ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்றிரவு காவல் துறை அதிகாரிகளையும், ஏனைய
அரசு அதிகாரிகளையும் துணைக்கு வைத்துக் கொண்டு தொகுதியில் அனைத்துப்
பகுதிகளிலும் வாக்காளர்களுக்கு வாக்கு ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம்
ஆளுங்கட்சியினரால், அமைச்சர்களின் மேற்பார்வையில் முறையாக
வழங்கப்பட்டுவிட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை:
திருவரங்கம் தொகுதியில் நேற்றிரவு காவல் துறை அதிகாரிகளையும், ஏனைய அரசு
அதிகாரிகளையும் துணைக்கு வைத்துக் கொண்டே, எந்த எதிர்க்கட்சியினரையும்
அருகே நெருங்கவிடாமலேயே, ஆளுங்கட்சியினர் இடைத் தேர்தலை நடத்தி முடித்து
விட்டார்கள்! என்ன ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறதா? ஆமாம்,
நேற்றிரவு முழுவதும் திருவரங்கம் தொகுதியில் அனைத்துப் பகுதிகளிலும்
வாக்காளர்களுக்கு வாக்கு ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம்
ஆளுங்கட்சியினரால், அமைச்சர்களின் மேற்பார்வையில் முறையாக
வழங்கப்பட்டுவிட்டது.
குறிப்பாக ஒரு சில இடங்களில் மனசாட்சியுள்ள வாக்காளர்கள் அ.தி.மு.க. வினர்
கொடுத்த தொகையை வாங்க மறுத்தபோது, அ.தி.மு.க. வினர் வலுக்கட்டாயமாக அந்த
வாக்காளர்களின் வீடுகளில் பணம் அடங்கிய கவர்களை வைத்து விட்டுச்
சென்றிருக்கிறார்கள். இவ்வாறு அ.தி.மு.க. வினர் வாக்காளர்களை விலைக்கு
வாங்கத் தாங்கள் மலையெனக் குவித்து வைத்திருக்கும் கொள்ளைப் பணத்தை வாரி
இறைத்திடக் கூடும் என்று எதிர்பார்த்தே, மற்ற எதிர்க்கட்சிக்காரர்கள்
உடனடியாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள, ஏற்கனவே
விளம்பரம் செய்யப்பட்டிருந்த தொலைபேசி எண்களான 94450 29700, 75980 54455,
09448 90830, 74026 07627, 94441 74000, 94431 53253 ஆகியவற்றுக்குத்
தொடர்பு கொள்ள முயன்ற போது, எந்தத் தொலைபேசியிலும் பதிலளிக்க ஆளில்லை.
இதிலிருந்து, அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டே
வாக்குகளுக்குப் பணம் வாரி வழங்கப்பட்டிருக்கிறதெனத் திருச்சி
பத்திரிகையாளர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
நேரில் சென்று பணம் வழங்குவதைத் தடுத்திட முயற்சித்தவர்கள், ஆளுங்கட்சிக்
குண்டர்களால் கடுமையாக ஆங்காங்கே தாக்கப்பட்டிருக்கிறார்கள். யாராலும்,
எதுவும் செய்ய இயலாதபடி, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், தேர்தல்
ஆணையமும் கைகோர்த்துக் கொண்டு காரியத்தை முடித்து விட்டது. இதற்கான
அறிவுரைகளை நேரிலே வழங்குவதற்காகத் தான் தமிழகத்தின் "பினாமி" முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாகத் திருச்சிக்கு
விரைந்து சென்று விட்டு, திருவரங்கம் செல்லாமல் "நேர்மையாளர்" என்ற
முகமூடியை அணிந்து கொண்டு திரும்பினார் போலும்!
ஏற்கனவே நான் 5ஆம் தேதியன்று எஞ்சியிருக்கின்ற சில நாட்களில்
ஆளுங்கட்சியினர் இந்த இடைத்தேர்தலில் இன்னமும் என்னவெல்லாம் செய்வார்களோ
என்று எனது அய்யப்பாட்டைக் குறிப்பிட்டிருந்தேன். அதனை மெய்ப்பித்திடும்
வகையிலேதான் அங்கே அ.தி.மு.க. வினர் அராஜக சேட்டைகளைக் கட்டவிழ்த்து
விட்டு, ஜனநாயக நெறிமுறைகளின் கழுத்தை நெரித்துக் குழிதோண்டிப் புதைத்து
விட்டுக் குதூகலம் கொண்டிருக்கிறார்கள்.
நேற்றைய தினமே திருவரங்கத்தில் பா.ஜ.க. வைச் சேர்ந்த தொண்டர்கள் மீது
அ.தி.மு.க. வினர் பயங்கரத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இன்னொரு
சம்பவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களையும் சரமாரியாகத்
தாக்கியிருக்கிறார்கள். பாஜக வினர் மீது குறிப்பாக ஒரு வயதான பிரமுகர் மீது
அதிமுக வினர் உதைப்பதையும், கொடிக் கம்பால் அடிப்பதையும்,
அதைக்கவனிக்காமல் காவல் துறையினர் வேறு பக்கம் பார்த்துக்
கொண்டிருப்பதையும் புகைப்படமாகவே சில நாளேடுகள் வெளியிட்டிருக்கின்றன.
வீரேஸ்வரம் மேலத்தெருவில் பா.ஜ.க. வினர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த
போது, அதை மறித்து அந்தப் பிரசார வாகனத்தில் இருந்த மைக்கைப் பிடுங்கி
அதிமுகவினர் எறிந்ததோடு, பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பார்த்திபனை மைக்கின்
ஒயரைக் கொண்டு தாக்கியிருக்கிறார்கள். அதுபோலவே கம்பரசம்பேட்டையில்
மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அந்தக்
கட்சியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் பேசிக் கொண்டிருந்ததை மறித்து அவரை
அ.தி.மு.க. வினர் தாக்கியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பா.ஜ.க.,
மார்க்சிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், இந்த அட்டூழியங்களைக் கண்டித்து
சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாகத் தான் நேற்றிரவு முழுவதும் வாக்காளர்களுக்குப் பணம்
கொடுக்கின்ற காரியத்தை அதிமுக வினர் செய்து முடித்துள்ளார்கள். சென்னையிலே
உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி இந்தத் தேர்தல் முறையாக நடக்கவேண்டுமென்று
விரும்பிய போதிலும், அவருக்கு அடுத்த நிலையிலே உள்ளவர்களும், குறிப்பாக
திருச்சியிலும், திருவரங்கத்திலும் உள்ள அதிகாரிகள் ஆளுங்கட்சியினரின்
எடுபிடிகளாகவும், ஏவலுக்குக் கட்டுப்படும் சேவகர்களாகவும்
செயல்படுகிறார்கள்.
பயங்கரவாதத்தையும், கொடிய வன்முறையினையும் அரங்கேற்றி விட்டு அந்தப்
பரபரப்பில் பணப் பட்டுவாடாவை அதிகார வர்க்கத்தின் துணையோடு நிறைவேற்றி,
பணநாயகத்தை முன்னிலைப்படுத்திய ஆளுங்கட்சியின் ஜனநாயக விரோதமான -
அராஜகச்செயல்பாடுகளைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிகவும்
வன்மையாகக் கண்டிப்பதோடு, தேர்தல் ஆணையம் இதற்குரிய நடவடிக்கைகளை
இப்போதாவது விழித்தெழுந்து மேற்கொள்ள வேண்டுமென்றும்; அரசியல்
சட்டத்தையும், மக்களாட்சி நெறிமுறைகளையும் பாதுகாத்திடத் தங்கள் கடமையினை
ஆற்றிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
/tamil.oneindia.com/
/tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக