சனி, 14 பிப்ரவரி, 2015

தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு மத்திய பிரதேஷ் வோராவை எப்படி அறங்காவலராக்கலாம்?

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அறக்கட்டளைக்கு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மோதிலால் வோராவை சோனியா காந்தி நியமித்துள்ளதற்கு தமிழக காங்கிரஸில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 1954ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. காமராஜர் காலத்தில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு வாங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிப்பது இந்த அறக்கட்டளையின் பணி. சென்னை தேனாம்பேட்டையில் 181 கிரவுண்ட் நிலப்பரப்பு கொண்ட காங்கிரஸ் மைதானம், ராயப்பேட்டையில் 20 கிரவுண்ட் நிலப்பரப்பில் இருக்கும் சத்தியமூர்த்திபவன் ஆகிய சொத்துக்கள் இதில் அடங்கும். இந்த சொத்துகளை நிர்வகிக்கும் அறக்கட்டளையின் அறங்காவலர்களாக ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், யசோதா, சுதர்சன் நாச்சியப்பன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இருந்தனர். இவர்கள் அனைவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் காங்கிரசை விட்டு வெளியேறியதால் அவர்களுக்கு பதில் புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா, ராஜாஜியின் பேரன் சி.ஆர்.கேசவன் ஆகியோரை புதிய அறங்காவலர்களாக நியமித்து காங்கிரஸ் தலைவர் சோனியா அறிவித்தார்.
இதில் மோதிலால் வோரா மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர். தமிழ்நாட்டில் இருக்கும் காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வோராவை எப்படி அறங்காவலராக்கலாம்? என்று காங்கிரஸ் நிர்வாகிகள் குமுறுகின்றனர். ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சிக்கான சொத்துகளை இனி டெல்லி தலைமையே நிர்வகிக்க முடிவெடுத்திருப்பதாலேயே சோனியா வோராவை நியமித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இளங்கோவன் மற்றும் ப.சிதம்பரம் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருவதால் இருவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வோராவை சோனியா நியமித்திருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. தமிழக காங்கிரஸில் ஒற்றுமை இல்லாமல் போனதாலேயே இப்படி ஒருநிலைமையை அக்கட்சி எதிர்கொள்ள நேரிட்டிருப்பதாகவும் குமுறுகின்றனர் காங்கிரஸ் தொண்டர்கள்.

tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை: