வெள்ளி, 10 ஜனவரி, 2014

தேவயானி இன்று இந்தியா திரும்புகிறார்: அமெரிக்கா சட்ட பாதுகாப்பு வழங்கியது


தேவயானி இன்று இந்தியா திரும்புகிறார்: அமெரிக்கா சட்ட பாதுகாப்பு வழங்கியதுஅமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய துணை தூதராக பணியாற்றிய தேவயானி கோப்ரகடே விசா மோசடி மற்றும் பெண் ஊழியரின் சம்பள மோசடி புகார்களுக்காக அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க தூதர்களின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே தேவயானி மீதான வழக்கு விசாரணை வருகிற 13–ந்தேதி நியூயார்க் கோர்ட்டில் நடைபெறுவதாக இருந்தது. இந்த விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று நியூயார்க் கோர்ட்டில் தேவயானி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவின் கோரிக்கையை ஏற்று தேவயானிக்கு இந்த வழக்கில் இருந்து அமெரிக்கா முழு தூதரக விதிவிலக்கு அளித்து சட்ட பாதுகாப்பு வழங்கியுள்ளது.

இது தொடர்பான கடிதத்தை அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பிரீத் பாராரா மாவட்ட நீதிபதி ஷிரா ஷெயின்ட் லினுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதை தொடர்ந்து பெண் ஊழியர் சங்கீதா ரிச்சர்ட்டுக்கு விசா வாங்க மோசடி செய்தல் மற்றும் அதற்காக பொய் தகவல்கள் கொடுத்தல் என்ற 2 குற்றச்சாட்டுகள் தேவயானி மீது பதிவு செய்யப்பட்டன. மேலும் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்ல அனுமதியும் வழங்கப்பட்டது.
இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேவயானிக்கு அமெரிக்கா முழு தூதரக விதிவிலக்கு அளித்து சட்ட பாதுகாப்பு வழங்கியுள்ளதால் ஜி1 விசா கிடைத்துள்ளது.
எனவே, அவர் இன்று இந்தியா திரும்புகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா புறப்படும் முன் நியூயார்க் விமான நிலையத்தில் தேவயானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது. மற்றும் ஆதாரமற்றது. நான் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிருபிப்பேன் என்றார்.
மேலும், அவர் கூறும் போது எனது துறை மந்திரிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் என் பக்கம் நின்ற நாட்டு மக்கள், அரசியல் வாதிகள் மற்றும் சக தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
தேவயானி இந்தியா திரும்பினாலும் அவர்மீதான வழக்கு விசாரணை அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..maalaimalar.com

கருத்துகள் இல்லை: