புதன், 11 பிப்ரவரி, 2015

மோடியை மட்டுமல்ல ஜெயாவையும் பயமுறுத்தும் ஆம் ஆத்மியின் வெற்றி!


டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நடைபெற்று முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று உள்ளது. தேர்தல் முடிவு கருத்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டெல்லி வாக்காளர்கள் எத்தகைய மனநிலையில் இருந்தார்களோ, அதே மனநிலையில் தான் தமிழக வாக்காளர்களும் இருக்கிறார்கள். தமிழகத்தில் தலைவிரித்தாடும் ஊழல்களால் மனம் வெறுத்துப் போயிருக்கும் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த துடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த உண்மை அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டபேரவைத் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் ஆட்சி புரிகின்ற பா.ஜ.க. தனது மதவாதக்கொள்கை, மக்கள் நலத் திட்டங்களை முடக்க நினைப்பது, மதத்தின் பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயற்சிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இத்தேர்தல் முடிவு எடுத்துக்காட்டுகிறது. பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் கூட காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அதன் வெளிப்பாடுதான் அவர்களுக்கு கிடைத்த தோல்வி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது பா.ஜ.க.வின் தோல்வியின் தொடக்கம். மக்கள் மனநிலையின் வெளிப்பாடு. மக்கள் தந்துள்ள மகத்தான பாடம். ஆம் ஆத்மிக்கும், அதன் தலைவர் முதல்வராக உள்ள கெஜ்ரிவாலுக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற பெரிய தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்ட போதும், மக்கள் அவர்களின் கருத்துகளை ஏற்காமல் ஆம் ஆத்மிக்கு அதிகளவில் வாக்களித்துள்ளார்கள் என்றால், பா.ஜ.க. அரசின் நவீன தாராள மயமாக்க பொருளாதார கொள்கையையும், ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத் போன்ற சங் பரிவாரங்களின் வகுப்புவாத கொள்கைகளையும் மக்கள் ஏற்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வகுப்புவாத அபாயம் தலைதூக்கிய நேரத்தில் டெல்லி மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. மிகச் சரியான தீர்ப்பை வழங்கிய டெல்லி மக்களுக்கும் அதை உறுதிப்படுத்திய ஆம் ஆத்மி கட்சிக்கும், அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒற்றை இலக்கத்தில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்துவிட்டது என்பது, மக்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மாய்மால ‘வளர்ச்சி என்ற பிரசாரத்தினால்’ ‘மயக்க பிஸ்கட்’ கொடுத்து ஏமாற்றியதற்கான விலை தான் என்பதை சுவரெழுத்துப்போல் தெளிவாகப் பிரகடனப்படுத்துகிறது. இது முடிவல்ல, ஒரு நல்ல தொடக்கமாகும் என்று கூறியுள்ளார்.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்காலத்தில் ஊழலுக்கு எதிராகவும், மாநில மக்களின் உரிமைகளுக்காகவும் உண்மையில் போராடும் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற உண்மையை டெல்லி தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டி உள்ளன என்று கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. சரிவை சந்தித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் திறமையான அதிகாரி என்பதில் மாற்று கருத்து கிடையாது. தற்போது, கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ந.சேதுராமன் இதேபோல், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் எம்.எச்.ஜவாருல்லா எம்.எல்.ஏ., அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவன தலைவர் டாக்டர் ந.சேதுராமன், இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி, கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்பட பலர் டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். maalaimalar.com

கருத்துகள் இல்லை: