shajiwriter.blogspot.in
1999ல் எச் எம் வி இசை நிறுவனம் 'லெஜென்ட்ஸ்' என்ற தலைப்பில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசைத்தொகையொன்றை வெளியிட்டது. அதற்கு ஒரு தொலைக்காட்சி விளம்பரம் தயாரிக்கும் வேலை எனக்கு அளிக்கப்பட்டது. எம் எஸ் விஸ்வநாதனின் பேட்டித்துணுக்குகளும் அதில் இடம்பெற்றன. விஸ்வநாதனை நேரில் சந்திக்கும் அனுபவத்தைப்பற்றிய உள்ளக்கிளர்ச்சியுடன் நான் சென்னை சாந்தோம் ஹைரோடில் இருந்த அவரது இல்லத்துக்கு ஒளிப்பதிவுக்குழுவுடன் விரைந்தேன். நிச்சயிக்கபப்ட்ட நேரத்துக்கு முன்பே அவர் படப்பிடிப்புக்குத் தயாராக இருந்தார், வெள்ளையும் வெள்ளையும் உடையும் அவருடன் எபோதுமே இருக்கும் அந்த ஆர்மோனியமுமாக. மறக்கமுடியாத எத்தனையோ பாடல்களை உருவாக்கியவர்... இந்தியாவின் இணையற்ற இசைமேதைகளில் ஒருவர்... என் கண்முன் ரத்தமும் சதையுமாக உட்கார்ந்திருந்தார்.
அவர் எங்களை மிக எளிமையும் பணிவுகாக வரவேற்றார். அடுத்த மூன்றுமணிநேரம் அவரிடமிருந்து தொடர்ச்சியாக இசைவாழ்வின் நினைவுகள் பெருகிவந்தபடியே இருந்தன. அவரது இசையனுபவங்களும் இசைப் பரிசோதனைகளும்... மகத்தான பாடல்களுக்குப் பின்னால் இருந்த கதைகள். வரலாற்றில் இடம்பெற்ற பல பாடல்கள் உருவான விதம்.... நிகழ்ச்சித்துணுக்குகள்... அது ஒரு அற்புதமான இசையுலகச் சுற்றுப்பயணம்! வெறும் முப்பது நொடி காட்சிவிளம்பரத்துக்காக அவர் அளித்த பேட்டி ஒரு முழுநீள ஆவணப்படம் தயாரிப்பதற்குப் போதுமானது! எளிமையே உருவானவர் எம் எஸ் விஸ்வநாதன். முதியவயதிலும் முடிவில்லாத ஆற்றல் கொப்பளிக்கும் ஊற்று. எம் எஸ் விஸ்வநாதனைப்பற்றிப் பேசுகையில் ஆச்சரியங்கள் முடிவதேயில்லை!
இளையராஜா ஒருமுறை சொன்னார், ''எத்தனை பாடல்களில் அவர் என் நெஞ்சை உருகவைத்து மெய்மறக்கச்செய்திருக்கிறார்! அவரது ஒவ்வொரு பாடலும் விலைமதிக்க முடியாத ரத்தினங்கள் அல்லவா? இசைவழியாக நான் எதையாவது அடைந்திருக்கிறேன் என்றால் அதை நான் எம் எஸ் வியின் பாதங்களில் காணிக்கையாக்குகிறேன்''
சமீபகாலப்
பேட்டி ஒன்றில் ஏ ஆர் ரஹ்மான் சொன்னார் எம் எஸ் விஸ்வநாதன் தான் எக்காலத்திலும் அவரது நெஞ்சுக்குரிய இசையமைப்பாளர், அவரே உண்மையான இசைமேதை என்று. ''எம் எஸ் வியின் பாதிப்பு இல்லாத இசையமைப்பாளர்கள் தமிழில் இல்லை, இருக்கப்போவதுமில்லை''. கமல்ஹாசனின் சொற்கள் இவை, ''என் இளமைப்பருவம் முதலே எம் எஸ் வியின் மெட்டுகள் என் நெஞ்சையும் செவிகளையும் நிரப்பி என் ரசனையை ஆட்கொண்டிருக்கின்றன. இன்னிசை உருவாக்கத்தில் புதிய புதிய பாணிகளை புகுத்தி எம் எஸ் வி திரையிசைக்கு உயிர்கொடுத்தார். இந்திய திரையிசை உலகில் அவர் ஒரு இதிகாசம்''
தன் இன்னிசைமெட்டுகளால் காற்றலைகளை பற்பல தலைமுறைகளாக ஆட்சிசெய்துவரும் எம் எஸ் விஸ்வநாதன் இன்றும் லட்சகணக்கான தீவிரரசிகர்கள் கொண்ட இசை மேதை. ஐயத்திற்கிடமில்லாமல் அவரே தமிழ் திரையிசையின் முதன்மையான இசையமைப்பாளர். 1952ல் அவரது முதல் பாடல் முதல் எண்பதுகளின் பிற்பகுதி வரை அவர் தன் படைப்பூக்க நிலையின் உச்சத்திலேயே இருந்தார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாலம் இந்தி உட்பட 1740*க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார். இத்தனை காலம் உச்சத்திலேயே இருந்த இன்னொரு இசையமைபபளார் இல்லை என்றே சொல்லலாம்.
சமீபத்தில் ஓர் இணைய விவாதத்தில் ஓர் கேரள இளைஞன் கேட்டான் ''நீங்கள் பேசிக்கொண்டிருப்பது 'கண்ணுநீர் துள்ளியெ' என்ற மலையாளப் பாடலைப் பாடிய விஸ்வநாதனைப்பற்றியா"? பெரும்பாலான மலையாளிகளுக்கு எம் எஸ் விஸ்வநாதன் ஒரு தமிழர், தமிழ் இசையமைப்பாளர், மலையாளத்தின் மறக்கமுடியாத பாடல்கள் சிலவற்றை அமைத்தவர், அனைத்தையும்விட மேலாக 'கண்ணுநீர் துள்ளியெ ஸ்த்ரீயோடு உபமிச்ச காவ்ய ஃபாவனே'' என்ற உச்சஸ்தாயிப் பாடலை மிகுந்த ஆவேசத்துடன் பாடி அதை வரலாற்றில் நிலைநாட்டிய பாடகர்! 1973ல் வெளிவந்த 'பணி தீராத்த வீடு' என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் அது.
ஒரு மலையாள திரையிசை 'நிபுணர்' மாத்ருபூமி வார இதழில் எழுதிய கட்டுரையின்படி விஸ்வநாதன் மலையாளத்தில் ஒரு சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்! ஒரு பாடல்தான் பாடியிருக்கிறார்! அதாவது 'கண்ணுநீர் துள்ளியெ' மட்டும்! அதேயளவுக்கு புகழ்பெற்ற பாடலான 'ஹ்ருதயவாஹினீ..' கூட அவர் நினைவுக்கு வரவில்லை. விஸ்வநாதன் மலையாளத்தில் 60 படங்களுக்குமேல் இசையமைத்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்தில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1932 ஜூலை ஒன்பதாம் தேதி பிறந்தார். அவர் பெயரில் வந்த முதல் இசையமைப்பு 1953ல் எம் ஜி ஆர் நடிப்பில் வந்த தமிழ்-மலையாள இருமொழிப்படமான 'ஜெனோவா'. அப்படத்தில் டி ஏ கல்யாணம் மற்றும் ஞானமணி ஆகியோரும் இசையமைப்பாளர்களாக இருந்தனர். மலையாளியான எம் ஜி ஆர் அன்று எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்படுவதை கடுமையாக எதிர்த்தார். அவர் புதியவர், தகுதியில்லாதவர் என்று வாதிட்டார். இன்னொரு மலையாளியான, அப்படத்தின் தயாரிப்பாளார் ஈப்பச்சன் எம் எஸ் விஸ்வநாதனை ஆதரித்ததனால் கடைசியில் அந்த வாய்ப்பு எம் எஸ் விக்கு கிடைத்தது.
ஆனால் ஜெனோவா படப்பாடல்களைக் கேட்டபின்னர் எம் ஜி ஆர் ஒரு மேதையின் வரவை உடனே புரிந்துகொண்டார். கொட்டும் மழையில் அவர் எம் எஸ் விஸ்வநாதன் வாழ்ந்திருந்த கூரைக்குடிலை தேடிச்சென்று அவரை ஆரத்தழுவி தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். அவ்வுறவு இறுதிவரை நீடித்தது. அதே காலகட்டத்தில் எம் எஸ் விஸ்வநாதன் 'பணம்' 'தேவதாஸ்' 'சண்டிராணி' ஆகிய படங்களுக்கும் இசையமைத்தார்.
எம் எஸ் வி எப்போதுமே பிரபல இந்தி இசையமைப்பாளார் நௌஷாத் குறித்து உயர்ந்த மதிப்பை தெரிவித்துவந்தார். நௌஷாதை அவர் தன் குரு என்று கூட குறிப்பிட்டார். 2002ல் எம் எஸ் விஸ்வநாதனின் வாழ்க்கை வரலாறு வெளியிடப்பட்டபோது நௌஷாதுடன் ஒரே மேடையில் அமர்வதை கூட அவர் மரியாதை கருதி மறுத்துவிட்டார். ஆனால் நௌஷாத் எம் எஸ் விஸ்வநாதன்பற்றி சொன்னது இதற்கு நேர்மாறானது. "நான் அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். ஆகவே அவரை என் ஆசிரியராகவே நான் சொல்லவேண்டும். 'ஆலயமணி'யின் இந்திபதிப்புக்கு நான் இசையமைக்கவேண்டும் என்று சொன்னார்கள். படம் பார்த்துவிட்டு நான் சொன்னேன், விஸ்வநாதன் உச்சபட்சமாக செய்துவிட்டார். இனி நான் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. எம் எஸ் வி எனக்கு குரு ஸ்தானத்தை அளித்துள்ளார், அதற்குக் காரணம் அவரது எளிமையும் பணிவுமேயாகும். அவரது பல மெட்டுகள் என்னை பரவசம் கொள்ளச்செய்துள்ளன''.
என்னுடைய எளிய இசைமதிப்பீடு சொல்வதும் இதுதான். நௌஷாத் சொன்னது தான் சரி. எம் எஸ் வியின் மதிப்பீடு அவரது எளிமையையும் குழப்பத்தையும் மட்டுமே காட்டுகிறது. நுட்பமாக இவ்விருவர் இசையையும் கேட்டு ஒப்பிடுபவர்களுக்கு படைப்பாற்றல், ஊடகத்திறன் ஆகியவற்றில் விஸ்வநாதனிடம் நௌஷாதை ஒப்பிடவே முடியாது** என்பது புரியும். 1956 ல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த 'நயா ஆத்மி' இந்திப்படத்தில் ஹேமந்த் குமார் மற்றும் லதா மங்கேஷ்கர் பாடிய 'லௌட் கயா கம் கா ஜமானா' என்றபாடலை எந்த ஒரு நௌஷாத் பாடலுடனும் ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு நல்ல பாடல் சரணங்களில் பல்லவியை விட மேலே சென்று புதிய இடங்களை தொடுவது என்பதை உணர்வீர்கள்!
விஸ்வநாதனை மேதை என்று ஒரு புகழ்மொழியாகச் சொல்லவில்லை. ஒரு மேதை தன் சூழலின் இயல்பான தொடர்ச்சியாக இருப்பதில்லை. தனக்கு தன் பிறப்பும் சூழலும் அளித்த எல்லா கட்டுப்பாடுகளையும் சாதாரணமாக மீறுகிறான். எங்கிருந்து வந்தது, எப்படி உருவாயிற்று என்ற திகைப்பை அவன் உருவாக்கி அளித்துவிடுகிறான். தான் வாழும் காலகட்டம் முற்றிலும் மறைந்தபின்னரும் தன் கலைப்படைப்புகள் மூலம் அழியாமல் இருந்துகொண்டிருக்கிறான். விஸ்வநாதன் அத்தகையவர். குறைந்தது இரண்டாயிரமாண்டு இசைமரபுள்ள மொழி தமிழ். அதில் கர்நாடக சங்கீதம் இன்றைய வடிவைபெற்று இருநூறு வருடங்கள் தாண்டிவிட்டன. இசை என்றாலே மரபான ராகங்கள்தான் என்றிருந்த சூழல் இது. எம் எஸ் விக்கு முந்தைய இசையமைப்பாளர்கள் பலர் ஒரு ராகத்தின் சிறுபகுதியை எடுத்து வரிகளுக்குப் பொருத்திவிட்டால் பாடலாகிவிட்டது என்று எண்ணி செயல்பட்டனர். விஸ்வநாதனின் இசை ஒருபோதும் மரபான இசைவடிவங்களுக்குள் அடங்குவதில்லை. அந்த புதிய இசையை அடையாளப்படுத்தியாகவேண்டிய கட்டாயம் உருவாயிற்று. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு சொல் தான் மெல்லிசை என்று நான் நினைக்கிறேன். மெல்லிசை மன்னர் என்ற பட்டம் உண்மையில் எம் எஸ் விக்கு பெருமைசேர்ப்பதுதானா? அவருடைய இசை வெறும் 'light' music தானா?
பெரும்பாலான சமயங்களில் சிக்கலான ஊடுபாவுகள் கொண்டது அல்லவா அது? அப்படியானால் அரை நூற்றாண்டுக்காலம் தமிழ் இசைவாழ்க்கையை தீர்மானித்த விஸ்வநாதனின் இசை எந்த மரபைச் சார்ந்தது? அவரில் அவர் பிறந்த கேரள இசையின் கூறுகளை நாம் காணமுடியாது. தமிழ் நாட்டுப்புற இசையையும் நேரடியாக அடையாளம்காண இயலாது. மேலை இசையையும் அவருடைய களமாக சொல்லிவிட முடியாது. இவையெல்லாமே அவருக்கு மனத்தூண்டுதல் அளிக்கும் பின்னணி மட்டுமே.
விஸ்வநாதனின் இசையமைப்பு மேலோட்டமான நோக்கில் மிக எளிமையானது. உடனடியாக ரசிகனைக் கவர்வது. ஆனால் கூர்ந்து கவனிக்கும்போது அதன் ஆழங்கள் தெரியும். ஒரேபாடலில் அவர் பல மெட்டுக்களை போட்டிருப்பார். ஒரே மெட்டை பல்வேறு விதமாக பாடியிருப்பார். உணர்ச்சிகள் சார்ந்து சொற்களுக்கு புதிய அர்த்தங்கள் கொடுத்திருப்பார். பல்லவி முடிந்ததும் பல பாடல்கள் முற்றிலும் வேறுகட்டத்துக்குச் செல்லும். முடியும் முன் சட்டென்று புதிய ஒரு மெட்டுவந்துசேரும். அவர் இசையமைத்த பல்லாயிரம் பாடல்களில் இருந்து உதாரணம் காட்டி இதை விளக்கலாம். ஆனால் அது ஒரு நீண்ட பணி. ஒரே ஒரு உதாரணம், 'அன்புள்ள மான்விழியே' என்ற பாடல். ஒவ்வொரு நான்கு வரிக்கும் புதியமெட்டு வந்தபடியே இருக்கும் அப்பாடலில்!
எம் எஸ் வி ஏராளமான இசைக்கருவிகளை பயன்படுத்திய இசையமைப்பாளர். அக்கார்டின், பிக்காலோ, மெலோடியன், க்ஸைலஃபோன், டுயூபா, பாங்கோஸ், கீபோர்ட் என அவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். கேரள வாத்தியந்களான செண்டை, திமிலை, இடக்கா முதலியவையும் அவரால் பயன்படுத்தப்பட்டுள்ளன. பலசமயம் அதுவரையில் திரையிசைக்கு பரிச்சயமே இல்லாத ஆப்ரிக்க, ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க கருவிகளைக்கூட கையாண்டிருப்பார்.
இசை அவருக்கு மரபின் தொடர்ச்சி அல்ல. அது அவரது சொந்த மொழி. சரிகமபதநி தான் என் மொழி என்று எம் எஸ் வி சொல்லியிருக்கிறார். திரைப்படம் உருவாக்கி அளிக்கும் நாடகீயமான காட்சித்தருணங்களுக்கு அவர் தன் மொழியால் தன் உணர்ச்சிகளை உருவாக்கி அளிக்கிறார். அதை அவரே பலமுறை பல பாடல்கள் உருவான முறையை வைத்து விளக்கியிருக்கிறார். 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலை உருவாக்க மெட்டுக்காக பலநாள் அலைந்து கடைசியில் கடல் அலைகளைக் கேட்டு, அலை வந்து பின்னகரும் ஓசையை வைத்து அதை உருவாக்கியதாக அவர் சொல்லியிருக்கிறார். எத்தனை எத்தனை பாடல்கள்! இன்று அந்த திரைப்படக் காட்சிகள் காலத்தால் பழைமைகொண்டு மறைந்துவிட்டன. அவரது மேதமை தெரியும் இசை மட்டும் என்றும் குன்றாத இளமையுடன் நின்றுகொண்டிருக்கிறது.
பிறமொழிகளில் எல்லாம் விஸ்வநாதன் ஒரு தமிழ் இசையமைப்பாளார் என்றே அறியப்பட்டிருக்கிறார். அம்மொழிகளின் சாதனைகளாகக் கருதப்படும் பல பாடல்களை அவர் உருவாக்கியிருந்தபோதிலும்கூட அது போதுமான அளவுக்கு உணரப்படவில்லை. விஸ்வநாதனின் இந்திப் படங்களில் தொடக்கத்தில் வந்த சண்டிராணி [1953] நடிகை பானுமதி தயாரித்த பலமொழிப்படம். 'நயா ஆத்மி' (1956) ஜூபிடர் நிறுவனம் தயாரித்த பன்மொழிப்படம். 'அஃப்ஸானா தோ தில் கா' [1983] கமல் ஹாஸன் நடித்தது.
விஸ்வநாதன் தெலுங்கில் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். பன்மொழிப்படமான 'தேவதாஸ்' அவரது முதல் தெலுங்குப்படம். 1956ல் வந்த 'சந்தோஷம்' படத்தில் பத்து பாடல்கள் இருந்தன, அனைத்துமே பெரும் வெற்றிபெற்ற பாடல்கள். தெலுங்கு இசையுலகின் எப்போதைக்குமுரிய மகத்தான பாடல்களில் பல அவரால் இசையமைக்கப்பட்டவையே. அவற்றில் பல தமிழ் மூலவடிவங்களை ஒட்டியவை. 'அந்தால ஓ சிலகா' [அன்புள்ள மான்விழியே], 'கோடி ஒக கோனலோ' (கோழி ஒரு கூட்டிலே], 'ஹலோ மேடம் சத்தியபாமா' (என்ன வேகம் சொல்லு பாமா], 'தாளி கட்டு சுப வேள' [கடவுள் அமைத்துவைத்த மேடை] போன்ற பாடல்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. யமுனா தீரானா (கௌரவம்), மௌனமே நீ, ஓ மூக மானஸா [குப்பேடு மனஸு], அந்தமைன லோகமனி, பல்லவின்சவா, கொம்ம மீத, எவரோ பாட்யாரு, நீலோ வலபுல [கோகிலம்மா] போன்றவை தெலுங்கை இன்றும் மயக்கும் இசைமெட்டுக்கள்.
அந்தமைன அனுபவம் (1978), குப்பேடு மனஸு (1979), இதி கத காது, மரோசரித்ரா (1979) சிப்பாயி சின்னையா (1969), ஆத்ம பந்தம் (1991), அந்தரூ அந்தரே (1994), ஆகலி ராஜ்யம் (1980), பைரவ த்வீபம் (1994), தொரரைகாரிகி தொங்கபெள்ளம் (1994), கடனா(1990), இத்தயு பெள்ளால முத்துல மொகுடு, களிகாலம், பங்காரு குடும்பம், மாவுரி மாராஜு, மன்சி செடு, 47 ரோஜுலு, அப்பைகாரி பெள்ளி முதலியவை அவரது சிறந்த இசையமைப்புள்ள படங்களில் சில. 1997 வரை விஸ்வநாதன் தெலுங்கில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தார்.
கன்னடத்தில் விஸ்வநாதன் குறைவாகவே இசையமைத்துள்ளார். ஆனால் அவற்றில் பெரும்பாலான பாடல்கள் வெற்றிகரமான மெட்டுக்களாக இன்றும் நினைக்கபப்டுகின்றன. 1956ல் வந்த 'பக்த மார்க்கண்டேயா' தான் அவரது முதல் கன்னடப் படம்.
'விஜய நகரத வீரபுத்றா' (1961) இக்காலகட்டத்தில் வந்த இன்னொரு முக்கியமான படம். 'எரடு ரேககளு' (1984) கெ பாலசந்தரின் 'இருகோடுகள்' படத்தின் மறுஆக்கம். 1980ல் வந்த "பெங்கியல்லி அரளித ஹூவு' பாலசந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை'யின் கன்னட வடிவம். 'கணேச மஹிமெ', 'மக்கள சைன்யா' போன்ற படங்களுக்கும் கன்னடத்தில் எம் எஸ் வி இசையமத்துள்ளார்.
'ஜெனோவா' படத்துக்குப்பின்னர் விஸ்வநாதன் மலையாளத்தில் 1958ல் 'லில்லி' என்ற படத்துக்கு இசையமைத்தார். 1971ல் 'லங்கா தகனம்' படம் வரை அவருக்கு மலையாளத்தில் இசையமைக்க நேரம் கிடைக்கவில்லை. 'பணி தீராத்த வீடு', 'பாபு மோன்', 'சந்த்ரகாந்தம்', 'தர்மஷேத்ரே குருஷேத்ரே', 'திவ்ய தர்சனம்', 'ஏழாம் கடலின்னக்கரே', 'ஐயர் த கிரேட்', 'ஜீவிக்கான் மறந்நு போய ஸ்த்ர'£, 'கோளிளக்கம்', 'குற்றவும் சிக்ஷயும்', 'பஞ்சமி', 'சம்பவாமி யுகே யுகே', 'வேனலில் ஒரு மழ', 'யக்ஷ கானம்', 'சுத்திகலசம்' முதலியவை குறிப்பிடத்தக்கவை.
விஸ்வநாதன் மலையாலத்தில் சிறந்த இன்னிசைமெட்டுகக்ளையே போட்டிருக்கிறார். 'கண்ணுநீர் துள்ளியெ', 'ஈஸ்வரனொரிக்கல்...', 'நாடன் பாட்டின்டெ மடிசீல கிலுங்ஙுமீ', 'காற்றுமொழுக்கும் கிழக்கோட்டு', 'ஸுப்ரஃபாதம்', 'ஸ்வர்கநந்தினீ', 'வீண பூவே', 'ஹ்ருதய வாஹிநீ', 'திருவாபரணம்' முதலியவை இன்றும் வாழும் அற்புதமான மெட்டுக்கள். இந்த வரிசையை மேலும் பற்பல மடங்கு நீட்டமுடியும். தொண்ணூறுகள் வரை அவர் மலையாளத்தில் இசையமைத்துக் கொண்டிருந்தார்.
இவைதவிர இந்நான்கு மொழிகளிலும் ஏராளமான பக்திப்பாடல்களையும் தனியார் பாடல்கலையும் விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். அவை ஒவ்வொரு நாளும் நம் காதுகளில் விழுந்து நம் மனதை நிறைத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு விஸ்வநாதன் பாடலையேனும் கேட்காமல் எவரும் தென்னாட்டில் ஒருநாளைக் கழிக்கமுடியாது என்பதே உண்மை. தென்னிந்தியாவின் இசைரசனையையே தன் ஏராளமான பாடல்கள் மூலம் எம் எஸ் விஸ்வநாதன் வடிவமைத்தார் என்றால் அது மிகையல்ல. அவரது பாடல்களின் சற்றே மாறுபட்ட வடிவங்களில்தான் இன்றும் மீண்டும் மீண்டும் நம் திரைப்பாடல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
ஆனால் தேர்ந்த இசை ரசிகர்கள் கூட கவனிக்க மறந்த ஒன்று உண்டு. இக்கட்டுரையின் மையமே அதுதான். விஸ்வநாதன் என்ற பாடகர். உண்மையில் விஸ்வநாதன் ஒரு பாடகராகத்தான் பயிற்சி பெற்றார். 1941ல் தன் ஒன்பதுவயதில் முதல் கர்நாடக இசைக்கச்சேரியை கண்ணூர் நகரில் நிகழ்த்தினார். அவர் ஒரு மகத்தான பாடகர். ஆனால் விஸ்வநாதன்யின் ஆசியோடு ராணிமைந்தன் எழுதிய விஸ்வநாதனின் வாழ்க்கை வரலாற்றில் கூட ஒரு பாடகராக அவருக்கு மிகமிக குறைவான இடமே அளிக்கப்பட்டுள்ளது. முந்நூறுபக்கமுள்ள அந்த நூலில் அவரது குரலைப்பற்றி மூன்றுவரிகூட இல்லை. அத்துடன் 'முகமது பின் துக்ளக்' படத்துக்காக அவர் பாடிய 'அல்லா அல்லா' என்ற பாடலே அவர் பாடிய முதல்பாடல் என்ற தவறான தகவலும் அளிக்கப்பட்டுள்ளது!
'முகமது பின் துக்ளக்' 1972ல் வெளிவந்த படம். 1963லேயே விஸ்வநாதன் 'பார்மகளே பார்' படத்துக்காக 'பார்மகளே பார்' என்ற அழகிய பாடலை பாடி அது பெரும்புகழும் பெற்றிருந்தது. அவரது குரல் முதலில் ஒலித்தது 'பாவ மன்னிப்பு' படத்தில் 'பாலிருக்கும் பழமிருக்கும்' பாடலில் உள்ள குரல்மீட்டலாக. அதன் பின் தொடர்ந்து பல பாடல்களை விஸ்வநாதன் பாடியிருக்கிறார்.
இந்தியாவின் பெரும்பாலான இசையமைப்பாளர்கள் தங்கள் இசையமைப்பிலும் பிறர் இசையமைப்பிலும் பாடியிருக்கிறார்கள். பங்கஜ் மல்லிக் முதல் ஏ ஆர் ரஹ்மான் வரை அப்பட்டியல் நீள்கிறது. ஆனால் இவர்களில் பாடகர்களாக பிரகாசித்தவர் எத்தனைபேர்? தங்களுக்கென நல்ல மெட்டுகளைப் போட்டுக்கொள்வதன் மூலம் அவரில் பலர் அரைக்கிணறு தாண்டிவிடுவார்கள். அதேபாடலை ஒரு தொழில்முறை பாடகர் பாடினால் அதைவிட சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் நம் மனதில் எழும்போது அங்கே பாடகராக அவ்விசையமைப்பாளர் தோற்றுவிடுகிறார் என்பதே உண்மை.
மாமேதை சலில் சௌதுரி தன் பாடகர்களுக்கு பாடலை மிக நுட்பமாகச் சொல்லிக்கொடுக்கக் கூடியவர் அவர். ஆனால்
ஒருமுறை அவரது குழந்தைகள் அவரது சிறந்த வங்கமொழிப் பாடல்களை அவரது குரலிலேயே பதிவுசெய்ய முயன்றபோது பயந்து மறுத்துவிட்டார். அவருக்குத் தெரியாமல் அவர்கள் பத்து பாடல்களுக்கு ஒலித்தடம் தயாரித்துவிட்டு பாடல்பதிவுக்கு நாளும் குறித்துவிட்டனர். வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்ட சலில்தா விடிகாலை நான்குமணிக்கே எழுந்து அமர்ந்து பயிற்சிசெய்ய ஆரம்பித்தார். முதல்நாள் முதல்பாடல் ஒலிப்பதிவுசெய்யப்பட்டபோது அவர் பதற்றமாக இருந்தார். குரல் பதிவு செய்யப்பட்டபோது வியர்த்து விறுவிறுத்துப்போய் கண்ணாடி அறையிலிருந்து வெளியே வந்தாராம். பலமுறை முயன்றபின்னரே அவரால் அந்த தொகுப்பை பாட முடிந்தது. அந்தப்பாடல்கள் நன்றாக அமையவுமில்லை. இதை சலில்தாவின் மகள் சஞ்சாரி சௌதுரி என்னிடம் ஒருமுறை சொன்னார்.
ஆனால் எம் எஸ் விக்கு ஒருபோதும் பாடுவது சிரமமாக இருந்தது இல்லை. பாடகர்கள்தான் அவர்முன் கூசிச்சிறுத்து போவார்கள். டி எம் சௌந்தரராஜனே ஒருமுறை சொன்னார், ''எம் எஸ் வி 'சாந்தி' படத்தில்வரும் 'யார் அந்த நிலவு' பாடலின் மெட்டை பாடிக்காட்டியபோது நான் மிரண்டுபோய்விட்டேன், என்னால் எப்படி அதைப் பாடமுடியுமென்று திகைத்தேன். அவர் பாடியதுபோல பாடுவது முடியாத காரியம்''. பி பி ஸ்ரீனிவாஸ், எம் எஸ் வி பாடுவதில் பத்து சதவீதத்தை மட்டுமே தன்னால் குரலில் கொண்டுவர முடிந்துள்ளது என்று சொல்லியிருக்கிறார்.
எந்த ஒருபாடகருமே எம் எஸ் வி பாடிக்காட்டிய அளவுக்கு அவரது மெட்டுக்களை உயிரோட்டத்துடன் பாடியதில்லை என்று பி சுசீலா சொன்னார். பல தடவை எம் எஸ் வி பாடிக்காட்டியதுபோல மெட்டுக்களைப் பாட முடியாமல் அவர் ஒலிப்பதிவகத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறியிருக்கிறாராம். வாணி ஜெயராம், எம் எஸ் வி பாடும்போதுவரும் எண்ணற்ற நுண்ணிய மாற்றங்களை எந்தப்பாடகராலும் மீண்டும் பாடிவிட முடியாது, அதில் பத்துசதவீதத்தைக் கொண்டுவந்தாலே அந்தப்பாடல் நல்ல பாடலாக அமைந்துவிடும் என்று சொல்லியிருக்கிறார். எம் எஸ் விஸ்வநாதநை ஒரு மாபெரும் பாடகராக குறிப்பிடாத நல்ல பாடகர்களே இல்லை.
எம் எஸ் விஸ்வநாதன் அவரது இசையில் பிற பாடகர்கள் பாடிய சில பாடல்களை மேடைகலளில் பாடுவதுண்டு. சில பாடல்கள் பதிவாகவும் கிடைக்கின்றன. அவை மேலும் பலமடங்கு வீரியத்துடன் இருப்பதை ரசிகர்கள் உணரமுடியும். பிற பாடகர்களும் பாடகிகளும் பாடிய புகழ்பெற்ற பலபாடல்களுக்குள் விஸ்வநாதனின் பாடும்முறை உள்ளே இருப்பதை நம்மால் கேட்க முடியும்.
ஆர்மோனியத்துடன் அமர்கையில் விஸ்வநாதன் ஒரு பாடகராகவே இருக்கிறார். ஒரே மெட்டை அவர் மீண்டும் மீண்டும் பாடும்போது ஒவ்வொருமுறையும் அது வேறுபாடுகளுடன் புதிதாகப் பிறந்துவந்தபடியே இருக்கும். பாடகர்கள் அவர் கொடுத்தபடியே இருக்கும் வளர்ச்சிமாற்றங்களை பின்தொடர்வதற்கு திணறுவார்கள்.
பக்குவப்படுத்தப்பட்ட குரல் கொண்ட பாடகர் அல்ல விஸ்வநாதன். அவரது பாடும் முறை சொகுசும் இனிமைகொண்டதுமல்ல. இக்காரணத்தால் தான் அவர் தன்னை ஒரு நல்ல பாடகராக எண்ணவில்லைபோலும்! அவருடையது நடிகர்களுக்குப் பொருத்தமான பின்னணிக்குரலும் அல்ல. ஆகவேதான் அவர் அதிகமும் முகமற்ற தனிக்குரலாகவும் உதிரிக் கதாபாத்திரங்களின் குரலாகவும் திரையில் ஒலிக்க நேர்ந்தது. ஆனால் அவரது பாடலில் எல்லையற்ற வண்ணவேறுபாடுகள் சாத்தியம். அதில் கொப்பளிக்கும் படைப்பூக்கம் கடல்போன்றது. அவரது பாடல்களை தனியாக எடுத்து பார்த்தோமென்றால் அதில் எழுந்து எழுந்துவரும் எண்ணற்ற உணர்ச்சிவேகங்கள் நம்மை பிரமிப்புக்குத்தான் கொண்டுசெல்லும்.
1976ல் வந்த 'முத்தான முத்தல்லவோ' படத்தில் வரும் 'எனக்கொரு காதலி இருக்கின்றாள்' என்ற பாடலை மட்டும் ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். எஸ் பி பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடிய அப்பாடலின் ஒவ்வொரு வரியிலும் விஸ்வநாதன் அளிக்கும் உணர்ச்சிமாறுபாடுகளை கவனித்தால் பாடகர் பாடுவதற்கும் படைப்பாளி பாடுவதற்கும் உள்ள வேறுபாடு நம் கவனத்துக்கு வரும்.
தமிழ் திரையுலகில் 'பிச்ச் [Pitch] என்றாலே வ்¢ச்சு' என்று ஒரு சொல்வழக்கு உண்டு. பெரும்பாலான பாடல்களை விஸ்வநாதன் மிக அசாதாரணமான குரலுச்சத்துக்குப் போய் பாடியிருக்கிறார். பலசமயம் அப்படி உச்சத்துக்கு போகும் பாடல்கள் பிற பாடகர்களால் பாட்முடியாது என்பதனாலேயே அவர் அவற்றை தனக்கென வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் பலவகையான பாடல்களை அவரால் உணர்ச்சிகள் கொப்பளிக்கும்படி பாட முடிந்தது. 1973ல் வந்த 'சிவகாமியின் செல்வன்''படத்தில் வரும் 'எதுக்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே' என்றபாடலை மட்டும் கவனித்தால் இது புரியும். மென்மையான உணர்ச்சிகளை இதில் வெளிப்படுத்தியிருக்கிறார் விஸ்வநாதன்.
இன்னொரு தவறான எண்ணம் அசரீரிக்குரலாகவே விஸ்வநாதன் சிறப்பாக ஒலிக்க முடியும் என்பது. அவரது குரல் பல கதாநாயகர்களுக்குப் பொருந்தாது என்பது உண்மையே. ஆனாலும் பல பாடல்கள் கதாநாயகர்கள் நடிப்புக்கு அணியாக அமைந்துள்ளன. 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில்வரும் 'ஜகமே மந்திரம் ...சிவசம்போ' என்ற பாடலை ரஜினிகாந்த் பாடி நடித்தது உடனடியாக நினைவுக்கு வரும். 'நிலவே நீ சாட்சி' படத்தில் வரும் 'நீ நினைத்தால் இந்நேரத்திலே' இன்னொரு சிறந்த உதாரணம்.
இக்கட்டுரைத்தொடரில் முன்பு ஏ எம் ராஜா பற்றி எழுதிய கட்டுரையில் அவரது குரலினிமை, சுதிசுத்தம் ஆகியவற்றைப்பற்றி எழுதியிருக்கிறேன். அவை இரண்டும் அமையாவிட்டால் பாடலில் இனிமை இல்லை. ஆனால் அவை இசையின் வரலாற்றில் பிறகுவந்துசேர்ந்தவை. சுதி என்றால் என்ன? இதை ஆராய்ந்த இசைநிபுணர்கள் வாய்ப்பாட்டின் ஒலியை பிற வாத்திய ஒலிகளுடன் இணைத்து தரப்படுத்தி பின்னர்
உருவாக்கிய ஒரு முறைதான் அது என்று சொல்லியிருக்கிறார். பாடகர்கள் சுதி தவறாமல் பாடியாகவேண்டும் என்பதில் சந்தேகமேயில்லை.
ஆனால் இவையெல்லாம் உருவாவதற்கு முன்புள்ள பாடல் எப்படி இருந்திருக்கும்? அது கட்டுக்கடங்காத ஆதி உத்வேகம் தன்னிச்சையாக கொப்பளிப்பதாக இருந்திருக்கும். ஒரு பாடகன் அந்த நிலைக்கு தன் இசையுடன் சென்றுவிட்டானென்றால் பிறகு குரலும் சுதியும் இரண்டாம்பட்சமாக ஆகிவிடுகின்றன. எல்லா இசைச்சூழலிலும் அப்படிப்பட்ட சில மாபெரும் பாடகர்களை நாம் அடையாளம் காணலாம். விஸ்வநாதன் பாடும் பாடல்கள் அந்த மெட்டை உருவாக்கியவரால், அந்தவரிகளை முழுக்க உள்வாங்கியவரால், மனம் ஒன்றி பாடப்படுபவை. ஆகவே அவற்றின் உணர்ச்சிகள் மிக உண்மையானவை. எல்லயற்ற நுட்பங்கள் கொண்டவை. உதாரணமான பாடல், 'சொல்லத்தான் நினைக்கிறேன்' [சொல்லத்தான் நினைக்கிறேன்] அப்பாடலில் உள்ள தாபமும் ஏக்கமும் எத்தனை உக்கிரமானவை!
'கண்டதைச் சொல்லுகிறேன்' [சிலநேரங்களில் சில மனிதர்கள்], 'அல்லா அல்லா' [முகமது பின் துக்ளக்], 'இக்கரைக்கு அக்கரை பச்சை' [அக்கரைப்பச்சை], 'உப்பைத்தின்றவன் தண்ணீர் குடிப்பான்' [ஒரு கொடியில் இருமலர்கள்], 'தாகத்துக்கு தண்ணிகுடிச்சேன்' [நீலக்கடல் ஓரத்திலே], 'இது ராஜ கோபுர தீபம்' [அகல் விளக்கு], போன்ற பாடல்கள் மிகச்சிறந்த உதாரணங்கள். இப்பாடல்களில் வரிகளில் உச்சரிப்பிலும் இழுப்புகளிலும் முனகல்களிலும் விஸ்வநாதன் அளித்துள்ள உணர்ச்சிச் செறிவை பிற பாடகர் அளிக்கமுடியுமா என்று பார்க்கவேண்டும். அவரால் பாட்டின் எந்த எல்லையிலும் சென்று உலவ முடியும். 'எனக்கொரு காதலி இருக்கின்றாள்' பாடலில் அவர் ஏழு ஸ்வரங்களில்சிரிப்பதை குறிப்பிடலாம்.
பிற இசையமைப்பாளர்கள்கூட பாடகராக அவரது அபூர்வத் திறனை உணர்ந்துள்ளார்கள். எஸ் குமார் இசையில் வெள்ளி விழா படத்தில் அவர் பாடிய 'உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா' மிகச்சிறந்த உதாரணம். கோவர்த்தனம் இசையமைத்த 'வரப்பிரசாதம்' படத்திற்காக அவர் பாடியுள்ளார். இளையராஜா இசையில் 'தாய் மூகாம்பிகை', 'யாத்ராமொழி'[மலையாளம்] போன்ற படங்களுக்காகவும் அவர் பாடியுள்ளார். சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களுக்காக ஏ ஆர் ரஹ்மான் இசையிலும் பாடியுள்ளார்.
'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் 'விடைகொடு எங்கள் நாடே' ஒரு ஆழமான மெட்டு. அதை விஸ்வநாதனின் குரல் மேலும் உக்கிரமாக்கியது. ஆனால் 'சங்கமம்' படத்தில் வரும் 'ஆலால கண்டா' சாதாரணமான ஒரு மெட்டுதான். எம் எஸ் வி அதில் ஏற்றிய வாழ்வனுபவ சாரத்தாலும் உணர்ச்சிகளாலும் அதை மேலே தூக்குவது வியப்பூட்டும் ஓர் அனுபவம். 'காதல்மன்னன்' படத்திற்காக பரத்வாஜ் இசையமைத்த 'மெட்டுகேட்டு தவிக்குது ஒரு பாட்டு' கொஞ்சம் இசையைக்கேட்டு தவிக்கும் ஒரு பாடல். அது கொஞ்சமாவது கவனிக்கப்பட்டது அதை எம் எஸ் வி பாடியிருக்கிறார் என்பதனால் மட்டும் தான்.
விஸ்வநாதன் தன் தந்தையை மூன்றுவயதில் இழந்தவர். இளமைக்காலம் துயரமும் புறக்கணிப்பும் மிக்கது. முறையான கல்வி அவருக்கு கிடைக்கவில்லை. தட்சிணை கொடுக்க முடியாததனால் குருவின் வீட்டில் ஏவல்வேலைகள் செய்து இசை பயின்றார். சென்னைக்குவந்த தொடக்க காலத்தில் தேனீர் பரிமாறும் பையனாக, உதவியாளனாக வேலைபார்த்தார். அந்த நிலையிலிருந்து தன் மேதமை ஒன்றையே உதவியாகக் கொண்டு உயர்ந்து இசை மன்னராக ஆனார்.
எம் எஸ் விஸ்வநாதன் தன் வாழ்நாளில் எந்த தேசிய விருதையும் பெறவில்லை. ஏன் ஒரு மாநிலஅரசு விருதுகூட அவருக்கு அளிக்கப்படவில்லை. குறிப்பிடும்படியாக அரசின் எந்த அங்கீகாரமும் அவருக்கு அளிக்கப்படவில்லை. அவர் உலகியலே தெரியாத எளிய மனிதர். அதிகார அமைப்புகளுக்குப் பின்னால் செல்லத் தெரியாதவர். அவருக்காக பேச என்றுமே எவரும் இருக்கவில்லை.
ஆனால் அது வருந்தத் தக்கதல்ல என்றே சொல்வேன். அவரைப்போன்ற ஒரு மேதையின் இசையுடன் ஒப்பிடும் தகுதி, பெரும்பாலும் தொடர்புகள் மூலம் அடையப்படும் நம் விருதுகளுக்கு இல்லை. எம் எஸ் வி அடிக்கடி மேடைகளில் சொல்லும் ஒரு வரி உண்டு 'இறக்கும் மனிதர்கள், இறவாப்பாடல்கள்'. ஆம், மனிதர்கள் உருவாக்கி வழங்கும் எல்லா விருதுகளும் அம்மனிதர்களுடனேயே அழிபவை ஆனால் ஒரு தேசத்தின் ரசனையையே வடிவமைத்த எம் எஸ் விஸ்வநாதனின் இசை காலத்தால் அழியாதது.
(2006ல் எழுதியது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக