செவ்வாய், 28 ஜூலை, 2015

சுற்றுலா வரும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடம்! வெளிநாட்டினர் அதிகம்.. மத்திய சுற்றுலா அமைச்சகம் தகவல்


வெளிநாட்டினர் அதிகம் சுற்றுலா வரும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடம் பிடித்தது. மராட்டியம் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது இந்தியாவிற்கு கடந்த 2014-ம் ஆண்டு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விவரங்களையும், இதில், அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்த மாநிலங்களின் பட்டியலையும் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது இந்த பட்டியலில் கடந்த ஆண்டு முதல் இடம் பிடித்த மராட்டிய மாநிலம் தற்போது 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மராட்டியத்தை பின்னுக்கு தள்ளி பிரசித்திபெற்ற கோவில்கள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை கொண்ட தமிழகம் முதல் இடம் பிடித்து உள்ளது.


கடந்த ஆண்டு மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் 2014-ம் ஆண்டு மராட்டியத்திற்கு 43 லட்சத்து 90 ஆயிரம் வெளிநாட்டினர் சுற்றுலா வந்ததாக கூறப்பட்டுள்ளது. பட்டியலில் முதல் இடம் பிடித்த தமிழகத்திற்கு 46 லட்சத்து 60 ஆயிரம் பேர் கடந்த ஆண்டு வருகை தந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரபிரதேசத்திற்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லிக்கு 4-ம் இடமே கிடைத்துள்ளது. டெல்லியை காண கடந்த 2014-ம் ஆண்டு 23 லட்சத்து 20 ஆயிரம் வெளிநாட்டினரே வருகை தந்துள்ளனர்.

இதேப்போல் இந்தியாவின் முக்கிய சுற்றுலா பகுதியாக விளங்கும் கோவா இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வராதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பெண்களுக்கு பாதுகாப்பின்மை, சட்ட ஒழுங்கு பிரச்சினை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. maalaimalar.com 

கருத்துகள் இல்லை: