வெள்ளி, 18 அக்டோபர், 2013

நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை விசாரிக்க சி பி ஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு ! இன்னும் ஆயிரம் வருஷங்களுக்கு விசாரணை தொடரும்

புதுடில்லி: அரசியல் தரகர், நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலில், பல விவகாரங்கள் உள்ளன. '2ஜி' விவகாரம் மட்டுமின்றி, அரசியல், கம்பெனி
விவகாரங்கள் உட்பட பல முறைகேடுகள் தொடர்பான அம்சங்கள் அடங்கியுள்ளதால், அது குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது, பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும், இடைத்தரகராக செயல்பட்டவர் நீரா ராடியா. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெளியாகி, அந்தப் பிரசனை வலுவடைந்ததும், நீரா ராடியாவின் பன்முகத் தொடர்பும், அதில் நடந்த விவாதங்களும், நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பின.
நடவடிக்கைகளில் சந்தேகம்:
'2ஜி' விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் நேரடியாக கண்காணிக்கத் துவங்கியது. அதன் பின் அரசியல் தரகர் நீரா ராடியாவின் நடவடிக்கைகள் அதிக சந்தேகத்தை எழுப்பின. அதைஅடுத்து, அவரும், சி.பி.ஐ., விசாரணை வளையத்தில் வந்த பின், திடுக்கிடும் பல தகவல்கள் வந்தன. அரசியல் ஊழலில், 'நீரா ராடியா டேப் விவகாரம்' என்று பேசுமளவுக்கு, இவரது டெலிபோன் பேச்சு பரிமாற்றங்களின், சில பகுதிகளும் ரகசியமாக கசிந்தன. இவர் குறுகிய காலத்தில், 300 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளதும் வெளிவந்தது. தொழிலதிபர் ரத்தன் டாடா, அனில் அம்பானி மற்றும் மத்திய அமைச்சர்கள், தமிழக அரசியல்வாதிகள் சிலர் மற்றும் அவரின் உறவினர்கள், பத்திரிகையாளர்கள் ஆகிய பலரை, இவர் தன் பேச்சால் கவர்ந்து, முடிவுகளை எடுக்கத் தூண்டியது தான், நாடு முழுவதும் எழுந்த பரபரப்பிற்கு காரணமாகும். இத்தனை தில்லாலங்கடி வேலைகள் செய்த பின்னரும் இவர் எப்படி இன்னும் வெளியிலே இருக்கிறார் என்பது தான் புதிராக இருக்கிறது.
அதே சமயம், '2ஜி' வழக்கு விசாரணை வந்ததும், அவரது டேப் விவகாரமும் சுப்ரீம் கோர்ட் பார்வைக்கு வந்தது. இந்நிலையில், 2010ல் நீரா ராடியா - டாடா குழும தலைவர் ரத்தன் டாடா ஆகியோர் இடையே நடந்த, தொலைபேசி உரையாடல், மீடியாக்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. தொழிலதிபர் டாடா தன் தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் வைத்த வாதத்தில், கம்பெனி குறித்த முக்கிய தகவல்கள் கசிந்து, அதன் பெருமை குலைந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.



ரகசியமாக உரையாடல் பதிவு:
முன்னதாக, வருமான வரித் துறையின் சந்தேக வளையத்துக்குள் நீரா ராடியா கொண்டு வரப்பட்டிருந்ததால், அவர், யார் யாருடன் தொடர்ந்து பேசுகிறார் என்பது, ரகசியமாக பதிவு செய்யப்பட்டது. இதன் படி, 2008ல் ஆகஸ்ட், 20ம் தேதி முதல், 60 நாட்களும், பின், அக்., 19ம் தேதி முதல், 60 நாட்களும் நீரா ராடியா மற்றவர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தில், சுப்ரீம் கோர்ட் அதிக கவனம் செலுத்தி, டேப் விஷயங்களை அதிக கவனத்துடன் ஆய்ந்தது. அதில் இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதி, ஜி.எஸ்.சிங்வி, சிக்கல் நிறைந்த இந்த உரையாடல்களில் வழக்கிற்கு தேவையான அம்சங்களை ஆராய்ந்தார்.



180 நாட்கள்:
வருமான வரித்துறை, 2009ல் மே, 11ம் தேதியில்இருந்து, 60 நாட்கள் வரை என மொத்தம், 180 நாட்கள், நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட தகவலை, சி.பி.ஐ., ஆவணமாக தந்தது. இது முழுக்க முழுக்க, வருமான வரித்துறையின் விசாரணைக்காக, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும். நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் டேப், ரகசியமாக வெளியானது குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் கேள்வியும் எழுப்பியது. தொலைபேசி உரையாடலை கேட்டு, அறிக்கை தர சிறப்பு குழு ஒன்றையும் அமைந்து இருந்தது. இந்த குழு அளித்த அறிக்கையின் மீது, சுப்ரீம் கோர்ட்நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதி, ஜி.எஸ்.சிங்வி, நேற்று தன் உத்தரவில் கூறியதாவது: நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலின் சாராம்சத்தை பார்த்த மாத்திரத்தில், பெரும் முறைகேடு நடந்து இருப்பது தெரிகிறது. தனி நபர்கள், அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு, தங்களின் சுய லாபத்திற்காக, முறைகேடான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அறிய முடிகிறது. அரசு அதிகாரிகளுடன் தனியார் நிறுவனங்கள் சேர்ந்து கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டது, வரம்பை மீறி, அளவுக்கு அதிகமாக சட்டத்தை தாண்டி செயல்பட, அதிகாரம் படைத்தவர்களின் தூண்டுதல் இருந்தது என்றும், இதில் உள்ள தகவல்கள் காட்டுகின்றன.



சுரங்க ஊழலும் உண்டு:
கிரிமினல் செயல்கள் நடந்திருப்பதை இவை காட்டுகின்றன. சுரங்கம் குறித்த விஷயங்களை கனிம வளத்துறையும், மற்ற சில விஷயங்களை ஊழல் கண்காணிப்பு துறையும் ஆய்வு செய்ய வேண்டும். இதில் உள்ள நீதித்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களை, தலைமை நீதிபதி முடிவு செய்ய கேட்டுக் கொள்கிறோம். மற்ற விஷயங்களில் அடங்கிய முறைகேடுகளை, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். இரண்டு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தொலைபேசி உரையாடல் தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆவணங்களை, சிறப்பு குழு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக, சிறப்பு குழுவை விரிவுப்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை, டிசம்பர் 10ம் தேதி நடைபெறும். இவ்வாறு நீதிபதி தன் உத்தரவில் கூறினார்.dinamalar.com

கருத்துகள் இல்லை: