ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

நிதீஷ்குமார் மீண்டும் முதல்வர் ஆகிறார்! பீகாரில் உட்கட்சி குழப்பம் / திருப்பம்.

பிகார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய ஜிதன் ராம் மாஞ்சி மறுத்து விட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக அப்பதவிக்கு முன்னாள் முதல்வர் நிதீஷ் குமாரை ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியூ) எம்எல்ஏக்கள் சனிக்கிழமை தேர்வு செய்தனர்.
இதையடுத்து, நிதீஷ் குமார் விரைவில் மீண்டும் முதல்வராகப் பதவியேற்க உள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மக்களவைத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்ததையடுத்து, தோல்விக்குப் பொறுப்பேற்று பிகார் முதல்வராக இருந்த அக்கட்சியின் மூத்த தலைவர் நிதீஷ் குமார் 2014ஆம் ஆண்டு மே மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

பின்னர், அந்தப் பதவிக்கு தனது ஆதரவாளரான ஜிதன் ராம் மாஞ்சியை நிதீஷ் குமார் கொண்டு வந்தார்.
முதல்வராகப் பதவியேற்ற பிறகு ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்த பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவருக்கும் நிதீஷ் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து ஜிதன் ராம் மாஞ்சி நீக்கப்பட்டு, நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பதவியேற்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி வந்தன. இதை உறுதிப்படுத்தும் வகையில், முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யும்படி மாஞ்சியை ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமை அண்மையில் கேட்டுக் கொண்டது. ஆனால், அதை அவர் நிராகரித்துவிட்டார். மேலும், நிதீஷ் குமார் ஆதரவு அமைச்சர்கள் இருவரைப் பதவி நீக்கம் செய்து, அதை ஆளுநர் கேஸரிநாத் திரிபாதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தார். அதை ஆளுநரும் ஏற்றுக் கொண்டார்.
மாஞ்சி, நிதீஷ் குமார் இடையேயான சமரசப் பேச்சு தோல்வி: இந்நிலையில், மாஞ்சி தரப்புக்கும், நிதீஷ் குமார் தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் பொருட்டு, நீதிஷ் குமாரின் இல்லத்தில் சனிக்கிழமை காலை பேச்சுவார்த்தை நடந்தது. சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, பிகார் அமைச்சரவைக் கூட்டத்தை ஜிதன் ராம் மாஞ்சி கூட்டினார். அதேநேரத்தில், ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள், சட்ட மேலவை உறுப்பினர்களின் கூட்டத்தை கட்சித் தலைவர் சரத் யாதவ் கூட்டினார்.
அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநர் கேஸரிநாத் திரிபாதிக்கு பரிந்துரைக்கும் யோசனை குறித்து முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்தார். அதற்கு நிதீஷ் குமார் ஆதரவு அமைச்சர்கள் 21 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். மாஞ்சி ஆதரவு அமைச்சர்கள் 7 பேர் மட்டும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, சட்டப்பேரவையை கலைக்கும்படி ஆளுநருக்கு மாஞ்சி பரிந்துரை செய்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. ஆனால், அதை உறுதிப்படுத்த முடியவில்லை.
இதனிடையே, சரத் யாதவ் கூட்டியிருந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் மொத்தமுள்ள 111 எம்எல்ஏக்களில் 97 பேரும், 41 சட்ட மேலவை உறுப்பினர்களில் 37 பேரும் கலந்து கொண்டனர். இதில், சட்டப்பேரவை ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் குழுத் தலைவராக (முதல்வராக) நிதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
பாஜக மீது நிதீஷ் குற்றச்சாட்டு: அதைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய நிதீஷ் குமார், தங்களது கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக பாஜக மிகவும் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டுள்ளது. பாஜகவின் இந்தச் சவாலை நான் ஏற்கிறேன்.
இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு நான் தலைமை தாங்கிப் போராடுவேன் என்றார் அவர்.
பிரணாபுக்கு பிகார் அமைச்சர்கள் கடிதம்: இந்த நிலையில், பிகார் சட்டப்பேரவையைக் கலைக்கும்படி முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி பரிந்துரை அளித்தால், அதை நிராகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆளுநர் கேஸரிநாத் திரிபாதி ஆகியோருக்கு நிதீஷ் குமார் ஆதரவு அமைச்சர்கள் 21 பேர் கையெழுத்திட்ட மனு, தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, ஆளுநர் கேஸரிநாத் திரிபாதிக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.
243 பேரைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு மாஞ்சி ஆதரவு எம்எல்ஏக்களையும் சேர்த்து தற்போது 111 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜகவுக்கு 87, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு (ஆர்ஜேடி) 24, காங்கிரஸூக்கு 5, இந்திய கம்யூனிஸ்டுக்கு 1, சுயேச்சைகள் 5 என உறுப்பினர்கள் உள்ளனர்.

பிகார் நிலவரம்: மோடி ஆலோசனை


பிகார், தில்லி அரசியல் நிலவரம் தொடர்பாக பாஜக தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
தில்லியில் உள்ள மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி, பொதுச் செயலாளர் ராம் லால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, பாஜக தலைவர் அமித் ஷாவும் தனது இல்லத்தில் பிகார் மாநில பாஜக மூத்த தலைவர் சுஷில்குமார் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கையில், "பிகார் அரசியல் நிலவரத்தை பாஜக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது' என்ற dinamani.com

கருத்துகள் இல்லை: