இது ஒரு தேவதைக் கதை! அர்விந்த் கேஜ்ரிவால் என்கிற இளவரசனின் கதை. இந்திரப்
பிரஸ்தத்தின் இளவரசியை மணம் முடிப்பதற்கான கதையின் முடிவு சுபமாகவே
ஆகியிருக்கிறது. மோதல், காதல், ஊடல் என ஓராண்டுக் காலம் நடந்த நாடகம்
முடிந்துவிட்டது. டெல்லி சட்டப்பேரவையின் வரலாற்றில் இதுவரை காணாத வெற்றியை
மஃப்ளர் மனிதர் பெற்றிருக்கிறார். 70-ல் 67 இடங்களைக் கவர்ந்து ஆஆக வெற்றி
பெற்றிருக்கிறது. ஆஆக-வே எதிர்பாராத பெரும் வெற்றி இது. சரி,
வெற்றியாளர்களைப் பற்றி அப்புறம் பேசிக்கொள்வோம். முதலில் தோல்வியாளர்களைப்
பற்றிப் பார்ப்போம்.
இந்தத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி கேஜ்ரிவாலுக்கு என்றால், மிகப் பெரிய
தோல்வி யாருக்கு? தேர்ந்தெடுங்கள்: 1. நரேந்திர மோடி, 2. அமித் ஷா, 3.
கிரண் பேடி, 4. ராகுல் காந்தி.
விடை: மேற்கண்ட யாருமில்லை.
அப்போது யார்தான் நெ.1 தோல்வியாளர்? சந்தேகமேயில்லை திருவாளர் நோட்டாதான்.
நடுத்தர வர்க்கத்தின் சிடுமூஞ்சிவாதிகளும் அரசியல்வாதி களின்
மிரட்டல்களுக்குப் பயப்படும் அப்பாவி ஜனநாயகவாதிகளும் தேர்தல்
ஜனநாயகத்தைக்கூடக் குழிதோண்டிப் புதைக்க நினைக்கும் குரோனி
கேபிடலிஸ்ட்களும் எப்போதுமே நோட்டாவைத் தங்கள் தலையில் தூக்கிக்கொண்டு
அலைவார்கள். எல்லோரையும் நிராகரியுங்கள் என்று பாடமெடுப்பார்கள். மக்கள்
தங்களுடைய உரிமைகளின் மீது நம்பிக்கை இழக்க வேண்டும், சர்வாதிகார ஆட்சி வர
வேண்டும் என்று ஏங்க வேண்டும் என்பது அவர்களில் பலரது கருத்து. ஆனால்,
மாற்றத்தின்மீது நம்பிக்கை இல்லாதவர்களின் அல்லது அதற்கான வாய்ப்பு
இல்லாதவர்களின் மந்திரச் சொல்லான நோட்டாதான் டெல்லியில் இன்று நெ.1
தோல்வியாளர்!
இந்தத் தேர்தலில் டெல்லியில் ஆயிரம் பேருக்கு நான்கு அல்லது ஐந்து பேர்தான்
நோட்டாவைத் தேர்ந்தெடுத் திருக்கிறார்கள். அதாவது, 0.4% மக்கள்தான்
நோட்டாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். டெல்லி 2015 தேர்தலின் சுவிசேஷம்
இதுதான்: மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. வெற்றி பெற்ற கட்சி
அறுதிப்பெரும்பான்மை பெற்றது என்பதைவிடப் பெரிய சேதி, நரேந்தர் பாயும்
அமித் ஷாவும் தங்களுக்கு எதிரான இந்த அலையை உறுதியாக
எதிர்பார்த்திருக்கவில்லை என்பதுதான். பாஜகவுக்கு 3 இடங்கள்! இந்தியத்
தேர்தல் வரலாற்றில், அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி பிடித்த
ஒரு கட்சி, ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள்ளாகவே, அதுவும் அதன் நேரடிப்
பார்வையில் உள்ள தலை நகரத்திலேயே, இப்படி மண்ணைக் கவ்வியது என்பது
அசாதாரணமானது! காங்கிரஸுக்குத்தான் உண்மையில் இது தெம்பளித்திருக்கும்.
ஆனால், தேர்தல் முடிவு வர வர, டெல்லியில் காங்கிரஸ் ஆண்ட காலம் ஒளரங்கசீப்
ஆண்ட காலத்துக்குச் சற்று முன்னே சென்றுவிட்டதைப் போல ஒரு தோற்றம்
எழுந்தது. ‘ராகுல்! மை டியர் சன்!’
தன் கட்சியின் வெற்றிக்கு அர்விந்த் கேஜ்ரிவாலின் தனிப்பட்ட பங்களிப்பைப்
பற்றி எழுதாமலிருக்க முடியாது. இந்த மனிதரைப் பாருங்கள்: 2012-ல் கட்சியைத்
தொடங்கினார். 2013-ல் நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 70-ல் 28
இடங்களைப் பிடித்து இரண்டாம் இடத்துக்கு வந்தார். முதல்வர் பதவியை ஏற்க
முரண்டுபிடித்தார். பின்பு, பதவியை ஏற்றார். தர்பாரைத் தெருக்களில்
நடத்தினார். ‘சின்ன புள்ளத்தனமாக’ சட்டப்பேரவையை நடத்தினார்.
மின்பகிர்வு கம்பெனிகளைத் தணிக்கை செய்ய முயன்றார். மல்டி-பிராண்டு
ரீடெய்லிங் ராட்சதர்களான வால்மார்ட்களின் கனவில் பெருச்சாளிகளை விட்டுப்
பார்த்தார். அம்பானிகளை வம்புக்கிழுத்தார். ‘ஒருநாள்’ முதல்வர் போலச்
செய்திகளை உருவாக்கினார். பிறகு சட்டென்று, இந்த ஆட்டத்துக்கு நான்
வரவில்லை என்று ராஜினாமா செய்தார். பிறகு, நாடாளுமன்றத் தேர்தலில்
நாடெங்கும் பரவினார். டெல்லியில் படுதோல்வி அடைந்து சுயமாயை கலைந்தார்.
நாடெங்கும் கேலிக்கூத்தானார். ஆனால், அவரது இருமலும் நின்றபாடில்லை, அவரது
வைராக்கியமும் குறைந்தபாடில்லை. உடனடியாகத் தவறுகளிலிருந்து பாடம் கற்றார்.
முழுத் தீர்ப்பு வேண்டும் என்றார். மீண்டும் மக்களை வாக்குச்சாவடிக்கு
வரவைக்கும்படி செய்தார். தேர்தல் கூட்டங்களில் “இந்த சின்னப் பையனின் தவறை
மன்னிக்க மாட்டீர்களா” என்று மக்கள் தாள்பணிந்தார். வைஃபையை இலவசமாகத்
தருகிறேன் என்றார். மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் இணையத்துக்குச்
செலவழிக்கிற மக்கள் வாழும் மாநகரத்தில், இது ரூபாய்க்கு மூன்று படி
அரிசியைவிடப் பெரிய வாக்குறுதிதான்!
எப்படிப்பட்ட வெற்றி! டெல்லி சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை எந்தக்
கட்சியும் இவ்வளவு இடங்களைப் பெற்றதில்லை. இந்த அளவுக்கு வாக்கு
வித்தியாசத்தில் வெல்லவும் இல்லை. டெல்லியில் முதலில் ஆட்சியமைக்கும் பாஜக
அல்லாத, காங்கிரஸ் அல்லாத ஆட்சி இது. பாஜக முதன்முதலாக ஒற்றை
இலக்கத்துக்குச் சரிகிறது, காங்கிரஸுக்குச் சுழியம். தேர்தல் கணிப்பியல்
நிபுணரும் ஆஆக தலை வர்களில் ஒருவருமான யோகேந்திர யாதவ், கடந்த வாரம் தன்
கட்சி 50 இடங்களைப் பெற்றால்கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று
கூறியிருந்தார். அவரது சொந்தக் கணக்கையும் மீறி அவரது கட்சி பெருவெற்றி
பெற்றிருக்கிறது. “இது கிளாஸிக்கான தமிழ்நாடு வகைப்பட்ட தீர்ப்பு” என்று
பின்பு தொலைக்காட்சியில் பேசும்போது அவர் கூறினார்.
இந்தத் தீர்ப்பு அதிசயமானது. இத்தனைக்கும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்
டெல்லியிலும் மோடி அலைதான் வீசியது. ஆனால், ஓராண்டுகூட ஆக வில்லை. மோடி
படுதோல்வி அடைந்திருக்கிறார். இடையில் நடந்த மகாராஷ்டிரா, ஜார்கண்ட்
உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல்களைப் போலவே இந்தத் தேர்தலையும் தனது
ஆட்சிக்கான ‘ஏற்புத்தேர்வாக’ காட்ட மோடி - அமித் ஷா இரட்டையர்கள் நினைத்
திருந்தார்கள். ஆனால், டெல்லி அவர்களுக்கு ஆப்பு வைத்துவிட்டது. அவர்களே
வலுக்கட்டாயமாக இந்தத் தேர்தலைத் தங்களுடைய மானப் பிரச்சினையாக
நினைத்துக்கொண்டார்கள். கேஜ்ரிவாலைத் தனிப்பட்ட முறையில் தாக்கினார்கள்.
ஆனால், கேஜ்ரிவால் தனது வெற்றிக்கு, நிச்சயம் தன் முன்னாள் சகா கிரண்
பேடிக்கு நன்றி சொல்ல வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் முகமாக
இருந்த கிரண் பேடி, பாஜக முதல்வர் வேட்பாளரானது மக்களிடம் எடுபடவில்லை.
காங்கிரஸுக்கு எதிராக அண்ணா ஹசாரேவையும் கிரண் பேடியையும் அர்விந்த்
கேஜ்ரிவாலையும் களமிறக்கியது டெல்லியின் ஆர்.எஸ்.எஸ். சாணக்கியர்கள்தான்
என்று கூறுவதுண்டு. அது உண்மையென்றால், இப்போது ஆப்பசைத்த குரங்காக
உட்கார்ந்துகொண்டிருப்பதும் அவர்களாகத்தான் இருக்கும்.
கேஜ்ரிவாலைப் பொறுத்தவரை இது அவரது சகாப்தத்தின் தொடக்கம். கடந்த கால
வெற்றி தோல்வி களின்போது நிலையாக நின்ற நண்பர்களையும் அலையாக வந்த
சந்தர்ப்பவாதிகளையும் அவர் சந்தித் திருப்பார். 2013-ல் அவர் ஏற்கெனவே
சரிந்திருந்த காங்கிரஸைத்தான் வீழ்த்தினார். இப்போது நிலைமை வேறு. ராட்சத
பலம்பொருந்திய அடிபட்ட புலியான நரேந்திர மோடியைச் சமாளித்து, அவர் இனி
ஆட்சி புரிய வேண்டியிருக்கும். பதற்றத்துக்குப் பலியாகக் கூடாது.
ஆத்திரப்பட்டுவிட்டால் மற்றொரு வாய்ப்பைக் காலம் அவருக்குத் தராது.
இப்போதைக்கு, ஆஆக பெற்றிருக்கும் வெற்றி, நாம் கொண்டாட வேண்டிய வெற்றியே.
நாடாளு மன்ற ஜனநாயகத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் ஒழித்துக்கொண்டிருக்கும்
அல்லது பலவீனப்படுத்திக் கொண்டிருக்கும் நரேந்திரமோடி - அமித் ஷா சாம்ராஜ்ய
காலத்தில், மக்கள் தங்களுடைய நம்பிக்கையை இழக்காமலிருப்பது சாதாரணமான
விஷயம் அல்ல!
- ஆழி செந்தில்நாதன், தொடர்புக்கு: zsenthil@gmail.co tamil.hindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக