செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

அதிமுகவினர் ஸ்ரீரங்கத்தை தக்கவைக்க வேண்டி பணமழை! பன்னீர்செல்வம் நேரடி .......

 முதல்வர் பன்னீர்செல்வம், திருச்சிக்கு வந்து, கட்சி நிர்வாகிளுடன், இடைத்தேர்தல் பற்றி ஆலோசனை நடத்தினார். அதன் பின், தேர்தல் பிரச்சார வியூகத்தையே, அ.தி.மு.க.,வினர் மாற்றினர். மீண்டும் தொகுதியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள, அ.தி.மு.க.,வினர், மூன்று இலக்க தொகையை, நான்கு இலக்க தொகையாக, வாக்காளர்களுக்கு கொடுக்கத் துவங்கினர். கடந்த, இரண்டு நாட்களாக, இரவு நேரங்களில் வீடு வீடாக சென்று, கவரில் பணத்தை போட்டு கொடுத்துள்ளனர்.அதை பிரித்து பார்த்த, ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்கள், இன்ப அதிர்ச்சியடைந்தனர். கவரில் இருந்தது, இரண்டு, 1,000 ரூபாய் தாள்கள். தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் ஓரங்கட்டும் விதத்தில், ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வரை கவரில் வைத்து கொடுத்திருந்தனர்.
 திருச்சி, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், இலவசங்களை கொடுத்த நிலை மாறி, ஒரு ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வரை, வீடு வீடாக சென்று பட்டுவாடா செய்வதாக, தகவல் வெளியாகி உள்ளது. கரை வேட்டி கட்டாமல், பேன்ட் சட்டையுடன் சென்று, அரசியல்வாதிகள் பணம் பட்டுவாடாவை செய்வதை, தடுக்க முடியாமல், தேர்தல் பிரிவு அதிகாரிகள் திணறி வருகின்றனர்.


ஸ்ரீரங்கம் தொகுதிக்கு, வரும், 13ம் தேதி, இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க.,வில் வளர்மதி, தி.மு.க.,வில் ஆனந்தன், பா.ஜ.க.வில் சுப்ரமணியம், மார்ச்சிஸ்ட் சார்பில், அண்ணாதுரை ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் அறிவிப்பு, வெளியான பின், ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, உதிரி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட, ஒட்டுமொத்த அரசியல் பிரபலங்களும் இங்கு முகாமிட்டுள்ளனர்.ஜனநாயக உரிமைகளில் பிரதானமாக கருதப்படும் ஓட்டுரிமையை, எவ்வித முறைகேட்டுக்கும் இடமளிக்காமல், நேர்மையாக பதிவு செய்ய வேண்டும், என்பதற்காக, தேர்தல் ஆணையம், பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. மேலும், மக்களின் ஓட்டுரிமையை முறைப்படுத்த, தேர்தல் ஆணையம், அதிகாரிகளை நியமித்து கண்காணிக்கிறது.

தி.மு.க., ஆட்சிக்காலத்தில், திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலுக்கு, அழகிரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில், திருமங்கலத்தில் இடைத்தேர்தல் பணி மேற்கொள்ளப்பட்ட போது, வீடுகளில் உள்ளவர்களின் ஓட்டுக்களை கணக்கிட்டு பணம் கொடுத்ததாக, தகவல் வெளியானது. அந்த தேர்தலில், 90 சதவீதத்துக்கும் அதிமான ஓட்டு பதிவானதால், அந்த இடைத்தேர்தல், நாட்டில் உள்ள அரசியல் கட்சினர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இந்த அதிரடி தேர்தல் வியூகத்தை, அடுத்து வந்த இடைத்தேர்தல் மட்டுமின்றி, உள்ளாட்சி தேர்தல்களிலும், அரசியல் கட்சியினர் பின்பற்றத் தொடங்கினர். ஒவ்வொரு தேர்தலுக்கும், பிரதான கட்சிகள், போட்டி போட்டுக் கொண்டு, வாக்காளர்களுக்கு மறைமுகமாக பணம் கொடுப்பதை வாடிக்கையாக்கின. இதன் உச்சகட்டமாக ஏற்காடு இடைத்தேர்தலில், ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வரை கொடுக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்லிலும், வீட்டில் உள்ள வாக்காளர்களை கணக்கிட்டு, ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வரை பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால், மீண்டும் தொகுதியை தக்க வைக்க, அ.தி.மு.க.,வை சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவருமே தொகுதியில் முகாமிட்டு, தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அ.தி.மு.க.,வுக்கு, ஈடு கொடுப்பதற்காக, தி.மு.க.,- பா.ஜ., கட்சியினரும் ஸ்ரீங்கம் தொகுதிக்குள், தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொகுதி முழுவதும் பரவலாக, வாடகைக்கு வீடுகளை பிடித்து தங்கிய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கட்சி பொறுப்பாளர்கள், முதல் கட்டமாக, அ.தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று, வேட்டி, சேலைகளை வினியோகித்தனர்.

இதையறிந்த, தி.மு.க.,வினர், தங்கள் கட்சிக்கு ஓட்டளிப்பார், என்று கருதியவர்களுக்கு மட்டும், 200 ரூபாய் வரை பணம் பட்டுவாடாவை துவக்கினர். ஒரு புறம் அரசியல் கட்சிகள் சார்பில், தினமும் காலை, மாலை வேளைகளில் பிரச்சாரம் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டாலும், மறுபுறம் இரவு நேரங்களில், கரை வேட்டி கட்டாமல், பேன்ட் சட்டையுடன் சென்று, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணியும் நடந்தது. அ.தி.மு.க., இலவசத்தையும், தி.மு.க., தரப்பில் பணத்தையும் கொடுக்கத் துவங்கியதால், திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த, 6ம் தேதி இரவு, முதல்வர் பன்னீர்செல்வம், திருச்சிக்கு வந்து, கட்சி நிர்வாகிளுடன், இடைத்தேர்தல் பற்றி ஆலோசனை நடத்தினார். அதன் பின், தேர்தல் பிரச்சார வியூகத்தையே, அ.தி.மு.க.,வினர் மாற்றினர். மீண்டும் தொகுதியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள, அ.தி.மு.க.,வினர், மூன்று இலக்க தொகையை, நான்கு இலக்க தொகையாக, வாக்காளர்களுக்கு கொடுக்கத் துவங்கினர். கடந்த, இரண்டு நாட்களாக, இரவு நேரங்களில் வீடு வீடாக சென்று, கவரில் பணத்தை போட்டு கொடுத்துள்ளனர்.அதை பிரித்து பார்த்த, ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்கள், இன்ப அதிர்ச்சியடைந்தனர். கவரில் இருந்தது, இரண்டு, 1,000 ரூபாய் தாள்கள். தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் ஓரங்கட்டும் விதத்தில், ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வரை கவரில் வைத்து கொடுத்திருந்தனர்.

இதனால், தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டியிட்ட, தி.மு.க.,வினரும், தேசிய கட்சி என்ற கவுரவத்தை காப்பாற்ற வேண்டும், என்பதற்காக களம் இறங்கிய பா.ஜ.,வினரும், அ.தி.மு.க.,வின் அதிரடியை தாக்குப்பிடிக்க முடியாமல், திணறிப் போயின.அதே போல், கண்டும் காணாமல் பணம் பட்டுவாடா இருக்கும், என்று மெத்தனமாக இருந்த உள்ளூர் அதிகாரிகளும், அ.தி.மு.க.,வின் அதிரடியால் ஆடிப்போய் உள்ளனர். தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக, கிட்டத்தட்ட, பணம் பட்டுவாடா முடிந்து, வெளி மாவட்ட நிர்வாகிகள் தொகுதியை காலி செய்து விட்டு, புறப்பட தயாராக இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம், உள்ளூர் போலீஸாரை நம்பாமல், எல்லை பாதுகாப்பு படையை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது.இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், ஓட்டுக்கு, 1,000 ரூபாய் வரை கொடுக்கும், என்று எதிர்பார்த்த வாக்காளர்களுக்கு, 2,000 ரூபாய் வரை கிடைத்துள்ளதால், திக்குமுக்காடிப் போய் உள்ளனர். தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வரை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதால், ஆயிரம் ரூபாய் தாள்கள் தான், அதிகம் புழக்கத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை: