ஜெயலலிதா முதலமைச்சர் என்ற முறையில் அந்த அதிகாரிகளின் மாநாட்டில்
பேசியது உண்மையென்றால் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பதவியின் பொருட்டு
தன் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு 13 கிலோ தங்கத்தில்
கவசம் அணிவித்து வந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. இதற்காக சென்னையில்
இருந்து தனி விமானத்தில் மதுரை பறந்து, அங்கிருந்து பசும்பொன்னுக்கு
ஹெலிகாப்டரில் சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். தங்கக் கவசத்தின்
மதிப்பு 4.70 கோடி ரூபாய் .
இது அ.தி.மு.க சார்பில் செலவழிக்கப்பட்டாலும், ஜெயலலிதா அன்றைக்கு
சென்று வந்த செலவு, பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டத்தினருக்கான
குவார்ட்டர்&பிரியாணி செலவு மற்றும் இன்னபிற செலவீனங்களையும்
சேர்த்தால் நிறைய வரும். கேட்டால் இது முதலமைச்சரின் புரோட்டோகால்
அடிப்படையில் தவிர்க்க முடியாமல் செய்யப்படும் செலவு என்று ‘ஜனநாயகத்தை’
ஆராதிக்கும் அறிஞர்கள் மல்லுக் கட்டுவார்கள். சரி, புரோட்டோகாலுக்கு
இருக்கும் மரியாதை அரசின் மதச்சார்பின்மைக்கும், சாதி சார்பின்மைக்கும்
கிடையாதா?சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழக மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பேசியது நினைவிருக்கிறதா? “சாதி, இன, மத, சமூக ரீதியாக துவேசத்தையும், பிளவுகளையும், மோதல்களையும் தூண்டிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக அரசின் ‘நீதி நெறி பிறழா சத்திய ஆவேசத்தை’ முழங்கினார் ஜெயா. இதன்படி பார்த்தால் நாட்டில் சாதிய பிளவுகளையும், மோதல்களையும் மற்றவர்களை விட ஜெயாதான் தூண்டி வருகிறார். இதற்கு இந்த தேவர் தங்க கவச திக் விஜயம் ஒரு சான்று.
பசும்பொன் முத்துராமலிங்கத்தை யார் ஆராதிக்கிறார்கள்? பொதுவில் தேவர் சாதி வெறியர்கள் – சங்கங்கள்தான் அவரை ஒரு சாதிக்குரிய கடவுளாக சந்தைப்படுத்தியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களும், தேவரால் எதிர்க்கப்பட்ட நாடார் முதலான மற்ற சாதிகளும், இன்னபிற ஜனநாயக – புரட்சிக அமைப்புகளும் முத்துராமலிங்கத்தை சாதிவெறியராகத்தான் கருதுகின்றனர். ஆனால் பொதுவில் ஆதிக்கசாதிக்கு வாக்கு அதிகம் என்பதால் பசும்பொன் தேவரை அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் தேசியத் தலைவர் என்று வெறும் வாயிலில் பந்தல் போட்டு தேவர் சாதி வெறியர்களை மகிழ்விக்கிறார்கள். இப்படி ஒருவரின் இருப்பே ‘டிஸ்பியூட்டு’க்குள் இருக்கும் போது அரசு இவர்களே சொல்லிக்கொள்ளும் விளக்கப்படியும் அந்த தலைவர் குறித்து குறைந்த பட்சம் எந்த நிலைப்பாடும் எடுக்காமல் அல்லவா இருக்க வேண்டும்?
முக்கியமாக தென்மாவட்டங்களில் முத்துராமலிங்கத்தின் காலத்திலும் சரி, இப்போதும் சரி ஆதிக்க சாதியான தேவர் சாதிக்கும், தாழ்த்தப்பட்ட பள்ளர் அல்லது ‘தேவேந்திர குல வேளாளர்’ சாதிக்கும் முரண்பாடும், கலவரங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. 90-களின் பிற்பகுதியில் துவங்கி பல மாதங்கள் நீடித்த கொடியங்குளம் கலவரத்தின் பாதிப்புகளே இன்னமும் மறைந்திருக்கவில்லை. இடையில் தேவர் குருபூஜை என்று அந்த துவேசத்தையும், கலவரத்தையும் தேவர் சாதியைச் சேர்ந்த சில சங்கங்கள் அரசு, கட்சிகளின் உதவியுடன் அதிகப்படுத்தியிருக்கின்றன.
இந்நிலையில் ஒரு ‘நடுநிலைமையான’ அரசு என்ன செய்ய வேண்டும்? இவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும். அரசு சார்பிலோ இல்லை ஆளும் கட்சி சார்பிலோ இத்தகைய ஆதிக்க சாதி ஆராதானைகளை செய்வது மாபெரும் குற்றமாகும். ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மக்கள் கொண்டாடுவதை ஒரு அரசும், கட்சியும் பின்பற்றுவதை விட சாதி மோதலை தூண்டிவிடும் விசயம் வேறு ஏது? நியாயமாக குருபூஜைகளை தடை செய்ய வேண்டிய அரசும், அந்த தடையை ஆதரித்திருக்க வேண்டிய கட்சிகளும் நேர்மாறாக பூஜைகளுக்கு ஷிப்டு போட்டு தலைவர்களையும், பரிசுகளையும் அனுப்பி வருகின்றன.
ஆகவே ஜெயலலிதா தான் முதலமைச்சர் என்ற முறையில் அந்த அதிகாரிகளின் மாநாட்டில் பேசியது உண்மையென்றால் அதிமுகவின் பொதுச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காடுவெட்டி குருவுக்கு ஒரு நீதி, சசிகலா கட்சிக்கு ஒரு நீதி என்று இருக்க முடியாது. தமிழ்நாட்டில் சாதிய முரண்பாடுகளையும், துவேசத்தையும் பெரும் அளவில் தூண்டி வருவதில் முன்னணி வகிப்பது அ.தி.மு.க கட்சிதான் என்பதற்கு வேறு விளக்கம் தேவையில்லை.
ஆனால் அரசு என்ற முறையில் இப்படி ஆதிக்க சாதி சார்பாக களமிறங்க ஜெயலலிதாவுக்கு ஒரு கணக்கு இருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. வாக்குகளை அறுவடை செய்தாக வேண்டும். பெரும்பான்மை தேவர் சாதி ஓட்டுக்கள் அ.தி.மு.க.வுக்குத்தான் போகும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும், அந்த உறவை இன்னும் இறுக்கமாக்கிக் கொள்ள இந்த கவசத்தை அணிவித்திருக்கிறார். தவிரவும், கடந்த ஆண்டு தேவர் ஜெயந்தியின்போது ஏற்பட்ட வன்முறைகளில் மூன்றுக்கும் மேற்பட்ட முக்குலத்தோர் இளைஞர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். அது ஒரு எதிர்மறை விளைவை உண்டாக்கி, தனது செல்வாக்குத் தளத்தை சரித்துவிடக்கூடாது என்ற ஜெயலலிதாவின் எண்ணமும் இந்த கவசத்தின் பின்னே நிச்சயம் இருக்கும்.
ஏற்கெனவே, பரமக்குடியில் தலித்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஜெயலலிதா அரசின் போலிஸ் ஏழு தலித்களின் உயிரைப் பறித்தது. அந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சம்பத் கமிஷன், ‘துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தவிர காவல்துறைக்கு வேறு வழியில்லை. சொல்லப்போனால் அன்றைய துப்பாக்கிச் சூட்டின் மூலம், அதைவிட பெரிய கலவரம் ஒன்றை தடுத்துள்ள காவல்துறையின் செயல் பாராட்டத்தக்கது’ என்று கூறியது. காவல்துறையின் வெறியாட்டத்தை அடியோடு மூடிமறைத்த, அரசின் சாதிவெறி ஆதரவை தூக்கிப்பிடித்த அந்த அறிக்கையை கடந்த தேவர் ஜெயந்தியின்போது வெளியிட்டு முக்குலத்தோரை அகம் குளிர வைத்த ஜெயலலிதா, இப்போது தேவர் சிலையின் தேகம் குளிருமே என்று தங்கச் சொக்காய் மாட்டிவிட்டுள்ளார். தங்கக் கவசம் தந்த தங்கத் தலைவி, கவசம் தந்த காவிய நாயகி என்ற விளம்பர வாசகங்களை வரும் தேர்தலில் எதிர்பார்க்கலாம்.
ஆனால் இராமநாதபுரம் போன்ற ஆதிக்க சாதி கட்டுமானம் இறுக்கமாக உள்ளப் பகுதியில், அரசின் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் பெரும் விளைவுகளை உண்டுபண்ணக் கூடியது. ஆதிக்கச் சாதிக்கு ஆதரவான அ.தி.மு.க அரசின் இந்த நடவடிக்கை அவர்களின் சாதிவெறிக்குக் கொம்பு சீவி விடுவது போல் உள்ளது. இதன் எதிர்விளைவாக எதிர் தரப்பான பள்ளர் சாதி இயக்கங்களும் தங்களின் சாதி பிடிமானத்தை இன்னும் கெட்டியாக்கிக் கொள்கிறது.
இறுதியில் பகையையும், வெறுப்பையும் என்றென்றைக்குமானதாக மாற்றும் இத்தகைய சிலைகளும், கவசங்களும் அப்பகுதியின் உழைக்கும் மக்களை நிம்மதியிழக்கச் செய்கிறது. கலவரங்களும், வன்முறைகளும் மூளும்போது அதில் பலியாவது இத்தகைய எளிய உழைக்கும் மக்களே. அவர்களின் மனதில் படிந்திருக்கும் சாதிவெறியை எளிதில் தூண்டிவிட்டு இறையாகச் செய்து விடுகின்றனர். தற்போதைய தங்கக் கவசத்திலும் இத்தகைய வன்முறை கூறுகள் அதிகம் உள்ளதை இப்போதேக் காண முடிகிறது.
மொத்தம் மூன்று பாகமாக இருக்கும் இந்த தங்கக் கவசம் தற்போது தேவர் சிலையின் மீது மாட்டப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் போலீஸ் பாதுகாப்புக்கு நிற்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் கவசம் அகற்றப்பட்டு, வங்கி லாக்கரில் வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தியின்போது கழற்றிக் கொண்டுவந்து மாட்டிவிட்டு, எல்லோரும் பூ தூவி முடித்ததும் எடுத்துச் சென்று மறுபடியும் லாக்கரில் வைத்துவிடுவார்கள். இருக்கும் பிரச்னை போதாது என்று இது வேறு.
ஏற்கெனவே பழனி நவபாஷான சிலையை சுரண்டிவிட்டார்கள்; திருச்செந்தூர் முருகனின் தங்கவேலைத் திருடி விட்டார்கள் என்று ஏகப்பட்ட பஞ்சாயத்து. அதையே இன்னும் கண்டுபிடித்தப் பாட்டைக் காணோம். இப்போது இதுவேறு. கவசத்தை சுரண்டிவிட்டார்கள், வளைத்துவிட்டார்கள் என்று வரும் ஆண்டுகளில் எவனாவது ஏழரையைக் கூட்டி அது ஒரு பிரச்னையாக உருவெடுக்கும் சாத்தியங்கள் அதிகம்.
இத்தகைய சில்லறைப் பிரச்சினைகளே மாபெரும் கலவரங்களை தூண்டிவிடும் என்பதிலிருந்தே அரசும், கட்சிகளும் சாதி சார்பாக இருக்க கூடாது என்பதை புரியவைத்துவிடும்.
இந்த கவசத்தை யாருடைய கோரிக்கையின் பெயரால் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார் என்பது முக்கியமானது. 2010-ம் ஆண்டு தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த ஜெயலலிதா பசும்பொன் சென்றபோது அங்கு வந்த கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள், ‘தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாராம். அதை தொடர்ந்துதான் இந்த கவசம்.
‘இந்த காமாட்சிபுரி ஆதீனம் என்ற காமெடி பீஸை நாம் முன்பின் கேள்விப்பட்டது கூட இல்லையே.. ஜெயலலிதாவையே ஆட்டுவிக்கிற அளவுக்கு அவ்வளவுப் பெரிய அப்பாடக்கரா?’ என்று விசாரித்தால் கோவையில் இவர் மீது நிலமோசடி, நிதிமோசடி என்று பல பஞ்சாயத்துகள் சொல்லப்படுகின்றன. ஆதீனம் என்றாலே மோசடி என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
இந்த ஆதீனம் கோரிக்கை விடுத்தாராம்… அதை ஏற்றுக்கொண்டு இந்தம்மா தங்க கவசம் கொடுத்தாராம். பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கடுமையாகப் போராடினார்கள். அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாதது மட்டுமல்ல… போராடியவர்களை மிரட்டி பின்வாங்கச் செய்தது ஜெயலலிதாவின் அரசு. ஆனால் தேவர் சிலைக்குத் தங்க கவசம் அணிவிக்கச் சொல்லி ஒரு அனாமத்து சொன்னதும் உடனடியாக அதை நிறைவேற்றிவிட்டார். காரணம் ஒரு அனாமத்து கோரியிருந்தாலும் தென்தமிழக ஆதிக்க சாதி வாக்குகள் லம்பாக கிடைக்குமென்ற சுயநலத்தான் இதற்கு அடிப்படை. பால் விவசாயிகள் போன்று வர்க்க, தொழில் ரீதியாக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராடாமல் சாதி ரீதியாக பிரிந்து சண்டையிட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த ஆதிக்க சாதி ஆராதனைகள் பயன்படுமில்லையா?
ஏற்கனவே தென்மாவட்டங்களில் இருக்கும் பல்வேறு சிலைகளெல்லாம் இரும்புக் கூண்டிற்குள் பூட்டப்பட்டு போலீசால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சிலையை அவமதித்து விட்டார்கள் என்று அன்றாடம் ஒரு கலவரம் நடக்கும் போது தங்க சிலை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்? நாளைக்கு போட்டியாக மற்ற தலைவர்களுக்கு பிளாட்டினக் கவசம், வைர அங்கி, அதற்கு வசூல், கோரிக்கை, அரசு, கட்சிகள் ஏற்பு, பின்னர் அதைக் காணோம் என்று கிளப்பினால் தமிழக அரசின் ஒரே செயல்பாடாக சிலை பாதுகாப்பு பணி ஆகிவிடாதா?
சென்ற நூற்றாண்டின் இறுதியில் மாவட்டங்களுக்கும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் தலைவர்கள் பெயரை வரிசையாக வைத்து பின்னர் அது ஆதிக்க சாதிகளுக்கிடையேயான அடையாளச் சண்டையாக மாறியது நினைவிருக்கிறதா? இறுதியில் அரசு அந்த பெயர்களை ரத்து செய்து இனி பெயரே வேண்டாமென்று முடிவெடுத்ததும் ஜெயலலிதாவுக்கு தெரியாதா? இப்படி பட்டுத் தெரிந்து கொண்ட பிறகும் இப்படி சாதிவெறிக்கு பட்டுக்குஞ்சம் கட்டும் செயலை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? உழைக்கும் மக்களின் ஒற்றுமையை விட ஆதிக்க சாதிகளின் வாக்குகளை அள்ளிக் கொள்வது, அதுவும் சாதிவெறியை தூண்டிவிட்டு திரட்டுவதை எல்லா சாதிகளையும் சேர்ந்த உழைக்கும் மக்கள் கண்டிக்க வேண்டும்.
ஐந்து கோடி செலவழித்து தங்க கவசம் பூட்டுவதற்கு பதில் கல்லூரிகள், பூங்காக்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் முதலானவற்றை ஆரம்பித்திருக்கலாமே என்று ‘சேவ தமிழ்ஸ்’ முதலான தமிழார்வ அறிஞர் பெருமக்கள் அ.தி.மு.கவிற்கு வகுப்பு எடுக்கிறார்கள். குறிப்பிட்ட சாதி,மதவெறி குறித்த பிரச்சினைகள் வரும் போது ஆதிக்க சாதி, பெரும்பான்மை மதவெறியை கண்டித்தால் அந்த பிரிவு மக்களிடம் அந்நியப்படுவோம் என்று அந்தக்காலத்து போலிக் கம்யூனிஸ்டுகள் முதல் நேற்று முளைத்த திடீர்ப் புரட்சியாளர்கள் வரை செய்யும் பச்சையான சந்தர்ப்பவாதமே இது.
அதற்குத்தான் சிலைப் பிரச்சினையை திசை திருப்பி அப்துல் கலாம் டைப்பில் பொருளாதார நல்லெண்ண அபிப்ராயங்களாக கவலைப்படுகிறார்கள். அதன்படி இவர்கள் அம்மா குடிநீர், அம்மா அரிசி, அம்மா மருந்தகம், அம்மா உணவகம் போன்ற திட்டங்களுக்கு சுவரொட்டி அடித்து பாராட்டியிருப்பார்கள் போலும். மேலும் கோவில்களை விட கழிப்பறைகளே தேவை என்று மோடி சொல்லியிருப்பதை வைத்துப் பார்த்தால் இந்த சேவ தமிழ்ஸ் அறிஞர்கள் அவருக்கும் வாழ்த்து தெரிவிப்பார்களோ, தெரியவில்லை. மசூதியும் வேண்டாம், கோவிலும் வேண்டாம், பள்ளிகளே வேண்டும் என்று போலி கம்யூனிஸ்டுகளின் தமுஎகச கவிராயர்கள் எழுதிய கவிதைகளை, மில்லியன் கணக்கில் பார்த்த மண்ணில் சேவ்தமிழ்ஸ்சின் கவிதை ஆச்சரியமான ஒன்றல்ல.
இதில் நாம் கவனிக்க வேண்டியது இந்த விஷயத்தில் ஜெயலலிதா மட்டும்தான் குற்றவாளியா? போலி கம்யூனிஸ்டுகள் முதல் நேற்று முளைத்த சீமான் வரையிலும் யாரும் இதுகுறித்து ஒரு சொல்லும் சொல்லவில்லை. போலிக் கம்யூனிஸ்டுகளும் முத்துராமலிங்கத்தை வாக்கு வங்கி காரணமாக ஆதரிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காத்தான் அவரை ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்றெல்லாம் ஜெயா பேச முடிகிறது.
ஒட்டு மொத்தமாக தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் பசும்பொன் குருபூஜையில் முன்வரிசையில் இடம்பிடிக்கப் போட்டிப் போடுகின்றனர். இவர்கள் வேறு வேறு அணிகளில் இருக்கலாம். கட்சிக் கொடிகளின் வண்ணங்கள் மாறலாம். அவர்களின் சின்னங்கள் மாறலாம். ஆனால் ஆதிக்க சாதிவெறியை தூண்டி விட்டு குளிர்காயும் இவர்கள் அனைவரும் ஒரே அணிதான்.
இந்த மக்கள் விரோத அணியையும் என்றைக்கு தேவர் சாதி மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி உழைக்கும் மக்கள் புரிந்து கொள்கிறார்களோ அன்றுதான் தென்மாவட்டங்களில் உண்மையான சமூக நல்லிணக்கம் நிலவும்.
- வளவன் vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக