சனி, 14 ஜூன், 2014

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு ! முதல்வர் கடிதம் !

சென்னை: 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் எதுவும், மத்திய அரசிடம் இல்லை' எனக் கூறிய மத்திய அமைச்சர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பிரதமருக்கு விரிவான கடிதமும் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: இம்மாதம், 3ம் தேதி, உங்களை சந்தித்து, கோரிக்கை மனு கொடுத் தேன். அதில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்கு முறை குழுவை உடனடியாக அமைக்க வேண்டியதன் அவசியத்தை, வலியுறுத்தி இருந்தேன். உங்களிடம் பேசும் போதும், அவற்றின் தேவையை வலியுறுத்தினேன். இது தொடர்பாக, மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையையும், புரிந்து கொண்டேன். இதற்குஇடையில், கர்நாடகாவைச் சேர்ந்த, மத்திய உரத்துறை அமைச்சர் அனந்தகுமார், பத்திரிகையாளர்களிடம், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் எதுவும், மத்திய அரசிடம் இல்லை' எனக் கூறினார்.  நீதி்மன்றத்தை சாதாரண ஜெயலலிதா எனும் நபரே மதி்ப்பதி்ல்லை சடடமன்றம் மதி்க்கப் போகிறதா?
'கால அவகாசம் தேவை': இதை மறுத்து, தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை மீறி, உங்களை பாதுகாக்கும் வகையில், கருத்து தெரிவித்தேன். 'மத்தியில், புதிய அரசு சமீபத்தில் தான் அமைந்து உள்ளது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, கால அவகாசம் தேவை. பிரதமரோ, நீர் ஆதாரத் துறை அமைச்சரோ, தமிழகத்திற்கு எதிராக, கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை' என, தெரிவித்தேன். இரண்டு நாட்கள் கழித்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் இல்லை' என, தெரிவித்தார். உங்களுக்கு பாதுகாப்பாக நான் கருத்து தெரிவிக்கும் நிலையிலும், மத்திய அமைச்சர்கள் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்தனர். இச்சூழலில், கர்நாடக மாநில முதல்வர் தலைமையில், அனைத்து கட்சியினர் உங்களை சந்தித்து, கோரிக்கை மனு கொடுத்ததால், வேறு வழியின்றி இந்த கடிதத்தை எழுதுகிறேன். கர்நாடக முதல்வர் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில், தவறான தகவல்கள் இடம் பெற்று உள்ளன. என் தீவிர முயற்சிகளுக்கு பிறகே, காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, 2013 பிப்ரவரியில், மத்திய அரசின் அரசிதழில் வெளியானது. இறுதித் தீர்ப்பை அமல்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்கு முறை குழு அமைக்க வேண்டும் என, வலியுறுத்தினேன். ஆனால், மத்தியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, அரசியல் காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்கவில்லை.
நெல் சாகுபடி பாதிப்பு: காவிரி மேலாண்மை வாரியம், இறுதித் தீர்ப்பின் ஒரு பகுதி. இதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்கு முறை குழு செயல்பாடுகள் குறித்து, தீர்ப்பில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த, இரண்டு ஆண்டு களாக, நீர்ப்பாசனத்திற்காக, மேட்டூர் அணையை, ஜூன், 12ம் தேதி திறக்க முடியவில்லை. இந்த ஆண்டும், போதிய தண்ணீர் இல்லாததால், குறிப்பிட்ட தேதியில் திறக்க முடிய வில்லை. இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில், குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், மாநிலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது; இது நாட்டிற்கும் இழப்பு. கர்நாடக மாநில முதல்வர் கொடுத்துள்ள மனுவில், தவறாக வழி நடத்தும் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்தாமல் இருக்க, கர்நாடக அரசு எடுக்கும் நடவடிக்கைகள், அரசியல் சட்டத்திற்கு எதிரானது; இதை ஊக்குவிக்கக் கூடாது. சுப்ரீம் கோர்ட் மற்றும் காவிரி நடுவர் மன்றம், கர்நாடக அரசு வாதத்தை ஏற்கவில்லை. எனவே, இறுதித் தீர்ப்பை அமல்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்கு முறை குழுவை, உடனடியாக அமைக்க வேண்டும்.

காவிரி பிரச்னை தொடர்பாக, நேற்று முன்தினம், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அளித்த பேட்டி, தமிழக மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நான் மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்கு முறை குழுவை அமைத்து, தமிழக விவசாயிகளை காக்க வேண்டும். இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.31 பக்க கடிதம்: காவிரி பிரச்னையில், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க வலியுறுத்தி, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா, 31 பக்க கடிதத்தை எழுதி உள்ளார். அக்கடிதத்தில், கர்நாடக முதல்வர் அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு, அதற்கு தமிழக அரசின் விளக்கத்தையும் அளித்துள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை: