மதம் மாறும் முடிவை பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கும் சேஷசமுத்திரம் தாழ்த்தப்பட்டோர்
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபுரத்திற்கு அருகே அமைந்துள்ள அகரம் சேஷசமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக் கொடுமையின் காரணமாகப் புத்த மதத்திற்கு மாறப் போவதாக அறிவித்துள்ளனர். இக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இழைத்து வரும் தீண்டாமைக் கொடுமைகளுள் முக்கியமானது அவர்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதாகும். “பொதுக் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைந்து வழிபடுவதற்கு உரிமை கிடையாது. அக்கோவிலின் தேர் சேரிக்குள் நுழையாது” என அக்கிராமத்தில் இன்று வரையிலும் தீண்டாமை பச்சையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இத்தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட சாதியினர், காலனியில் தமக்கென ஒரு கோயிலைப் பத்தாண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொண்டனர்; அக்கோயிலுக்கென ஒரு தேரையும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினர். இந்தத் தேர் கோயிலிலிருந்து புறப்பட்டு தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பைச் சுற்றிவிட்டு மீண்டும் நிலைக்கு வர வேண்டுமென்றால், ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதிக்கும் காலனிக்கும் பொதுவாக உள்ள தார்ச்சாலை வழியாகச் சென்றுவர வேண்டும். இந்த நிலையில் ஆதிக்க சாதிவெறியர்கள், “தாழ்த்தப்பட்டோர் வழிபடும் சாமி பொதுச்சாலையில் தேரில் வரக்கூடாது; வேண்டுமானால் அவர்கள் வழிபடும் அம்மன் சிலையை மாட்டு வண்டியில் வைத்து இழுத்து வரலாம்” எனக் கட்டுப்பாடு விதித்து, தாழ்த்தப்பட்டோர் வழிபடும் சாமியையும் தீண்டத்தகாததாக ஆக்கினர்.
2012-இல் இத்தேரோட்டம் குறித்து வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது. அதன்பின் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆதிக்க சாதிவெறி பிடித்த கும்பலின் எதிர்ப்பை ஒடுக்காத தமிழக அரசு, கிராமத்தில் நிலைமை பதற்றமாக இருப்பதைக் காட்டி, தேரோட்டத்திற்குத் தடை விதித்தது. இந்தத் தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தாழ்த்தப்பட்டோர் வெற்றி பெற்றபோதும், ஆதிக்க சாதியினருக்குச் சாதகமாகவே அரசு நடந்துகொண்டதால் தேரோட்டத்தை நடத்த முடியவில்லை.
அம்மன் கோவில் தேர் தீண்டாமை" இந்த நிலையில் தமது வழிபாட்டு உரிமையை அங்கீகரிக்கக் கோரி தாழ்த்தப்பட்ட மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தத் தொடங்கினர். வழிபாட்டு உரிமையை மறுக்கும் ஆதிக்க சாதிவெறியர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் போட மறுக்கும் தமிழக அரசோ, உண்ணாவிரதமிருந்த 25 பெண்கள் உள்ளிட்டு 42 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. நீதிமன்றமோ தமது உரிமைக்காக அமைதியான முறையில் போராடிய அவர்களுக்கு உடனடியாகப் பிணை வழங்க மறுத்தது. இப்படிப் போராடிப் போராடி தோற்கடிக்கப்பட்ட நிலையில்தான், அத்தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்திலிருந்து விலகி புத்த மதத்தில் இணையப் போவதாக அறிவித்துள்ளனர். “எங்கள் காலத்தில் தீண்டாமையை ஒழிக்க முடியாது; மதம் மாறினால் எங்கள் சந்ததியினராவது நிம்மதியாக இருப்பார்கள்” என விரக்தியோடு கூறுகிறார், அக்கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சியப்பன்.
சேஷசமுத்திரம் தமிழகத்தின் விதிவிலக்கல்ல. தமிழகமெங்கும் இன்றும் பல்வேறு வடிங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதை; தீண்டாமை பிரச்சினையில் அரசு தாழ்த்தப்பட்டோரின் முதுகில் குத்துவதை; தமிழகத்தில் சமூக நீதி கோலோச்சுவதாகக் கூறப்படும் மோசடித்தனத்தைப் பளிச்சென அம்பலப்படுத்திக் காட்டும் இன்னுமொரு உதாரணம். ஆனால், இந்த உண்மை மூடிமறைக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டோர் நாடகக் காதல் நடத்துவதாகவும்; வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் ஆதிக்க சாதியினர் கூப்பாடு போட்டு வருவது எத்தகையதொரு மோசடி!vinavu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக