சனி, 18 மே, 2013

அன்டா செல்லில் சஞ்சய் தத் மூச்சுவிடக் கூட முடியாதபடி சிரமப்படுகிறார்.

மும்பை: அஜ்மல் கசாப் இருந்த அண்டா செல்லில் தன்னை அடைத்து வைத்திருப்பது சிரமமாக உள்ளதாகவும், காற்றோட்டமாக ஒரு அறை தரவேண்டும் என்றும் நடிகர் சஞ்சய் தத் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் சஞ்சய்தத் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் மும்பை தடா கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். தடா கோர்ட்டில் இருந்து ஆர்தர் ரோடு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஒரு மாதத்திற்கு வீட்டு சாப்பாடு, மெல்லிய படுக்கை விரிப்பு, தலையணை மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்பின்னர் அவருக்கு இந்த சலுகை தொடருமா என்பதை சிறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். இதேபோல் சிறையில் மின்னணு சிகரெட்டுகளை புகைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சஞ்சய் தத் மனு செய்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிறையில் சுதந்திரமாக நடமாடவும், தன் குடும்பத்தினர் தன்னை சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கோரிக்கை தொடர்பாக கோர்ட் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்நிலையில் சஞ்சய் தத்தின் தனது சிறைவாசத்தின் முதல் நாள் இரவு அனுபவம் தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரவு 11 மணியளவில் சிறையில் அவருக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சஞ்சய் தத் அழைத்துச் செல்லப்பட்டார். வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட உணவை சாப்பிட்ட பின்னர், குடிப்பதற்கு அவர் தண்ணீர் கேட்டார். சிறை அதிகாரிகள் ஒரு பாட்டிலில் தண்ணீர் தந்தனர். அதன் பின்னர், தூங்கச் சென்ற சஞ்சய் தத், இரவு முழுவதும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்ததாகவும், சில முறை எழுந்து உட்கார்ந்தபடியே இருந்ததாகவும் சிறை ஊழியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சஞ்சய் தத்தின் வக்கீல் ரிஸ்வான் மெர்ச்சண்ட் நேற்று மும்பை தடா நீதிமன்ற நீதிபதியிடம் ஓர் கோரிக்கை வைத்தார். 'தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் வைக்கப்பட்டிருந்த முட்டை வடிவ 'அன்டா' செல் மிகக் குறுகலான இடம் கொண்டதாக உள்ளது. அந்த செல்லினுள் சஞ்சய் தத்தையும் அடைத்து வைத்துள்ளனர். அவர் ஒன்றும் தீவிரவாதி அல்ல. இரவா? பகலா? என்று தெரிந்துகொள்ள முடியாதபடி 24 மணி நேரமும் இருள் படிந்து காற்றோட்டம் இல்லாத அன்டா செல்லில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சஞ்சய் தத் மூச்சுவிடக் கூட முடியாதபடி சிரமப்படுகிறார். எனவே காற்றோட்டமான வேறு அறைக்கு அவரை மாற்ற வேண்டும்' என்று கூறினார். இதே கோரிக்கையை எழுத்துப்பூர்வ மனுவாக தாக்கல் செய்தால், அரசு தரப்பு வக்கீலின் கருத்தையும் கேட்டு உரிய ஏற்பாடு செய்யப்படும் என நீதிபதி கூறினார்.
tamil.oneindia.i

கருத்துகள் இல்லை: