. தேசம் பூராவும் சுற்று பிரயாணம் செய்து மாணவர்களிடமும் கல்வியாளர்களிடமும் உரையாடிக் கொண்டே இருந்தார். இருந்தாலும் தமிழ் மொழியை நேசித்த அவர் தமிழ் நாட்டில் தமிழே இல்லாதது பற்றிக் கொஞ்சமும் வருத்தம் அடையவில்லை. அடைந்திருந்தாலும் அது பற்றிப் பேசவில்லை.
மிக முக்கியமாக, கடந்த 30 ஆண்டுகளில் பள்ளிகளில் தமிழே இல்லாமல் போய் விட்டது பற்றி தமிழ் மீது பற்று கொண்டிருந்த கலாம் என்ன செய்தார்? அட, ஒன்றும் செய்ய வேண்டாம். அது பற்றி ஒரு கருத்தையாவது சொன்னாரா? தமிழே படிக்காமல் நீங்கள் எந்தக் கல்வித் துறையிலும் அதன் உச்சபட்ச படிப்பை முடித்து விட முடியும். இல்லையா? மருத்துவம் என்றால் அதன் உயர்படிப்பான எம்.டி., எம்.எஸ். இன்னும் அதற்கு மேல் எக்கச்சக்கமான நிலைகள் உள்ளன. எல்லாவற்றையும் முடிக்கலாம். தமிழே தெரியாமல் தமிழ் மட்டுமே பேசத் தெரிந்த ஒரு தமிழனுக்கு நீங்கள் மருத்துவம் பார்க்கலாம். இப்படிப்பட்ட அவலத்தை நீங்கள் உலகில் ஒரு நாட்டில் கூடப் பார்க்க முடியாது. காரணம் என்ன? பள்ளிகளில் நீங்கள் தமிழே படிக்காமல் வேறு மொழிகளை எடுத்துக் கொண்டு படிப்பையே முடித்து விடலாம். உலகில் ஒரு நாட்டில் கூட இந்த நிலை கிடையாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னை ஒரு கல்லூரிப் பேராசிரியர் திருவான்மியூர் கடற்கரைக்கு மாலை ஐந்து மணி அளவில் வரச் சொல்லியிருந்தார். மறக்க முடியாத ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும் உங்களுக்கு என்று சொல்லியிருந்தார். அவர் சொன்ன இடத்துக்குப் போனேன். மணி ரத்னம் படத்தில் வரும் பாடல் காட்சியைப் போல் ஆட்களே இல்லாத ஒரு இடத்தில் யாரும் நுழைய முடியாதபடி நான்கு பக்கமும் ஒரு பெரிய வேலி அமைக்கப்பட்டிருந்தது. முன்பக்கம் ஒரு படல். (படல் என்றால் பொருள் தெரியுமோ உங்களுக்கு? வேலியைத் திறப்பதற்கான மூங்கில் திறப்பு.) வேலியைச் சுற்றிலும் வேலியின் மேலே காகங்கள் அமர்ந்து கொண்டிருந்தன. பத்துப் பதினைந்து கல்லூரி மாணவிகள். பிறகு சிறிது நேரம் சென்று ஐந்தாறு மாணவர்களும் வந்து சேர்ந்து கொண்டனர். என்ன விஷயம் என்றால், Olive Ridley என்ற கடல் ஆமை இனம் அழிந்து கொண்டிருக்கிறது. தாய் ஆமைகள் கடலிலிருந்து கரைக்கு வந்து குழி தோண்டி முட்டை போட்டால் அந்த முட்டையையோ அல்லது அதிலிருந்து வெளிவரும் குஞ்சையோ காகங்களும் மற்ற பட்சிகளும் தின்று விடுவதால் ஆலிவ் ரிட்லி என்ற அந்தக் கடல் ஆமை இனம் அழிந்து விடும் நிலையில் உள்ளது. அதனால் சென்னையின் பிரபலமான ஒரு கல்லூரியில் விலங்கியல் பயிலும் மாணவிகள் ஆலிவ் ரிட்லியைக் காப்பாற்றி முட்டையிலிருந்து குஞ்சு வெளியே வந்ததும் அதைப் பழுதில்லாமல் கடலில் விடுகிறார்கள். இதற்காக அவர்கள் மாற்றி மாற்றி தினமும் திருவான்மியூர் கடற்கரைக்குச் சென்று பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். நான் போன தினம்தான் குஞ்சுகள் கடலில் சேரும் தினம்.
எல்லாம் முடிந்து கிளம்பும் போது என் நண்பரிடம் கேட்டேன், ஆலிவ் ரிட்லியைக் காப்பாற்றி விட்டாயிற்று; தமிழை யார் காப்பாற்றுவது என்று. முதலில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு சொன்னேன். ”இரண்டு மணி நேரமாக இங்கே இருக்கிறோம். நம்மைத் தவிர வேறு யாருமே தமிழில் பேசவில்லை, கவனித்தீர்களா?” அப்புறம்தான் அவருக்குப் புரிந்தது. மொத்தம் இருபது மாணவர்கள். அத்தனை பேரும் தமிழர்களே என்றும் அவரிடமிருந்து தெரிந்து கொண்டேன். திரும்பி வரும் போது அவர் சொன்னார். கல்லூரியில் தமிழில் பேசினால் அபராதம் விதித்து விடுவார்களாம். மேலும், அந்த மாணவர்கள் எல்லோருமே ஆங்கில வழிப் பள்ளிகளிலிருந்து வருபவர்கள். வீட்டில் பெற்றோரிடம் மட்டுமே அவர்கள் தமிழில் பேசுவார்கள்.
இப்படிப்பட்ட நிலை உலகில் எந்த நாட்டிலும் கிடையாது. ஃப்ரான்ஸில் வசிக்கும் ஒருவருக்கு ஃப்ரெஞ்ச் தெரியாது என்று சொன்னால் என் தந்தை பெயர் தெரியாது என்று சொல்வதற்குச் சமம். இதைப் பற்றியெல்லாம் கல்லூரி மாணவர்களிடம் தன் வாழ்நாள் பூராவும் உரையாடிக் கொண்டிருந்த, தமிழ் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த அப்துல் கலாமுக்குத் தெரியாதா? ஏன் அவர் இது பற்றி அக்கறை செலுத்தவில்லை? அவர் சொல்லியிருந்தால் கல்வியாளர்கள் கேட்டிருப்பார்களே? குறைந்தபட்சம் ஒரு விவாதத்தையாவது ஏற்படுத்தியிருக்கலாமே? ஆனால் கலாம் என்ன செய்தார் தெரியுமா? நான் மேலே குறிப்பிட்ட கடல் ஆமையான ஆலிவ் ரிட்லிக்காகப் பெருமளவில் பாடுபட்டார். ஒடிஷாவில் ஆலிவ் ரிட்லியைப் பாதுகாப்பதற்காகப் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதில் முக்கியமானவர் நம்முடைய மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபது அப்துல் கலாம் அவர்கள்.
இயேசு கிறிஸ்து பேசிய மொழி Aramaic. அம்மொழியை உலகில் இன்று ஒரு சில ஆயிரம் பேர்தான் பேசுகின்றனர். தமிழுக்கும் அந்த கதி வந்து விடும் போல் உள்ளது. மொத்தம் ஐம்பது வார்த்தைகள் மட்டுமே கொண்ட மொழியறிவு உள்ள ஒரு தலைமுறையையே நாம் உருவாக்கி விட்டிருக்கிறோம். இது பற்றி எழுத்தாளர்களாகிய நாங்கள் மட்டுமே புலம்பிக் கொண்டிருப்பதில் என்ன பயன்? தமிழார்வம் கொண்ட கலாம் என்ன செய்தார்? இது குறித்த தன் கருத்தைக் கூட அவர் பதிவு செய்யவில்லை. அவருடைய தமிழார்வம் அவரளவில் மட்டுமே இருந்தது.
இன்னொரு முக்கியமான துக்கத்தை இந்த துக்க தினத்தில் பகிர்ந்து கொள்கிறேன். கல்வி. ஏழைக்கு ஒரு கல்வி. பணக்காரனுக்கு ஒரு கல்வி. ஆட்டோ டிரைவரின் மகள் கலெக்டரானார் என்பதெல்லாம் எப்போதோ தினசரிகளில் வரும் அதிசயச் செய்தியே ஒழிய எதார்த்த வாழ்க்கை வேறு விதமாக இருப்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. வீடுகளில் எடுபிடி வேலை செய்யும் பணிப்பெண்களின் குழந்தைகள் பத்மா சேஷாத்ரி, DAV, வித்யா மந்திர், SBOA போன்ற மேட்டுக்குடி பள்ளிகளில் படிக்க முடியுமா? விளிம்புநிலை மற்றும் கீழ்த்தட்டில் வசிக்கும் குழந்தைகள் கூலித் தொழிலுக்குப் போகக் கூடிய, டாஸ்மாக்கில் புகலிடம் தேடக் கூடிய கல்வியைத்தானே பெறுகின்றனர்? இது போதாது என்று பல பள்ளிகள் குழந்தைகளை எல்.கே.ஜி.யில் சேர்ப்பதற்கே ஐந்து லட்சம் வாங்குகின்றன. மருத்துவப் படிப்புக்கு எண்பது லட்சம், தொண்ணூறு லட்சம் என்று போகிறது. எல்லோருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டிய கல்வியில் இப்படிப்பட்ட ஏற்றத் தாழ்வு இருப்பதால்தானே சமூகமே குற்றவாளிகளின் கூடாரமாக மாறிப் போயிருக்கிறது?
இது பற்றியெல்லாம் அப்துல் கலாம் தன் வாழ்நாளில் வாய் திறந்திருப்பாரா? இவ்வளவுக்கும் கல்விக் கூடங்களிலேயே வாழ்ந்து கொண்டிருந்தவர் அவர். ஆனால் தமிழ்நாட்டில் பேராசிரியர் கல்யாணி, டாக்டர் வே. வசந்திதேவி போன்ற சிலர் இது பற்றிய கவலையுடனும் அக்கறையுடனும் செயலாற்றிக் கொண்டே இருக்கின்றனர். சுந்தர ராமசாமி டாக்டர் வே. வசந்திதேவியுடன் நிகழ்த்திய உரையாடல் ”தமிழகத்தில் கல்வி” என்ற தலைப்பில் ஒரு நூலாகவே வந்துள்ளது. அடிப்படையாக இங்கே செய்ய வேண்டிய கல்விச் சீர்திருத்தங்கள் பற்றி இருவரும் அதில் உரையாடியிருக்கிறார்கள். அப்துல் கலாம் இது பற்றியெல்லாம் தன் சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லையே? போகட்டும். இப்படி ஒரு அவல நிலையைக் கண்டு தன்னுடைய கருத்தைக் கூட வெளிப்படுத்தவில்லையே?
இதையெல்லாம் விட என்னுடைய பெரிய துக்கம் என்னவென்றால், ஒரு காமன்மேன் காமன்மேனாக இருக்கலாம். ஆனால் ஒரு விஞ்ஞானி காமன்மேனாக இருக்கலாமா? காமன்மேனிடம் போய் உனக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்று கேட்டால் சாண்டில்யன், கல்கி, அகிலன் என்று சொல்லுவான். உனக்குப் பிடித்த கவிஞர்? வைரமுத்து. உனக்குப் பிடித்த சிந்தனையாளர்? நடிகர் விவேக். இப்படியெல்லாம் காமன்மேன் பேசலாம். விஞ்ஞானி பேசலாமா? இந்தியா முழுவதும் மாணவர்களோடு உரையாடியபடி இருக்கும் ஒரு அறிஞர் பேசலாமா? கலாம் பேசியிருக்கிறார். அவருக்குப் பாடலுக்கும் கவிதைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. வைரமுத்து அபாரமான பாடலாசிரியர் (Lyricist). கவிஞர் அல்ல. தமிழில் உலகத் தரமான பல கவிஞர்கள் இருக்கிறார்கள். சி.மணி, அபி, தர்மு சிவராமு, தேவதேவன், தேவதச்சன், ஞானக்கூத்தன், ஆத்மாநாம், கலாப்ரியா, பிரம்மராஜன், மனுஷ்ய புத்திரன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் யாரையுமே கலாம் அறியவில்லை. அவருக்குத் தெரிந்த கவிஞர் வைரமுத்து. இப்படியாக பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் மொண்ணையான, பாமரத்தனமான நம்பிக்கைகளையே தன் வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் டாக்டர் அப்துல் கலாம். இதற்குக் காரணம், தமிழகத்தில் நிலவும் கலாச்சார வறட்சி. பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர் போன்ற மிகப் பெரிய பதவியில் இருக்கும் நபர்களிடம் நான் பேசியிருக்கிறேன். அவர்களின் கருத்துக்கள் சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் ஒரு பாமர மனிதனுக்குரியவையாகவே இருக்கக் கண்டு திகைத்திருக்கிறேன். (சில உதாரணங்கள்: ராணுவ ஆட்சி வந்தா எல்லாம் சரியாப் போய்டும் சார்; உங்களை டிவியில பார்த்திருக்கிறேன்; நீங்க புக்ஸ் கூட எழுதியிருக்கீங்கிளா?; எதைப் பத்தி எழுதுவீங்க?; சிவாஜி மாதிரி நடிகன் உலகத்துலேயே கிடையாது; நம்ப நாடு மாதிரி ஒலகத்துலயே கிடையாது சார்; (கொஞ்சம் விவரம் தெரிந்தவராக, ஒன்றிரண்டு புக்ஸ் படித்தவராக இருந்தால்) ரைட்டர்ஸ்லாம் ஏன் சார் சண்டை போட்டுக்கிறீங்க, ஒத்துமையா இருந்தா எவ்ளவோ முன்னேற்லாம்.) இது போன்ற உளறல்களுக்கெல்லாம் காரணம், இலக்கிய வாசிப்பு இல்லை என்பதுதான். அப்படி இலக்கிய வாசிப்பு இல்லாதவர்கள் கூட புத்தகம் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அந்தப் புத்தகங்கள் அதை எழுதியவர்களின் மிக உயர்ந்த சமூக அந்தஸ்தின் காரணமாக லட்சக் கணக்கில் விற்கின்றன. இது எல்லாமே 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு மகத்தான கலாச்சாரத்தின் வீழ்ச்சியின் குறியீடு. நம் அன்புக்குரிய டாக்டர் அப்துல் கலாமும் அந்தக் குறியீடுகளில் ஒருவரே.
(மேலே உள்ள கருத்துக்களை நான் சில ஆண்டுகளுக்கு முன்னரே என் கட்டுரைகளில் விரிவாக பலமுறை எழுதியிருக்கிறேன்.)
2.
அப்துல் கலாம் தொடர்ந்து இந்தியாவை வல்லரசு ஆக்க வேண்டும்; வல்லரசு ஆக்கப் போராடுவோம் என்று இளைஞர்களிடம் முழங்கிக் கொண்டிருந்தார். ஒரு சொரணையுணர்வுள்ள இந்தியன் என்ற முறையில் இது எனக்கு மிகுந்த வருத்தத்தையும் கோபத்தையும் உண்டு பண்ணியது. விவசாயிகள் இங்கே பட்டினியால் மடிந்து கொண்டிருக்கிறார்கள். வட இந்திய மாநிலங்களில் ஆதிவாசிகளின் நிலங்கள் கார்ப்பொரேட் நிறுவனங்களால் பிடுங்கப்பட்டு அவர்கள் பிச்சைக்காரர்களாக அவர்களின் இடங்களிலிருந்து துரத்தப்படுகிறார்கள். இதெல்லாம் தொடர்ந்து பத்திரிகைகளில் செய்திகளாக வந்து கொண்டே இருக்கின்றன. இதனாலேயே பல மாவட்டங்கள் நக்ஸல்பாரிகளின் ஆதிக்கத்திலேயே போய் விட்டன. அங்கெல்லாம் போலீஸோ, ராணுவமோ நுழையவே முடியாத சூழ்நிலை நிலவுகிறது. கொடூரமான வறுமையும் முந்தின கட்டுரையில் நான் குறிப்பிட்ட ஏற்றத்தாழ்வுமே காரணம். கலாமைப் பொறுத்தவரை வல்லரசு என்றால் ராணுவ ரீதியாக தளவாடங்களைச் சேர்த்துக் கொள்வது; ராணுவ விண்கலங்களைத் தயாரிப்பது ஆகியவைதான். இதுதான் ஒரு காமன்மேனின் பார்வை என்று குறிப்பிட்டேன். மக்கள் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் தெரு விலங்குகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் என்ன வல்லரசு வேண்டிக் கிடக்கிறது? உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலை படு மோசமாக இருக்கிறது. தாய்லாந்து இந்தியாவைப் போல் ஒரு ஏழைநாடுதான். ஆனால் அந்நாட்டின் நகரங்களையும் கிராமப்புறங்களையும் பார்க்கும் போது வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாட்டைப் போல் இருக்கிறது. அதை விடுங்கள்; ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்துப் பணமான ‘பாட்’டும் (Bhat) இந்தியப் பணமான ரூபாயும் சரிவிகிதத்தில் இருந்தது. ஒரு பாட் ஒரு ரூபாய். இப்போது ஒரு பாட்டுக்கு இரண்டு ரூபாய். எவ்வளவு கேவலம் பாருங்கள். ஐந்தே ஆண்டுகளில் தாய்லாந்துப் பணத்திடம் இந்தியப் பணம் வீழ்ந்து விட்டது. ஆனால் கலாமோ இளைஞர்களிடம் வல்லரசுக் கனவை ஊட்டிக் கொண்டிருந்தார். மிக மிக ஆபத்தான சர்வாதிகாரிகளே இது போன்ற வல்லரசுக் கனவுகளை ஊட்டிக் கொண்டிருந்தனர். அறிந்தோ அறியாமலோ கலாம் அதைச் செய்தார்.
உலக அளவில் இந்தியப் பணத்துக்கு என்ன மரியாதை இருக்கிறதோ அதுதான் இந்தியனுக்கான மரியாதை. இரண்டாம் உலகப் போரில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு ஆயிரக் கணக்கில் மாண்டு போன ஐரோப்பியர்கள் ஒன்றாக இணைந்து ஐரோப்பிய யூனியன் மூலம் யூரோவை அமெரிக்க டாலரை விட உயர் மதிப்புடையதாக மாற்றிக் காட்டினார்கள். இப்போதும் வாழ்க்கைத் தரத்தில் அமெரிக்காவை விட பல மடங்கு உயர்தரத்தில் இருக்கிறது ஐரோப்பிய வாழ்க்கை. இன்றைய உலகப் பொருளாதாரத்தில் ரூபாயின் மதிப்பு மிகக் கேவலமாக இருக்கிறது. அதை உயர்த்தாமல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று பேசுவது தேசத்தின் மீதான உண்மையான அக்கறை ஆகாது. தென்னமெரிக்க வாழைக் குடியரசுகளின் சர்வாதிகாரிகளே அப்படிப் பேசினார்கள்.
அப்துல் கலாம் இளைஞர்களின் ரோல் மாடல் என்று பாராட்டப்படுகிறார். இந்திய சரித்திரத்தில் இளைஞர்களுக்கான ரோல் மாடலாக இருந்த இருவர் மகாத்மா காந்தியும் விவேகானந்தருமே ஆவர். அவர்களுக்குப் பிறகு பல தலைவர்களால் இளைஞர்கள் கவரப்பட்டாலும் ரோல் மாடல் என்ற அளவுக்கு யாருமே உயரவில்லை என்பதுதான் எதார்த்தம். இளைஞர்களுக்கு கலாம் என்ன மதிப்பீடுகளை அளித்தார்? அவர் பேசிய அனைத்துமே பல சந்தர்ப்பங்களில் ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருப்பதுதான். ரஜினிகாந்த் எப்போதுமே தன் ரசிகர்களை அவர்களின் குடும்பத்தையும், தாய் தகப்பனையும் கவனிக்கச் சொல்கிறார்; கலாம் இளைஞர்களிடம் தேச பக்தியை ஊட்டினார். தேச பக்தி என்றால் போர்த்தளவாடம் செய்வது; ராக்கெட் விடுவது; இன்னபிற. எனவே கலாம் இளைஞர்களின் ரோல் மாடல் என்றால் ரஜினிகாந்தும் இளைஞர்களின் ரோல் மாடலே! கலாம் இளைஞர்களிடம் திரும்பத் திரும்ப பல்லாயிரக் கணக்கான உரையாடல்களின் மூலம் அவர்களை நன்றாகப் படிக்கச் சொன்னார். அதைத்தானே நம்முடைய பெற்றோரும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? நன்றாகப் படிப்பது எதற்கு? பணம் சம்பாதிக்க. பணம் சம்பாதிக்கச் சொல்லிக் கொடுப்பதுதானா ஒரு ரோல் மாடலின் தகுதி? நான் நூறு முறை சொன்னதைத் திரும்பவும் சொல்கிறேன். அறிவு (knowledge) வேறு; ஞானம் (wisdom) வேறு. கலாம் இளைஞர்களிடையே அறிவைப் பரப்பினார். ஞானத்தை அல்ல. அறிவு என்பது தொழில்நுட்பம். அதை வைத்துப் பணம் சம்பாதிக்கலாம். அவ்வளவுதான். ஒருவகையில் பணத்தை மட்டுமே பிரதானமானக் கருதும் இன்றைய உலகில் பணம் சம்பாதிக்கச் சொல்லிக் கொடுப்பவர் ரோல் மாடலாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

கருத்துகள் இல்லை: