திங்கள், 17 பிப்ரவரி, 2014

விமர்சனங்களை தவிடுபொடியாக்கிய திமுக ! முகத்தில் அறைந்தது போல் எதிரிகளை அசர வைத்த திருச்சி மாநாடு


சென்னை: இனி அவ்வளவுதான்.. முடிவுரை எழுதப்படுகிறது என்றெல்லாம் திமுகவை நோக்கி முன்வைக்கப்பட்ட அத்தனை விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கி தமிழக அரசியல் களத்தை தகிக்கவும் இதர கட்சிகளை தவிக்கவும் வைத்திருக்கிறது அந்தக் கட்சியின் திருச்சி மாநாடு. ஸ்பெக்ட்ரம் ஊழல், காங்கிரஸுடன் ஊசலாட்டமான உறவு, உட்கட்சி பூசல், பலமற்ற கூட்டணி ஆகியவற்றால் லோக்சபா தேர்தலில் பலத்த தோல்வியைத் தான் திமுக சந்திக்கும் என்பது கருத்து கணிப்பு வெளியிட்ட ஊடகங்களின் முடிந்த முடிவாக இருந்தது. இந்த நிலையில்தான் திருச்சியில் திமுகவின் "திருப்புமுனை" மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆண்களுக்கு ரூ.50, பெண்களுக்கு ரூ.30 என தனிக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் இருந்தது. இந்த கட்டண அறிவிப்பை கண்டுகொள்ளாமல் பல லட்சக்கணக்கானோர் 2 நாள் மாநாட்டில் வெள்ளமென திரண்டு "யாருக்கு முடிவுரை?" என முகத்தில் அறைந்தார்போல் அரசியல் எதிரிகளை அசர வைத்திருக்கின்றனர் திமுக தொண்டர்கள்


திமுக எனும் பெருத்த மரத்தின் கிளைகளில் சில உதிரலாம்.. பட்டுப்போகலாம் ஆனால் அதன் ஆணிவேர் இப்படித்தான் ஆழ வேரூன்றிக் கிடக்கக் கூடிய வலு கொண்டது என்பதை திருச்சி மாநாடு நிரூபித்துள்ளது. இன்றைய நிலையில் இத்தனை லட்சம் தொண்டர்கள் திரண்டதை திமுக தலைவர்களே நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவுக்கு திருச்சி மாநாடு நிச்சயம் மிகப் பெரும் உந்துசக்திதான். அதுவும் உட்கட்சி குழப்பம் உச்ச நிலையில் இருக்கும்போதே இத்தனை லட்சம் பேரா என பிற கட்சிகளை அலற வைத்திருக்கிறார்கள். திமுக கொடுத்திருக்கும் இந்த அதிர்ச்சி வைத்தியம் அதிமுக, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் மாற்றத்துக்கு சுழிபோடலாம் என்றும் கூறப்படுகிற
பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி போன்றவை தற்போது உள்ளன. பாமகவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது பாஜக. தேமுதிகவுடன் பேச்சு நடத்தி டயர்ட் ஆனது தான் மிச்சம்.
அதிமுக தலைமையிலான அணியில் இடதுசாரிகள் இருக்கின்றன. இதைத் தவிர சரத்குமாரின் சமத்துவ கட்சி இடம்பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் திமுக காட்டியிருக்கும் "திராணி"யால் இந்த அணி சேர்க்கையில் மிகப் பெரிய மாற்றமே ஏற்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
பாரதிய ஜனதா அணியைப் பொறுத்தவரையில் இப்போதுள்ள கட்சிகளை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திப்பதால் வாக்குகள் சற்றே கூடுமே தவிர தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இல்லை. பாமகவும் வரவில்லை, தேமுதிகவும் வரப்போவதில்லை என்கிற போது.. அடுத்த வியூகத்தை வகுத்தாக வேண்டிய நிலையில் பாஜக இருக்கிறது
திரண்ட திமுக கூட்டத்தைப் பார்த்தால் தலா இரண்டு தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு தலா ஒரு இடத்தில் வெல்லப் போகும் இடதுசாரிகளை வைத்துக் கொண்டு நாற்பதும் நமதே என்ற முழக்கத்தை வென்றெடுக்க முடியுமா? என அதிமுகவும் யோசிக்கிறதாம்.. இதனால் புதிய கூட்டணிக்கான வியூகங்களை வகுக்க வேண்டும் என்பதில் அதிமுக முடிவாக இருக்கிறதாம்.
அதிமுக- பாஜகதான் "இயல்பான" கூட்டணியாக இருக்கும் என முன்னரே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதால் நாளைய பிரதமர் நாங்களே என்ற அதிமுக கூட்டணி அமைக்காமல் இடதுசாரிகளுடன் கரம் கோர்த்தது. அண்மையில் பாஜக 200 இடங்களுக்கு குறைவாக பெற்றால் சந்திரபாபு நாயுடுவை பிரதமராக்குவோம் என்று உறுதியளித்ததாக செய்திகள் வெளிவந்தன. இப்படி ஒரு வாய்ப்பு பாஜக அணியில் இருப்பதால் அதிமுக- பாஜக இடையே கூட்டணி அமைந்தால் என அதிமுகவும் பாஜகவும் யோசிக்க வாய்ப்பிருக்கிறது.
அப்படி அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தால் தம்முடன் இருக்கும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளை அப்படியே அந்த அணியில் ஐக்கியமாக்கிவிடவும் வாய்ப்பிருக்கிறது. இது சரிப்படாது என கருதினால் வழக்குகளை கைவிட்டு பாமகவை இழுக்கவும் அதிமுக முயற்சிக்கலாம்.
இப்படி அதிமுக, பாஜக அணியில் மாற்றம் ஏற்பட்டால் வேறுவழியின்றி இடதுசாரிகள் திமுக அணிக்கு திரும்பலாம். இதற்கு ஏதுவாகத்தான் என்னவோ இடதுசாரிகளின் மூன்றாவது அணி பற்றி கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தாரோ.
திமுக, இடதுசாரிகள் இணைந்தால் வேறு வழியின்றி தேமுதிக என்ன செய்யும்? என்ற கேள்விக்கு காலம் மட்டும்தான் பதில் சொல்ல முடியும். ஏனெனில் கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் தூக்கி தூர எறிந்துவிட்டு "தேர்தல் செலவு" பேரத்துக்காக ஓடிக் கொண்டிருக்கிற அந்த கட்சி எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படக் கூடிய நிலையில் தமிழகத்தில் அணிமாற்றங்கள் அரங்கேறத்தான் போகிறது என்பது மட்டும் உறுதியாகிறது. ஆக திருச்சி மாநாடு திமுகவுக்கு மட்டுமல்ல தமிழக அரசியலுக்கும் திருப்புமுனையாக அமைந்தாலும் ஆச்சரியமில்லை.

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: