வியாழன், 12 பிப்ரவரி, 2015

தஸ்லிமா : அரசையும் மதத்தையும் பிரித்த கேஜிரிவாலுக்கு நன்றி


மதவாத சக்திகளின் ஆதரவை நிராகரித்ததற்காக கேஜ்ரிவாலை பாராட்டியுள்ளார் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.
டெல்லி தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு அர்விந்த் கேஜ்ரிவாலை வாழ்த்தியுள்ள எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், இந்திய பாரம்பரியத்தின் அடையாளமான மத சார்பற்ற அரசியலுக்கு ஆம் ஆத்மி தலைவர் புதிய போக்கை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக பாராட்டியுள்ளார்.
'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், "இந்திய அரசியல்வாதிகள் அர்விந்த் கேஜ்ரிவாலிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். சையது அகமது புஹாரி, டெல்லி ஜும்மா மசூதியின் இமாம் ஷாஹி போன்ற மதத் தலைவர்கள் ஆதரவை முற்றிலும் புறக்கணித்துவிட்டு நடுநிலையாக நின்று தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என்பதை அர்விந்திடம் கற்றுக்கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

அரசையும் மதத்தையும் பிரித்துவைக்கும் துணிச்சல்
முன்னதாக, டெல்லி தேர்தலுக்கு முன்னர் ஷாஹி இமாம் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியதை கேஜ்ரிவால் ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கு நன்றி சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேஜ்ரிவாலின் அரசியல் துணிச்சல் பற்றி கூறும்போது, "இந்திய அரசியலில் மட்டுமல்லாமல் தெற்காசிய அரசியலிலும் கேஜ்ரிவால் ஒரு புதிய போக்கை உருவாக்கியுள்ளார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு அரசியல்வாதி மாநிலத்தையும் மதத்தையும் பிரித்துவைக்கும் துணிச்சலைக் காட்டியுள்ளார்.
எல்லா மதத்தைச் சேர்ந்த அடிப்படைவாதிகளும் அரசியல்வாதிகள் தங்கள் முன் மண்டியிட்டுக் கிடப்பார் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கேஜ்ரிவால் மதவாத சக்திகளின் உதவி இல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்" என்றார்.
பாஜக உட்பட எந்தக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிக்கும் ஷாஜி இமாம் உதவியை புறக்கணித்துவிட்டு தேர்தலை எதிர்கொள்ளும் துணிச்சல் வருமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இத்தகைய துணிச்சலே இத் தருணத்தில் மிகவும் அவசியமானது.
நடுநிலையாளர் கேஜ்ரிவால்:
அர்விந்த் கேஜ்ரிவால், கடந்த 2013-ம் ஆண்டு ரே பரேலியில் மவுலானா தக்கூர் ராஜா கானை சந்தித்தார். அப்போது, ஆம் ஆத்மி கட்சியையும், கேஜ்ரிவாலையும் நஸ்ரின் கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து நஸ்ரின் கூறும்போது, "மவுலானா, ஒரு பிரிவினைவாதி என்பதை எடுத்துரைத்தேன். அதனை கேஜ்ரிவால் புரிந்து கொண்டார். தனது தவறை திருத்திக் கொண்டுள்ளார். அதன் காரணமாகவே ஷாஹி இமாம் ஆதரவுக் கரத்தை புறக்கணித்துள்ளார். இதற்காக கேஜ்ரிவாலையும், அவரது குழுவினரையும் நான் பாராட்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார் tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: