வியாழன், 17 அக்டோபர், 2013

மோடியின் மிகப்பெரிய பொய்: தின்னவும் மாட்டேன், தின்ன அனுமதிக்கவும் மாட்டேன்”

 பாபுபாய் பொக்ரியாmodi-gujarat-poster-2bமே காதா பி நஹி, ஔர் கானே தேதா பி நஹி” – “நான் தின்னவும் மாட்டேன், தின்ன அனுமதிக்கவும் மாட்டேன்” என்பது உத்தமர் மோடியின் ஊழல் எதிர்ப்பு உதார்களில் ஒன்று.
சுண்ணாம்புக் கல் திருடன் பாபுபாய் பொக்ரியா
மோடியின் தளபதிகளில் ஒருவரான விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பாபுபாய் பொக்ரியா, சுண்ணாம்புக் கற்களை திருட்டுத்தனமாக வெட்டி விற்று அடித்த கொள்ளை 54 கோடி. குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்துவிட்டது போர்பந்தர் நீதிமன்றம். தீர்ப்பு வந்தது சென்ற ஜூன் மாதம். தண்டிக்கப்பட்ட திருடனான பொக்ரியாவை, மோடி இன்னமும் அமைச்சர் பதவியில்தான் வைத்திருக்கிறார். (மோடியின் அன்பு சகோதரி மேடம்! நோட் திஸ் பாயின்ட்)
மோடியின் மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி. குஜராத்தில் 58 நீர்த்தேக்கங்களில் மீன்பிடிக்கும் உரிமையை விற்று 400 கோடி சுருட்டியவர். உத்தமர் மோடி வழக்கை விசாரிக்காமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தார். மீன் வித்த காசு நாத்தமாய் நாறியபோதும் அந்தக் குற்றவாளியை மீண்டும் அமைச்சராகவும் ஆக்கினார். சோலங்கி மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளித்தார். அதை எதிர்த்து மோடி உயர் நீதிமன்றம் போனார்; தோற்றார். வழக்கு விசாரணை தொடங்கி விட்டது. அதனால் என்ன, சோலங்கி அமைச்சராகவும் தொடர்கிறார்.
இந்த இரண்டும் வெறும் சாம்பிள் மட்டும்தான்.

2012 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற குஜராத் பாஜக எம்.எல்.ஏ க்கள் மொத்தம் 115 பேரில் 86 பேர் (அதாவது 75%) கோடீசுவரர்களாம். 2007 இல் 31% எம்எல்ஏ க்கள்தான் கோடீசுவரர்களாக இருந்திருக்கிறார்கள். மோடி விகாஸ் புருஷ் (வளர்ச்சி நாயகன்) அல்லவா? அதான் ஐந்தே ஆண்டுகளில் அதி பயங்கர வளர்ச்சி!
மொத்தப்பேரும் வெறும் களவாணிப் பயல்கள்தான் என்று பாஜகவை யாரும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. 32 எம்எல்ஏக்கள் கொலை, ஆள் கடத்தல், வன்புணர்ச்சி, திருட்டு, போர்ஜரி, ஆள்மாறாட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட சகலவிதமான குற்றங்களிலும் கைது செய்யப்பட்டு வாய்தாவுக்கு போய் வந்து கொண்டிருப்பவர்கள்.
நரோதா பாட்டியா வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, மாயா கோத்னானியை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக்கினார் மோடி. அம்மையாருக்கு இப்போது 28 ஆண்டு சிறை. ஜாமீன் கிடைக்காத காரணத்தால் அவர் அமைச்சர் பதவியில் தொடர முடியவில்லை.
அடுத்த பிரபல புள்ளி மோடியின் வலது கரமான அமித் ஷா. இவர் சோரப்தீன் ஷேக், துளசி பிரஜாபதி போலி மோதல் கொலை வழக்குகளில் அக்யூஸ்டு. அடுத்து இஷ்ரத் ஜகான் போலி மோதல் கொலை வழக்கில் உள்ளே போகவேண்டியவர். இடையில் ஜாமீனில் வெளியே வந்து உ.பி யில் கலவரத்தை தூண்டிக் கொண்டிருக்கிறார்.
மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி
மோடியின் அமைச்சரான கொலைக் குற்றவாளி மாயா கோத்னானி (வலது)
அடுத்து, அமித் ஷாவுடன், மோடியும் உள்ளே போவதற்கு போதுமான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் இருப்பதால், அறிஞர் அருண் ஜேட்லி அரண்டு போய், மன்மோகன் சிங்குக்கு கண்ணீர்க் கடிதம் எழுதியிருக்கிறார்.
மீன்வளத்துறை அமைச்சர் சோலங்கி, மோடியின் போர்ப்படைத்தளபதி என்பது குறிப்பிடத்தக்கது. 400 கோடியை சுருட்டியது மட்டுமின்றி, அவர் மீது 47 கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. அனில் சந்திர ஷா என்ற எம்எல்ஏ மீது 2 கொலை கேஸ், 2 ஆள்கடத்தல் கேஸ்கள்; ஜேதாபாய் ஆகிர் என்ற எம்.எல்.ஏ மீது ஒரு வன்புணர்சி வழக்கு, ஒரு ஆள் கடத்தல் வழக்கு – இப்படிப் போகிறது பாஜக எம்எல்ஏக்களின் தகுதிப் பட்டியல்.
மோடியின் அடுத்த முக்கியத் தளபதி ஜேதாபாய் பர்வாத். இவர் மோடியின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பு. கோடிக்கணக்கில் செலவு செய்து மோடியின் சத்பவனா உண்ணாவிரதத்துக்கு ஆள் பிடித்து கூட்டம் சேர்த்தவர். 2012 சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரசுக்கு ஓட்டுப் போட்ட குற்றத்துக்காக மக்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தி கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட மாவீரன்.
கைதானவுடனே அப்போலோ ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டார். கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் அப்போலோவிலிருந்து “எஸ்” ஆகிவிட்டார். இவருக்கு காவல் இருந்த ஒரு டிஎஸ்பி, ஒரு எஸ்ஐ, மற்றும் 8 போலீசார் கடமை தவறிய குற்றத்துகாக சஸ்பென்சனில் இருக்கிறார்கள். ஜேதாபாய்க்கு ஜாமீன் கிடைத்து எம்எல்ஏ வாக தொடர்ந்து மக்கள் தொண்டாற்றி வருகிறார்.
ஜேதாபாய் பர்வாத்- இன் இன்னொரு சிறப்பையும் இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது.
 ஜேதாபாய் பர்வாத்
எஸ்கேப் ஆன ஜேதாபாய் பர்வாத்
மார்ச் 2012 இல் குஜராத் சட்டமன்றம் நடந்து கொண்டிருந்தபோது இவரும், 3 கொலை கேஸ்கள் மற்றும் 3 கொலை முயற்சி கேஸ்களில் அக்யூஸ்டான சங்கர்பாய் சவுத்திரி என்ற இன்னொரு எம்எல்ஏவும் தம்மை மறந்த நிலையில் “ஐ பாடில்” புளு பிலிம் பார்த்துக் கொண்டிருக்க, அதனைக் கையும் களவுமாகக் கண்டு பிடித்த ஒரு நிருபர் சபாநாயகரிடம் புகார் செய்தார். கடுமையான ஆய்வுகள் நடந்தன. தாங்கள் பார்த்துக் கொண்டிருந்தது விவேகானந்தரின் படமே என்று இருவரும் சத்தியம் செய்தனர். விவேகானந்தர் நீலப்படத்தில் நடித்திருக்க வாய்ப்பில்லை என்பதால், அது நீலப்படமல்ல, விவேகானந்தரின் படம்தான் என்று முடிவு செய்யப்பட்டது. ஒழுக்கம் தொடர்பான விசயங்களில் தீயாக நடந்து கொள்பவரான மோடியும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.
குஜராத் பாஜக எம்எல்ஏ க்கள் மொத்தம் 115 பேர். அதில் 86 பேர் 2007-12 க்கு இடையில் அதிவேகமாக சொத்து சேர்த்த கோடீசுவரர்கள். 32 பேர் கொலை, வல்லுறவு, கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கிய கிரிமினல்கள். இவர்களில் மோடி மட்டும்தான் சொக்கத்தங்கம். இத்தனை கிரிமினல்களுக்கு மத்தியில் ஒரு மனிதன் நல்லொழுக்க சீலனாக தொடர்வது எத்தனை கடினமான விசயம்! எண்ணிப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது!
அப்பழுக்கற்றவனாக இருந்த போதிலும், அது குறித்து மோடி ஆணவம் கொண்டதில்லை. என்ன இருந்தாலும் தான் ஒரு சிறுபான்மை என்பதை உணர்ந்தவர் அவர். எனவே, பெரும்பான்மைக்கு மதிப்பளித்து, கேடி கிரிமினல்கள் அனைவருக்கும் 2012 சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கொடுத்து, அவர்களை எம்எல்ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் ஆக்கி அழகு பார்த்தவர்.
இப்படி “பெரும்பான்மை”க்கு கட்டுப்படுவதை ஜனநாயகப் பண்பு என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கலாம். மோடியைக் கேட்டுப் பாருங்கள், பெரும்பான்மையின் பண்பாடுதான் தேசியப் பண்பாடு, அதுதான் இந்துத்துவம் என்று விளக்கமளிப்பார்.

இந்துத்துவத்தின் சோதனைச்சாலையா, சும்மாவா? vinavu.com

கருத்துகள் இல்லை: