புதன், 11 ஜூன், 2014

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள்: விரைவில் இந்தியா ரஷ்யா ஒப்பந்தங்கள்

மாஸ்கோ: இந்தியா, கடந்த 2010ல் நிறைவேற்றிய, அணு உலை பாதிப்பின் போது பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு சட்டத்தை, ரஷ்யா ஏற்றுக் கொண்டதால், தமிழகத்தின் கூடங்குளத்தில், மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் அமைப்பது விரைவில் கைகூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அணு உலைகளில் விபத்து ஏற்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்பீடு எந்த விதத்தில் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து, 2010ல், மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டத்தை ஏற்க ரஷ்யா முன்வராததால், கூடங்குளத்தில் அமைய இருந்த, 3 வது மற்றும் 4 வது அணு உலை திட்டங்கள் தாமதமாகி வந்தன.


இந்நிலையில், ரஷ்யாவின், 'ரோசாடம் ஸ்டேட் கார்ப்பரேஷன்' எனப்படும், அணு உலை தொடர்பான நிறுவனத்தின் துணை தலைமை இயக்குனர், கிரில் கோமரோவ் நேற்று கூறியதாவது:இந்தியா ஏற்படுத்தியிருந்த சட்டம், எங்களுக்கு சவாலாக உள்ளது. அதில் உள்ள சர்ச்சைக்குரிய அம்சங்கள் குறித்து, இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, தீர்வு கண்டுள்ளோம். அதையடுத்து, சில முன்ஒப்பந்தங்களை செய்துள்ளோம். இறுதி ஒப்பந்தங்கள் பின்னர் தான் முடிவாகும்.இந்திய அரசு தரப்பிலிருந்தும், அணுசக்தி கமிஷனிடம் இருந்தும் பதிலை எதிர்நோக்கியுள்ளோம். அது போல், கூடங்குளம் பகுதியின் பூகம்ப வாய்ப்பு குறித்தும் ஆராய்ந்த பிறகு, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான செயல்திட்டம், ஜூலையில் தயாராகும். இவ்வாறு, அவர் கூறினார்.

இதையடுத்து, கூடங்குளத்தில், 3 வது மற்றும் 4 வது அணு உலை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் உருவாகியுள்ளது தெரிய வருகிறது. அங்குள்ள முதலாவது அணு உலையில், சமீபத்தில், முழு அளவான, 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டில், 2 வது உலை செயல்படத் துவங்கும். அதையடுத்து, சில ஆண்டுகளில்,3 வது மற்றும் 4 வது உலைகள் அமைக்கப்பட்டு, செயல்படத் துவங்கும். dinamalar.com

கருத்துகள் இல்லை: