செவ்வாய், 10 ஜூன், 2014

கடல் உயிரினங்கள் 40 ஆண்டுகளில் அழியும் அபாயம்'

சென்னையில் நடைபெற்ற உலகப் பெருங்கடல் தின விழாவில் பேசிய கயா அமைப்பின் இயக்குநர் பி. நம்மாழ்வார்.சென்னையில் நடைபெற்ற உலகப் பெருங்கடல் தின விழாவில் பேசிய கயா அமைப்பின் இயக்குநர் பி. நம்மாழ்வார். கடலின் உயிர் சூழல் பாதிப்பால் வரும் 40 ஆண்டுகளில் கடலில் கிடைக்கும் மீன்கள் முற்றிலும் அழிய வாய்ப்புள்ளதாக கயா அமைப்பின் இயக்குநர் பி.நம்மாழ்வார் கூறினார்.
சென்னை எழும்பூரில், கடல் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம், மீன் தர மேலாண்மை மற்றும் வளங்குன்றா மீன் வள பாதுகாப்பு இணையம் ஆகியவை இணைந்து உலகப் பெருங்கடல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
இந்த ஆண்டு "ஒன்றுபடும்போது பெருங்கடல்களை பாதுகாக்கும் ஆற்றலை நாம் பெறுவோம்' என்பதை கருப்பொருளாகக் கொண்டு "உலகக் கடல்கள் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கயா தன்னார்வ அமைப்பின் இயக்குநர் பி.நம்மாழ்வார் பேசியது:

உலக மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் தங்களது புரத உணவுத் தேவையில் ஐந்தில் ஒரு பங்கினை கடலில் இருந்து பிடிக்கப்படும் மீன் மற்றும் இதர கடல் உயிரினங்களில் இருந்தே பெருகின்றனர்.
கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், ஆலைக்கழிவுகள் உள்ளிட்டவற்றால் கடலின் பல்வேறு பகுதிகள் உயிர்வாழத் தகுதியற்றவையாக மாறிவிட்டன. தற்போது உயிர்வாழத் தகுதியற்றதாக 405 பகுதிகள் உள்ளன. இது அடுத்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயரும்.
கடலின் உயிர் சூழல் பாதிப்பால் பல வகை மீன்கள் அழிந்து விட்டன. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 40 ஆண்டுகளில் கடலில் கிடைக்கும் மீன்கள் முற்றிலும் அழிய வாய்ப்புள்ளது. பன்னாட்டு உணவு மற்றும் வேளாண்மைக் கழக கணக்கீட்டின்படி 50 சதவீத மீன்களின் இருப்பு முழுமையாகப் பிடிக்கப்படுகிறது. மீன்களின் இருப்பைப் பெருக்க வேண்டுமெனில் இளம் மீன்களைப் பிடிப்பதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.
பழவேற்காடு ஏரியின் தற்போதைய நிலை குறித்து திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் துரை மகேந்திரன் பேசுகையில், பழவேற்காடு ஏரியை நம்பி 20 ஆயிரம் மீனவர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். பறவைகள் சரணாலயமாகவும் இந்த ஏரி விளங்குகிறது.
எல்லையில் அமைந்துள்ளதால் இந்த ஏரியைப் பராமரிப்பதில் தமிழகமும், ஆந்திரமும் உரிய கவனம் செலுத்தவில்லை. இதனால் தூர்வாரப்படாமல் ஏரியின் ஆழம் குறைந்து கொண்டே வருகிறது. ஆங்காங்கே மணல் திட்டுகளும் உருவாகிவிட்டன. மேலும், சென்னையிலுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேரும் கழிவு நீரும் இந்த ஏரியை பாழ்படுத்தி வருகிறது என்றார்.
கடல் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.முருகன், தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் தமிழகன், தென்னிந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். dinamani.com

கருத்துகள் இல்லை: