தோற்றுப் போன அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் டாலர் அச்சடிப்பு
ஃபெடரல் ரிசர்வ் என்பது அமெரிக்காவின் மத்திய வங்கி. அமெரிக்க டாலர்கள் அச்சிடுவதும் இன்னும் பல பொறுப்புகளும் அதற்கு உண்டு. விலைவாசியை சீராக பராமரிப்பதும், அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உத்தரவாதப்படுத்துவதும் ஃபெடரல் ரிசர்வின் செயல்பாட்டு நோக்கங்கள் ஆகும்.சமீப ஆண்டுகளில் ஃபெடரல் ரிசர்வும் (மற்ற மத்திய வங்கிகளும்) பண அளவை அதிகரித்தல் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் (QE 1, 2, & 3), எல்டிஆர்ஓ, எஸ்எம்பி, டுவிஸ்ட், டார்ப், டிஏஎல்எஃப், என்று பல்வேறு பெயர்களில் பணத்தை அச்சிட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் வேலை இல்லாமையை குறைத்து, பொருளாதாரத்தை வேகப்படுத்த முயற்சிப்பதாக கூறுகின்றன. இந்த பணம் அச்சிடும் திட்டத்தின் தோல்வியையும், அந்த பணம் மக்களுக்கு கிடைக்காமல் வங்கிகளிடம் போய்ச் சேருவதையும் இந்த கட்டுரை விளக்குகிறது.
நூறு அமெரிக்க டாலர்கள்
$100 – உலகிலேயே அதிக அளவு கள்ளப் பணமாக சுற்ற விடப்படும் பணம். உலகை இயங்கச் செய்வது இதுதான்.
பத்தாயிரம் டாலர்கள்
$10,000 – ஒரு சிறப்பான விடுமுறை பயணத்துக்கோ, ஒரு பழைய கார் வாங்கவோ போதுமானது. இந்த பூமியில் வாழும் ஒரு சராசரி மனிதனுடைய ஒரு ஆண்டு உழைப்பின் மதிப்பை குறிக்கிறது.
பத்து லட்சம் டாலர்கள்
$10,00,000 – நீங்கள் நினைத்தது போல பெரிய தொகையாக இல்லை என்றாலும் இது ஒரு சராசரி மனிதரின் 92 ஆண்டு உழைப்பின் மதிப்புக்கு சமமானது.
பத்து கோடி டாலர்கள்
$10,00,00,000 – எந்த ஒரு நபருக்கும் போதும் போதும் என்ற அளவிலானது. ஒரு ஐஎஸ்ஓ/ராணுவ அளவிலான பலகை பெட்டியில் அடங்கி விடும். பெண் உட்கார்ந்திருக்கும் இருக்கை, $100 டாலர் நோட்டுகளால் ஆன $4.67 கோடி தொகையால் செய்யப்பட்டது.
$10 கோடி டாலர்கள் மூலம் ஒரு ஆண்டுக்கு $50,000 சம்பளம் பெறும் 2,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
கீழே வேலை தேடும் 2,000 பேர் நெருக்கமாக நிற்கிறார்கள்.
ஃபெடரல் ரிசர்வின் பொறுப்பு விலை ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி வேலையின்மையை குறைந்த மட்டத்தில் வைத்துக் கொள்வது.
பணத்தின் அளவை அதிகரிப்பது வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்ற அனுமானத்தின் கீழ் ஃபெடரல் ரிசர்வ் பணத்தை அச்சிடுகிறது.
$10 கோடி டாலர்கள் – 2000 பேருக்கு ஆண்டுக்கு $50,000 சம்பளத்தில் 2,000 பேருக்கு வேலை கொடுக்க போதுமானது.
100 கோடி டாலர்கள்
$100,00,00,000 – இவ்வளவு பணத்தை தனியாக வங்கியில் கொள்ளை அடிக்க முடியாதுதான்.
சுவையான தகவல் : $10 லட்சம் டாலர்களின் எடை சரியாக 10 கிலோ.
அந்த பலகைகளின் மீது வைக்கப்பட்டுள்ள பணத்தின் எடை 10 டன்கள்.
ஃபெடரல் ரிசர்வ் – அமெரிக்காவின் மத்திய வங்கி
ஃபெடரல் ரிசர்வின் கைவசம் தோண்டத் தோண்ட குறையாத பணம் இருக்கிறது. உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பான அது உலகத்தின் சேம நாணயமான அமெரிக்க டாலரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. 2007-08 ஆண்டில் செய்தது போல டாலர் கடன்களுக்கு தான் வசூலிக்கும் பிரதான வட்டி வீதத்தை மாற்றுவதன் மூலம் உலக பொருளாதாரத்தையே மண்டியிட வைக்க அதனால் முடியும்.
பணம் அச்சிடுதல் எப்படி நடக்கிறது : புதிதாக அச்சடிக்கப்பட்ட பணம் என்பது உண்மையில் கணினியில் சேர்க்கப்படும் ஒரு எண்தான்; நிஜ பணத்தை அச்சிடுதல் செலவு பிடிக்கும் வேலை. புதிதாக அச்சிட்ட பணத்தை வினியோகிப்பதற்கு ஃபெடரல் ரிசர்விடம் ஒரு நடைமுறை இருக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் கடன்களை ‘கையகப்படுத்துவதன்’ மூலம், அதாவது வங்கிகளிடமிருந்தும், ஊக வணிக மற்றும் பிற நிதி நிறுவனங்களிடமிருந்தும் கடன்களை வாங்குவதன் மூலம் அது பணத்தை வினியோகிக்கிறது. இந்த முறையில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த கடன் பணம் வாடிக்கையாளர் திருப்பி செலுத்துவதற்கு முன்பே வங்கிகளுக்கு வந்து விடுகிறது. இது பொருளாதாரத்தில் புதிய பணத்தை புகுத்துவதன் மூலம் செய்யப்படுகிறது.
இந்தக் கடன்களுக்கு வட்டி கிடைப்பதால், அவை “சொத்துக்கள்” என்று கருதப்படுகின்றன. ஃபெடரல் ரிசர்வ் அதன் வாங்கும் திட்டங்கள் மூலமாக பல வகைப்பட்ட கடன்களை (சொத்துக்களை) வாங்குகிறது. அவற்றில் அரசாங்கக் கடன்கள் (அரசு பத்திரங்கள், பங்குகள், கடன் பத்திரங்கள், etc), அடகுக் கடன்கள் (அடகு அடிப்படையிலான கடன்கள் – வீட்டுக் கடன்கள்), கல்விக் கடன்கள், கடன் அட்டைகள், கார் கடன்கள் மற்றும் பல உண்டு.
அதிகம் தெரிந்திராத உண்மை : எல்லா பணமுமே கடன்தான். எல்லா பணமுமே கடனாகத்தான் உருவாக்கப்படுகிறது. ஃபெடரல் ரிசர்வில் “சேமநிதி” வைப்புகளை போடுவதன் வங்கிகள் பணத்தை (மொத்த பண உருவாக்கத்தில் 90%+) உருவாக்குகின்றன. ஒரு வங்கி ஃபெடரல் ரிசர்வில் 10 லட்சம் டாலர் பணத்தை வைப்பு நிதியாக சேர்த்தால், 10% சேமநிதி என்ற வரையறுப்பின் அடிப்படையில், அது வாடிக்கையார்களுக்கு 1 கோடி டாலர் வரை கடனாக கொடுக்க முடியும். இந்த கடன் என்பது கணினியில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் எண்களை சேர்ப்பதுதான். இது பகுதி சேமநிதி வங்கிமுறை என்று அழைக்கப்படுகிறது.
தமது வைப்புக் கணக்கில் உள்ள நிதியை விட 10 மடங்கு அதிகம் பணத்தை கடனாக கொடுத்திருக்கும் வங்கிகளின் கையிருப்பை விட அதிக பணத்தை வாடிக்கையாளர்கள் எடுக்க வரும் போது, அதாவது ‘வங்கி சரிவு’ ஏற்படும் போது, இறுதிக் கட்ட கடன் கொடுக்கும் அமைப்பாக ஃபெடரல் ரிசர்வ் செயல்படுகிறது. தன்னிடம் இல்லாத பணத்தை கடனாக கொடுப்பதை அனுமதிக்கும் இந்த அமைப்பை ஃபெடரல் ரிசர்வ் பாதுகாக்கிறது. ஃபெடரல் ரிசர்வ் ஒரு தனியார் வங்கி; தனியாருக்கு சொந்தமானது; தன்னுடைய 300 தனியார் பங்குதாரர்களைத் தவிர அரசாங்கத்துக்கோ வேறு யாருக்குமோ பதில் சொல்லத் தேவையில்லாத ஒரு அமைப்பு.
இது குழப்பமாக இருக்கலாம். பணம் உருவாக்கும் முறை பள்ளி, கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை என்பதால், பலருக்கு இந்த அமைப்பு எப்படி செயல்படுகிறது என்ற புரிதலே சுத்தமாக இல்லை. இன்றைய பொருளாதார பாட புத்தகங்கள் கீனிசிய கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. — “இன்னும் ரொக்கத்தை அச்சிடுங்கள்” என்று வங்கிகளுக்கு சொந்தமான மெக்ரா ஹில் போன்ற பெரு நிறுவனங்களால் எழுதப்பட்டவை. இந்த அமைப்பிலிருந்தும், இந்த அமைப்பை நீங்கள் புரிந்து கொள்ளாமலிருப்பதிலிருந்தும் வங்கிகள் சம்பாதிக்கின்றன. பணம் உருவாக்கப்படுவதன் கோட்பாட்டைப் பற்றிய பல வீடியோக்களும் இணைய தளங்களும் உள்ளன.
ஆழம் காண முடியாத பணம் எடுக்கும் குழி.
1,300 கோடிக்கும் அதிகமான டாலர்கள் பொருளாதாரத்துக்குள் எடுத்துச் செல்லப்பட தயாராக இருப்பதை நீங்கள் இங்கு பார்க்கிறீர்கள். 10 கோடி டாலர்களாலான ஒவ்வொரு பலகையும் மிகச்சரியாக 1 டன் எடையுடையது (பலகையை சேர்க்காமல்). படத்தில் காட்டப்பட்டுள்ள லாரியில் 20 டன் பணத்தை எடுத்துக் கொண்டு போகலாம். ஒரு லாரியில் ஏற்றக் கூடிய சட்டபூர்வமான சுமை எடை பொதுவாக 22 முதல் 25 டன் ஆகும்.
பண அளவை பெருக்குதல் 3 (QE3) – பணம் அச்சிடுவதற்கான அலங்காரமான பெயர். 2012-ல் மாதத்துக்கு $4,000 கோடி.
ஃபெடரல் ரிசர்வ் 2012-ன் எஞ்சிய மாதங்களில் மாதம் $4,000 கோடி அச்சிடவிருக்கிறது.
செப்டம்பர் 2012-ல் பெடரல் ரிசர்வ் அதன் 3-வது பண அளவை பெருக்குதல் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டத்தை ஆரம்பித்தது.
இந்த திட்டத்தின் கீழ் ஃபெடரல் ரிசர்வ் 2012-ல் மாதம் $4,000 கோடி மதிப்பிலான அடகுக் கடன்களை (வீட்டுக் கடன்கள்) சந்தையிலிருந்து வாங்கியதன் மூலம் அந்த தொகையை பொருளாதாரத்துக்குள் செலுத்தியது.
ஒரு மாதத்துக்கு $4,000 கோடி என்பது ஆண்டுக்கு $50,000 சம்பளத்திலான 96 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க போதுமானது. துரதிர்ஷ்டவசமாக, கூடுதல் பணம் கூடுதல் வேலைகளாக மாறுவதில்லை. ஊக்குவிப்பு திட்டத்தின் நோக்கத்தின்படி புதிதாக அச்சிடப்பட்ட பணம் நுகர்வோருக்கு கடனாக கொடுக்கப்படவில்லை. மாறாக வங்கிகளிடமே தங்கி விடுகின்றது. புதிதாக அச்சிடப்பட்ட பணத்தை வங்கிகள் பங்குகளில் முதலீடு செய்து துரித லாபம் ஈட்டுகின்றன. அதன் மூலம் பங்குச் சந்தை உயர்கிறது. சிறு தொழில் பிரிவுகளுக்குள் நிதியை செலுத்தும் எஸ்பிஏ கடன் பத்திரங்களுக்கு பணம் பயன்படுத்தப்படவில்லை.
பண அளவை பெருக்குதல் 3 (QE3) 2013-லும் தொடர்கிறது. 2013-ல் மாதத்துக்கு $8,500 கோடி
மேலே சொல்லப்பட்டது 2013-ல் ஃபெடரல் ரிசர்வ் அச்சிடவிருக்கும் டாலர்களின் அளவை குறிக்கிறது. ஃபெடரல் ரிசர்வ் 2013-ல் $1 லட்சம் கோடி அச்சிட உத்தேசித்துள்ளது.
2013-ல் ஒரு மாதம் அச்சிடப்படும் தொகையை $4,000 கோடியிலிருந்து $8,500 கோடியாக அதிகரிக்க உள்ளது. வீட்டுக் கடன் பத்திரங்கள் $4,000 கோடி அளவிலும், 10-30 ஆண்டுகளுக்கான அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களை $4,500 கோடி அளவிலும் நிதி நிறுவனங்களிடமிருந்து வாங்குவதன் மூலம் இதை செய்யவுள்ளது. “இதன் மூலம் அமெரிக்க அரசின் வரவு செலவு பற்றாக்குறையில் சுமார் பாதி அளவை 2013-ல் ஃபெடரல் ரிசர்வ் பணமாக மாற்றியிருக்கும்.”
இது ஒரு ஆண்டுக்கு $50,000 சம்பளத்திலான 2 கோடி வேலை வாய்ப்புகளை அந்த ஆண்டில் உருவாக்குவதற்கு சமமாகும்.
2013 இறுதியில் ஃபெடரல் ரிசர்வின் நிதி நிலை ஏடு : $4 லட்சம் கோடி
மேலே விளக்கியது போல, ஃபெடரல் ரிசர்வின் நிதி நிலை ஏடு என்பது அது நிதிச் சந்தையில் வாங்கிய (அங்கிருந்து அகற்றிய) சொத்துக்களின் மதிப்பு. அதன் மூலம் நிதிச் சந்தை தூண்டி விடப்படுகிறது. 2012-10-06 நிலவரப்படி, ஃபெடரல் ரிசர்வ் கடன் சந்தையில் 27.2%-ஐ கைவசம் வைத்திருக்கிறது.
என்றாவது ஒரு நாள் ஃபெடரல் ரிசர்வ் சொத்துக்களின் வாங்குவதை நிறுத்தி விட்டு அவற்றை விற்க ஆரம்பிக்க வேண்டும். தவறினால், பணவீக்கமும் விலைவாசி நிலையின்மையும் தலையெடுக்க ஆரம்பித்து விடும். இந்த எதிர்திசை நகர்வு நிகழும் போது அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24%-ஐ குறைத்து விடும். ஃபெடரல் ரிசர்வின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பாக ஆகி விடும். ஏனெனில், சட்டப்படி அதன் பொறுப்புகளான விலைவாசி சமநிலை மற்றும் அதிகபட்ச வேலை வாய்ப்பு உருவாக்குவது இவற்றுடன் இது முரண்பட ஆரம்பிக்கிறது.
ஃபெடரல் ரிசர்வின் பொருளாதார மாதிரிகள் இப்போது பலன்றறு போயிருக்கின்றன. அதன் மாதிரிகளின்படி 2013 செப்டம்பரில் “வெடித்துக் கிளம்பும் பணவீக்கம்” நடந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி நடக்கவில்லை.
வெடித்துக் கிளம்பும் பணவீக்கம் நிகழாமல் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, பெரிதும் அறியப்படாத ஆனால் பிரம்மாண்டமான நிழல் வங்கி அமைப்பு. இந்த அமைப்பில் ‘கடன் பணம்’ வங்கிகளால் வங்கிகளுக்காக உருவாக்கப்படுகிறது, உண்மை பொருளாதாரத்துக்குள் நுழைவதில்லை. அதனால் பணவீக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
இந்த நிழல் வங்கி அமைப்பு 2008 முதல் ஊக வணிக நிலைப்பாடுகளை திருப்பி வருகிறது. இதன்படி மற்றவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க சொத்துக்களை விற்று நிதி திரட்ட வேண்டும். இந்த புதிய பணம் ஃபெடரல் ரிசர்விலிருந்து வருகிறது, எனவே இப்போது வங்கிகளின் உண்மையான நிதி நிலை ஏட்டில் நுழைகின்றது. அது துரித லாபம் சம்பாதிப்பதற்காக பங்குச் சந்தைக்குள் போடப்படுவதால், பங்குச் சந்தைகள் உயர்கின்றன. நுகர்வோர் இந்த நடைமுறையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
நிழல் வங்கி அமைப்பு ஸ்திரப்படுவதற்கு ஃபெடரல் ரிசர்வ் குறைந்த பட்சம் $3.9 லட்சம் கோடி அச்சிட வேண்டியிருக்கும்.
வால் வீதிக்கு நல்வரவு
இங்குதான் ஃபெடரல் ரிசர்வின் புதிதாக அச்சிடப்பட்ட பணம் வந்து சேர்கிறது. எங்களுடைய நிதிச் சந்தை கருவிகளின் சூதாட்ட விடுதி பக்கத்தை படித்து வால் வீதி பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
வால் வீதி ஆக்கிரமிப்பு, இந்த முறை பணம் ஏற்றப்பட்ட லாரிகளால் ஆக்கிரமிப்பு.
வால் வீதிக்கு நல்வரவு, சுதந்திர சந்தையின் தலைநகரத்துக்கு நல்வரவு. இன்றைக்கு அது கன்டெயினர் லாரிகளால் நிரம்பி வழிகிறது.
$16,000 கோடி மதிப்பிலான 2012-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான வங்கியாளர்களின் ஊக்கத் தொகை ஃபெடரல் ரிசர்விலிருந்து 80 சரக்கு லாரிகளில் வந்திருக்கிறது. 2012-ல் பெரும் எண்ணிக்கையிலான தானியங்கி சுமை தூக்கிகள் மாதம் $4,000 கோடிக்கான ஊக்குவித்தல் தொகையை அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளான ஜேபி மார்கன் சேஸ், சிட்டி பேங்க், பேங்க் ஆஃப் அமெரிக்கா, கோல்ட்மேன் சாக்ஸ், எச்எஸ்பிசி, வெல்ஸ் ஃபார்கோ, மார்கன் ஸ்டேன்லி, ஸ்டேட் ஸ்ட்ரீட் ஃபைனான்சியல் மற்றும் நியூயார்க் மெலன் வங்கி ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் இறக்கிக் கொண்டிருக்கின்றன.
2013-ன் ஊக்குவித்தல் தொகையான (QE3) $1 லட்சம் கோடி வலது புறம் கட்டிடத்துக்கு அருகில் கடைசி கட்டிடமாக ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
பணம் அச்சிடுவதன் மூலம் செய்யப்படும் அடுத்தடுத்த பொருளாதார உந்துதல்கள் (QE1, QE2, QE3) குறைந்து வரும் தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன, அது ஃபிபனாசி சூத்திரத்தை பின்பற்றுவது போல தோன்றுகிறது. இதன் பொருள் என்னவென்றால், ஃபெடரல் ரிசர்வ் தொடர்ந்து அடுக்கு வீதத்தில் பணம் அச்சிடும் நிரந்தர சுழற்சியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதன் மூலம்தான் இதே பங்குச் சந்தை சாதனையையும் பணவீக்கத்தையும் பராமரிக்க முடியும்.
தீர்ப்பு : QE4 உத்தரவாதம் பெற்றுள்ளதால் லாரி ஓட்டுனர்களுக்கும், தானியங்கி சுமை தூக்கி இயக்குனர்களுக்கும் வால் வீதியில் தொடர்ந்து வேலை உத்தரவாதம் இருக்கும்.
ஃபெடரல் ரிசர்வ் அச்சிடும் பணம் மக்களின் கையில் போய் சேருவதில்லை, மாறாக வங்கிகளுக்கு நேரடியாக போய்ச் சேருகிறது. அவர்கள் வழியாக அது பங்குச் சந்தைக்குப் போய்ச் சேர்ந்து சொத்து மதிப்புகளை ஊதிப் பெருக்குகிறது. இது டவ் ஜோன்ஸ் மற்றும் எஸ்&பி பங்குக் குறியீட்டு எண்களை மேலே உயர்த்துகிறது, ஆனால் அமெரிக்க பொருளாதாரத்தின் முக்கிய நடவடிக்கைகளான ஆள் எடுப்பதையும், நுகர்வோர் செலவுகளையும் அதிகரிப்பதில்லை.
QE3-யில் அச்சிடப்பட்ட பணம் ஆண்டுக்கு $50,000 சம்பளத்துடன் கூடிய 2.04 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க போதுமானது. ஆனால், அந்தப் பணம் வால் வீதிக்கும் பங்குச் சந்தை சூதாட்டத்துக்கும் போய்ச் சேர்ந்தது.
நன்றி :
- தமிழாக்கம்: செழியன் vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக