புதன், 11 ஜூன், 2014

இமாச்சல் வெள்ளபெருக்கு மரணங்கள் மணல்மாபியாவின் கைங்கரியம் ! அறிவிப்பின்றி அணையை திறந்தது ஏன் ?

இமாசலப் பிரதேசம் மாநிலம் பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கின் பின்னணியில் மணல் கடத்தல் கும்பலே காரணமாக உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில், தெலுங்கானா பகுதியை சேர்ந்த 25 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தற்போதைய நிலையில், அவர்களில் 6 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களின் உடல்களை மீட்க கடற்படையை சேர்ந்த ஆழ்கடல் வீரர்களின் உதவி நாடப்பட்டுள்ளது.
ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கிற்கு, அணையின் கதவு எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி திறக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

ஆற்றங்கரையில் அதிக அளவில் மணல் கடத்தல் நடத்தப்படுவதாகவும், மணல் கடத்தலுக்கு வசதியாக தண்ணீர் பிரிந்து செல்லும் பாதையில், நெடுஞ்சாலைக்கு டிராக்டர்கள் செல்ல வழி ஏற்படுத்தும் சாலைகள் அமைக்கப்பட்டிருப்பது ஆகியவையே 25 மாணவர்கள் உயிரிழக்க காரணமானது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் 'தி இந்து'விடம் கூறுகையில், "மாநில அரசு இங்கு நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க முயற்சி எடுக்கவில்லை. இங்கு இயங்கும் மணல் கடத்தல் கும்பலுக்கு ஒருவகையில் அரசும் துணை போகின்றது" என்றார்.
மேலும், "இங்கிருக்கும் அதிகாரிகள் சிலர் லஞ்சம் பெற்றுக்கொண்டு, மணல் கடத்தல் கும்பலுக்கு உதவி செய்ய, அணையின் நீர் வெளியீட்டை அதிக வேகத்தில் திறந்து விடுகின்றனர். மற்ற இடங்களில் இருக்கும் அணைகளில் இதுபோன்ற அளவிலான வேகத்தில் நீர் வரத்து இருக்காது.
அதிக வரத்து நீரால், ஆற்றில் மணல் அதிக அளவில் ஒதுங்கும், இது மணல் கொள்ளைக்கு உதவி செய்யும். இதனால் இங்கு இது போன்ற செயல்கள் இங்கு வழக்கமாக நடக்கிறது. ஆற்றில் ஒதுங்கும் மண்ணை இரவு நேரங்கள் பெரிய முதலாளிகள் திருடுகின்றனர்" என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆற்றிலிருந்து நீர் அதிவேகத்தில் வெளியாதை இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில், அறிவிப்பு பலகைகள் வைக்கப்படாதது ஏன் என்பது குறித்த கேள்வியும் இந்த விவகராத்தில் எழுந்துள்ளது.
இது தவிர நீர் வரத்து அதிவேகத்தில் இருக்கும் சமயத்தில், சுற்றுலா தலமான இந்த பகுதியில் விபத்து தடுப்பு அதிகாரிகளின் பணிகளும் நடைபெறுவது இல்லை என்ற மற்றொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
குலு மாவட்டத்தில் லார்ஜி அணைத் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த பணிக்காகவோ அல்லது அணையை ஒட்டிய பகுதிகளில் வாழும் மக்களுக்காகவோ எந்த விதமான பாதுக்காப்பு வசதியும் இங்கு இருக்கவில்லை. இந்த அணையை சுற்றி சுமார் 5 கி.மீ தூரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைப்படாமல் உள்ளது. இதனால் இங்கு வாழும் கிராம மக்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தில்தான் எப்போதும் உள்ளனர் என்று மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் கூறி உள்ளனர்.
அணையிலிருந்து நீர் திறந்திவிடப்பட்டதற்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்படாததும், அரசின் அக்கறையின்மையுமே 25 மாணவர்கள் உயிர் பலியானதுக்கு காரணம் என்று லார்ஜி அணை அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: