சனி, 22 பிப்ரவரி, 2014

ஆந்திராவின் புதிய தலைநகர் எது? அரசுக்கு துவங்கியது அடுத்த நெருக்கடி


ஐதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் உதயமாவது, உறுதியாகி விட்டதை அடுத்து, ஆந்திராவின் புதிய தலைநகர் எது என்ற பிரச்னை எழுந்து உள்ளது. 'தெலுங்கானா மாநிலம் உருவான, 45 நாட்களுக்குள், புதிய தலைநகர் எது என, அடையாளம் காணப்படும்' என, ஏற்கனவே அறிவித்துள்ளதால், மத்திய அரசின் கவனம், அதை நோக்கி திரும்பியுள்ளது.
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்து விட்டன. ஆந்திராவின், ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, பார்லிமென்டின் இரு சபைகளிலும், இந்த மசோதா
நிறைவேற்றப்பட்டுள்ளது.




ஒவ்வொரு நகரத்துக்கும்...:

இதன் மூலம், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியாக இருந்து வந்த தெலுங்கானா பிரச்னை முடிவுக்கு வந்தாலும், தெலுங்கானா அல்லாத ஆந்திர மாநிலத்துக்கான புதிய தலைநகரை அடையாளம் காண வேண்டிய, அடுத்த நெருக்கடி, அரசுக்கு எழுந்துள்ளது. 'தெலுங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கும், ஐதராபாத், பொதுத் தலைநகராக, 10 ஆண்டு இருக்கும். அதன் பின், ஐதராபாத், தெலுங்கானாவின் தலைநகராகி விடும். ஆந்திராவுக்கான புதிய தலைநகர், அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும். தெலுங்கானா மாநிலம் உருவான, 45 நாட்களுக்குள், ஆந்திராவுக்கான புதிய தலைநகர், அடையாளம் காணப்படும்' என, ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், மிகக் குறுகிய காலத்துக்குள், தலைநகரைத் தேர்வு செய்ய வேண்டிய, மிகப் பெரிய பிரச்னை, மத்திய அரசுக்கு எழுந்துள்ளது.


இதுகுறித்து, ஆந்திர மாநில அரசு வட்டாரங்கள் கூறியதாவது: விசாகப்பட்டினம், விஜயவாடா, கர்னூல், திருப்பதி ஆகிய நகரங்களில், ஏதாவது ஒரு நகரம், ஆந்திராவின் புதிய தலைநகராக தேர்வாகும் வாய்ப்பு உள்ளது. இந்த நகரங்கள் அனைத்துக்குமே, தலைநகராவதற்கான தகுதியுள்ளதுடன், ஒவ்வொரு நகரத்துக்கும் தனிச் சிறப்பும் உள்ளது. ஆந்திராவின் துறைமுக நகரமாகத் திகழும் விசாகப்பட்டினத்தில், ஏராளமான அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளன. கடற்படை கிழக்கு பிராந்திய பிரிவின் தலைமையகம், இங்கு தான் உள்ளது. இந்த நகரம், நாட்டின் கிழக்கு பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு கலாசாரங்கள் நிறைந்த பகுதியாகவும் விளங்குகிறது. விஜயவாடா தற்போது, ஆந்திராவின் வர்த்தக மற்றும் அரசியல் தலைநகரமாகத் திகழ்கிறது. நாட்டின் மற்ற நகரங்களை இணைக்கும் வகையிலான, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் உள்ளது. கிருஷ்ணா நதி அருகில் அமைந்து உள்ளதால், தண்ணீர் வளம் நிறைந்த பகுதியாகவும் உள்ளது.




திருப்பதி - விஜயவாடா...?

கடந்த, 1950களுக்கு முன், ஆந்திராவின் தலைநகராக திகழ்ந்தது, கர்னூல் நகரம். ஆனால், கடலோர பகுதிகளிலிருந்து விலகி, வெகு தூரத்தில் உள்ளது, இந்த நகரத்துக்கு பின்னடைவாக உள்ளது. திருப்பதி, உலகப் புகழ் பெற்ற ஆன்மிக தலமாக விளங்குகிறது. ஆந்திர மாநிலத்தின் ஓரத்தில் அமைந்துள்ளது, இதற்கு பின்னடைவாக உள்ளது. இதனால், அனைத்து தரப்பினரும் ஏற்கத்தக்க வகையிலான விஜயவாடா, ஆந்திராவின் புதிய தலைநகரமாக  தேர்வாவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால், விஜயவாடா - குண்டூர் இடையே, 800 ஏக்கர் பரப்பில், அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய தலைநகர் அமையும் என, தெரிகிறது. இதேபோல், விஜயவாடாவின் அருகேயுள்ள, மற்றொரு பகுதியும், தலைநகர் அமைப்பதற்கான தேர்வில் உள்ளது. இன்னும் சில நாட்களில், ஆந்திராவின் புதிய தலைநகர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மத்திய அரசு, வெளியிடும். இவ்வாறு, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன dinamalar.com

கருத்துகள் இல்லை: