வியாழன், 16 மே, 2013

Badri Seshadri:ஆங்கில கல்வியே இந்த காலகட்டத்தின் ஆன்மாவாக இருக்கிறது

ஜெர்மன் மொழியில் ஸெய்ட்கீஸ்ட் (Zeitgeist) என்ற வார்த்தை ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் அதனை spirit of the time என்று மொழிபெயர்க்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் ஆன்மா என்று இதனை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஆன்மாதான் அந்தக் காலகட்ட்த்தின் பல நிகழ்வுகளை வழிநடத்தும். ஒரு சமூகமே ஒரு குறிப்பிட்ட திசை நோக்கிச் செல்லும். சமூகத்தின் அனைத்துவிதமான விசைகளும் இந்தக் கருத்தியக்கத்துக்குக் கடுமையான வலு சேர்க்கும்விதமாக நடந்துகொள்ளும். அதற்கு எதிரான கருத்து கொண்ட தனி நபர்கள் இந்த அலையில் அடித்துச் செல்லப்படுவார்கள். அவர்களது மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்கான களம்கூட இருக்காது.
இன்று இந்தியாவில் ஆங்கில மொழி அப்படிப்பட்ட ஒரு கருத்தாக்கமாக உள்ளது. ஆங்கில மொழியைப் படித்துப் புரிந்துகொண்டு அதிலேயே பேசவேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆங்கிலத்தை ஒரு பாடமாக மட்டுமல்ல, அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலம் வழியாக மட்டுமே கற்றாகவேண்டும் என்று இன்று மக்கள் அனைவரும் நினைக்கிறார்கள். அதன் காரணமாகவே தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வி நிலையங்களில் சேர்க்கவேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். எத்தனை பணம் செலவானாலும் பரவாயில்லை என்கிறார்கள் பெற்றோர்கள்.
அவர்களுடைய ஆசையைப் புரிந்துகொள்ளும் தனியார் கல்விநிலையங்கள் பலவும் ஆங்கில வழிக் கல்வியை அளிக்க முன்வருகின்றன. அந்தக் கல்வியின் தரம் குறித்தோ, அதில் படிக்கும் பிள்ளைகளின் விருப்பம் குறித்தோ யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
நாட்டின் மிகச் சிறந்த அறிவுஜீவிகள் அனைவரும் இந்தியாவின் கல்வி ஆங்கில வழியிலேயே இருக்கவேண்டும் என்கிறார்கள். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியாக இருக்கட்டும், அல்லது பிரதாப் பானு மேத்தாவாக இருக்கட்டும். இந்தியப் பிரதமர், திட்டக் குழுவின் துணைத் தலைவர் என்று தொடங்கி தொழில்துறைத் தலைவர்கள் பலரும் இந்தியாவின் படித்த ஆங்கில வர்க்கத்தை வெகுவாகப் பாராட்டுகிறார்கள். முக்கியமாக தகவல் தொடர்புத் துறையின் அடிமட்ட வேலைகளான கால் செண்டர், டேட்டா எண்ட்ரி போன்ற வேலைகளை இந்தியா பெறுவதற்கு இந்திய மாணவர்களின் ஆங்கிலக் கல்வி உதாரணமாகச் சுட்டிக் காட்டப்படுகிறது.
படித்தவர்கள் என்றாலே ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்ற எண்ணம் காரணமாக, அவர்களால் தமிழில் நன்றாகப் பேசமுடியும் என்றாலும் அவர்கள் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்ள முற்படுகிறார்கள். அது மிக மோசமான ஆங்கிலம் என்றாலும்கூட. பெரும்பாலான இடங்களில் வேலைக்கான நேர்முகத்தின்போது ஆங்கிலத்திலேயே கேள்விகள் கேட்கப்பட்டு அரைகுறை ஆங்கிலத்திலேயே பதிலும் அளிக்கப்படுகிறது.
சரி, இதனால் யாருக்கு என்ன நஷ்டம்? அவரவர் விருப்பம் என்னவோ, அதனை அவரவர் பின்பற்றிவிட்டுப் போகட்டுமே?
உண்மைதான். ஆங்கிலம் படிக்கவேண்டும் என்று விரும்பும் பலரை நீ ஆங்கிலம் படிக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஆங்கிலத்தின் தேவையே இல்லாத நிலையிலும் ஆங்கிலத்தை வற்புறுத்திப் புகுத்தும் நிலை நம் மாநிலத்துக்கு, நம் நாட்டுக்குச் சரிதானா என்ற கேள்வியை, விவாதத்தை உங்கள்முன் வைப்பதே என் நோக்கம். இதைப் பற்றி நீங்கள் சிந்தித்தால் மட்டும் போதும்.
உதாரணமாக, பள்ளிக் கல்வியை எடுத்துக்கொள்ளுங்கள். நமக்கு இரண்டு மொழிப் பாடங்கள் உள்ளன. ஒன்று தமிழ், இன்னொன்று ஆங்கிலம். இது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்தே இருந்துவரும் ஒன்று. இன்றுவரை மாறவில்லை. சொல்லப்போனால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக மட்டுமே இருந்தது. அதுவும் ஹைஸ்கூல் எனப்படும் ஆறாம் வகுப்பிலிருந்துதான் மொழிப்பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் கல்லூரிக் கல்வி முழுதும் ஆங்கில வழியில்தான் இருந்தது. ஆனால் இன்றோ, ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், ஆங்கில வழிக் கல்வியே வந்துவிட்டது.
இப்படியெல்லாம் இருந்தும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மிக அதிகமான பேர் எந்தப் பாடத்தில் தோல்வி அடைகிறார்கள்? ஆங்கிலப் பாடத்தில்தான். அதோடு அவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக் கல்வியிலிருந்து விலகிவிடுகிறார்கள். அவர்கள் பள்ளியில் படிக்கும்போதே பெரும்பாலானோருக்கு மிகவும் கடினமான பாடமாக இருப்பது ஆங்கிலம்தான்.
இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இன்றைய காலத்தில், உலகில் வெகு சில நாடுகளில்தான் ஓர் அந்நிய மொழியையும் கட்டாயம் படித்துப் பாஸ் செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள். பெரும்பாலும் காலனிய நாடுகளில்தான் இந்த நிலைமை. பிரிட்டனில் இந்தப் பிரச்னை இல்லை. பிரான்ஸில் இந்தப் பிரச்னை இல்லை. அமெரிக்காவில் இந்தப் பிரச்னை இல்லை. ஜெர்மனியில் இந்தப் பிரச்னை இல்லை. ஜப்பானில், சீனாவில் என்று எங்கு பார்த்தாலும் இந்தப் பிரச்னை இல்லை. அங்கெல்லாம் மக்கள் அவரவர் மொழியில் படிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அனைவரும் தமிழில்தான் படிக்கவேண்டும் என்பதல்ல என் கருத்து. ஆங்கிலம் அவர்கள்மீது திணிக்கப்படக்கூடாது என்பதுதான் என் கருத்து.
ஆங்கிலம் படித்தால்தான் வேலை என்பது உண்மையல்ல. ஆங்கிலம் படித்தால்தான் மேற்கொண்டு கல்லூரியில் நன்றாகப் படிக்கமுடியும் என்பதும் உண்மையல்ல.
நம்முடைய நோக்கம் என்ன? நாட்டில் உள்ள அனைவரும் நல்ல கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான் நம்மால் வளமான ஒரு நாட்டை, வளர்ந்த ஒரு நாட்டை உருவாக்க முடியும். இந்தக் கல்வியில் ஆங்கிலத்தின் பங்கு ஒருசிறிதும் இல்லை என்பதுதான் என் கருத்து.
ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகப் படிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் தனியாக, கல்விக்கூடத்துக்கு வெளியே எடுத்துப் படித்துக்கொள்ளலாம். ஆங்கில வழியில், அல்லது ஏன், பிரெஞ்சு வழியில்கூடக் கல்வி பயில விரும்புபவர்கள் அவ்வாறு செய்வதற்கு ஏதேனும் கல்விக்கூடங்கள் இருந்தால் அதில் சேர்ந்து படித்துக்கொள்ளலாம். அவர்களை அரசு எக்காரணம் கொண்டும் தடுக்கக்கூடாது. ஆனால் பிற அனைவரும் ஆங்கிலத்தையும் ஒரு பாடமாக எடுத்துப் படிக்கவேண்டும் என்று வற்புறுத்துதல் கூடாது என்றே நான் நினைக்கிறேன்.
ஆங்கிலம் தேவையே இல்லை, சீனாவைப் பார், ஜப்பானைப் பார் என்று சிலர் சொல்லும்போது அதற்கு மாற்றாகச் சிலர் கருத்துகளை முன்வைக்கவும் செய்கிறார்கள். என் நண்பர் ஒருவர் சொல்கிறார், ‘ஆங்கிலம் தெரியாததால்தான் ஜப்பான் இப்போது நாசமாகப் போய்க்கொண்டிருக்கிறது; சீனாவில் இப்போதே ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்’ என்று!
ஆனால் அது உண்மையல்ல. ஜப்பான் இந்தியாவைவிட மிக மிக உயர்ந்த நிலையில்தான் உள்ளது. சீனாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளச் சொல்வது பள்ளிக்கு வெளியேதான். அடிப்படைப் பள்ளிக் கல்வியைக் கற்க சீன மொழி (மாண்டரின் அல்லது காண்டனீஸ்) தெரிந்திருந்தால் போதும்.
உலகை வெல்ல ஆங்கில அறிவு நிச்சயம் அவசியம். அது தேவை என்று நினைப்பவர்களால் அதனை எந்நேரத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். தகவல் தொழில்நுட்பத் தொழிலில் கால் செண்டரை நிர்வகிக்க சில லட்சம் பேர் தேவை என்பதால் பல கோடிப் பேர்மீது ஆங்கில மொழி திணிக்கப்படவேண்டும் என்று வேண்டுவது எந்தவிதத்தில் நியாயம்?

ஆங்கிலம் ஓர் அந்நிய மொழி. அதனை இந்தியாவில் ஒரு சிலரால் மட்டுமே திறம்படப் பேச முடியும்.
நான் சுமார் ஆறு ஆண்டுகள் அமெரிக்காவிலும் இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்திலும் வசித்திருக்கிறேன். ஓரளவுக்கு ஆங்கிலம் பேசுவேன் (என்று நினைக்கிறேன்). ஆனால் நான் ஆங்கிலத்தில் எழுதுவது இலக்கண சுத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கை இன்றுவரை எனக்கு இல்லை. பேச்சிலும் நிறைய இலக்கணப் பிழைகள் இருக்கும். சரி, நாம் ஒன்றும் இல்லை. ஆனால், பி..கிருஷ்ணன் என்ற ஓர் எழுத்தாளர் இருக்கிறார். ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் நன்றாக எழுதக்கூடியவர். அவர் ஆங்கிலத்தில் எழுதி இரு நாவல்கள் வெளியாகியுள்ளன: The Tiger Claw Tree (Penguin), The Muddy River (Westland). அவை ஆங்கிலத்தில் வெளியான பின்னரே அவற்றைத் தமிழில் எழுதுகிறார். அவரும் இவ்வாறே சொல்கிறார். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதில் எங்கேனும் ஏதேனும் தவறு இருக்கலாமோ என்று அவர் எப்போதும் நினைப்பதாக. ஆனால் தமிழில் அவருக்கு அம்மாதிரி எந்தக் கவலையும் இல்லை. எனக்கும்கூட அப்படியேதான். தமிழில் எழுதும்போது ஒருவித assurance உள்ளது. அப்படியே தவறு இருந்தாலும் அதனை யாரேனும் திருத்தினால் உடனே அதனைப் புரிந்து உள்வாங்கி, மீண்டும் தவறே ஏற்படாத வகையில் எழுதமுடியும் என்று.
ஒரு மொழியின்மீதான ஆளுமையும் நம்பிக்கையும்தான், தெளிவாகவும், திடமாகவும், பயமின்றியும் அம்மொழியைப் பேச, எழுத, நம் கருத்துகளை, சிந்தனைகளை வெளிப்படுத்த உதவுகின்றன. அதுதானே நாம் விரும்புவது? இன்று நம் மாணவர்களிடையே காணப்படும் அச்சம் எதன் காரணமாக வருகிறது? நான் எண்ணற்ற கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசுகிறேன். அவர்களால் தமிழிலும் சரியாகப் பேச முடிவதில்லை, ஆங்கிலத்திலும் சரியாகப் பேச முடிவதில்லை. எனவே அவர்கள் வாயே திறப்பதில்லை. வாய் திறந்தால் உளறிவிடுவோமோ என்று பயம். பிறகு soft skills எங்கிருந்து வரும்?
மொழித்திறன் இல்லை என்பதால் மென்திறன் இல்லை, எனவே தன்னம்பிக்கை இல்லை. எனவே உளவியல்ரீதியாக ஒருவர் அழுத்தத்துக்கு உள்ளாகிறார். இதன் காரணமாக ஒரு மாணவர் தன்னுடைய உண்மையான சாதனைகளை ஒருபோதும் செய்வதில்லை. அதன்விளைவாக அவர் குறை-வாழ்க்கையையே வாழ்கிறார். இதனால் அவருடைய குடும்பமும் நாடும் பொருளாதாரரீதியாக பாதிக்கப்படுகிறது.
ஆங்கிலம் தெரியாவிட்டால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்று ஒரு பெரும் பட்டியலையே ஒருவர் அளிக்கலாம். முக்கியமாக கல்லூரியில் படிக்கும்போது, அல்லது ஆராய்ச்சி செய்யும்போது, அல்லது வெளிநாடுகளுக்குப் போகும்போது அல்லது ஐடியில் வேலை தேடும்போது என்று இப்படியாக.
ஆனால் ஒன்றாம் வகுப்பில் பள்ளியில் சேரும் 100 பேரில் எத்தனை பேர் இன்று கல்லூரிக்குப் போகிறார்கள் தெரியுமா? இந்திய அளவில் 13.8 பேர்தான். தமிழகத்தில் சுமார் 19 பேர். அதில் எத்தனை பேர் ஆங்கிலம் வழியாகக் கல்வி கற்கிறார்கள் என்று பார்த்தால் மிகக் குறைவுதான். அதில் எத்தனை பேர் ஆராய்ச்சிக் கல்வியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளட்டுமே? நான்கூட என் ஆராய்ச்சிப் படிப்பின்போது சில பிரெஞ்சு ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்துப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக பிரெஞ்சு மொழி கற்றுக்கொண்டேன். (இப்போது அது தேவையில்லை என்பதால் மறந்துவிட்டேன்.)
உலக அறிவு அனைத்தும் தமிழில் இருக்காது என்று கவலைப்படுவோர் பலர் இருக்கிறார்கள். உண்மைதான். தரமான மொழிபெயர்ப்புகள்மூலமாக மட்டுமே அவற்றையெல்லாம் தமிழுக்குக் கொண்டுவரவேண்டும். அப்படி மொழிபெயர்ப்பவர்களுக்குப் பன்மொழி அறிவு கட்டாயம் வேண்டும். ஆனால் அனைவருக்கும் அல்ல.
இறுதியாக ஆங்கில வழிக் கல்விக்கு வருவோம். இன்று தேசமே ஒரு திசை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த அலையில் அடித்துச் செல்லப்படுவோர் அனைவரும் தனக்கு மேலானவர்கள் என்று யாரைக் கருதுகிறார்களோ, அவர்கள் என்ன செய்கிறார்களோ அதனைத் தாங்களும் நகல் எடுக்கவேண்டும் என்று முயன்றே இதனைச் செய்கிறார்கள். அவர்களிடம் சென்று, ‘வேண்டாம் வேண்டாம் நீங்கள் தமிழிலேயே கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர்கள் கட்டாயம் கேட்கமாட்டார்கள். என்னைத்தான் திரும்பக் கேட்பார்கள். ‘நீ மட்டும் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறாய். உன் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வி பயில வைக்கிறாய். நீயும் உன் குடும்பமும் மட்டும் உயரவேண்டும், நாங்கள் மட்டும் தாழவேண்டுமா?’ என்பார்கள். இதற்கான பதில் என்னிடம் இல்லை. இதன் காரணமாக நான் ஆங்கிலம் படிப்பதை நிறுத்தப்போவதில்லை. அல்லது என் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வி கற்பதிலிருந்து தடுக்கப்போவதில்லை.
நீ நம்புவதை நீயே செய்யாவிட்டால்? அப்போது உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா?
நான் ஆரம்பத்தில் சொன்னதை ஞாபகத்தில் வையுங்கள். நான் முன்வைப்பது ஒரு சிந்தனை மட்டுமே. இப்போது நாம் ஒரு திசையில் வெகு தூரம் வந்துவிட்டோம். இதிலிருந்து சட்டென்று திரும்பி, வேறு திசையில் சென்றுவிட முடியாது. ஆனால் நாம் செல்லும் திசை மிக மோசமானது, இது எண்ணற்ற மக்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியது என்பதை உணர்கிறேன்.
உதாரணமாக மூன்று விஷயங்களை மட்டும் சொல்கிறேன். கடந்த இருபது ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளின் தரத்தைப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மத்திய வர்க்கம், தம் பிள்ளைகளை அப்பள்ளிகளுக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டது. காரணமாக மிக ஏழைக் குழந்தைகள் மட்டுமே அப்பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். அப்பள்ளிகளின் கல்வித் தரம் மட்டுமல்ல, அங்குள்ள வசதிகளும் குறைந்துகொண்டே போகின்றன.
இன்னொரு பக்கம், புற்றீசல்போலப் பெருகும் தரம் குறைந்த தனியார் ஆங்கிலப் பள்ளிகள். இங்கு ஆங்கில வழியில் கற்றுத் தருவதாகச் சொல்கிறார்களே தவிர அங்கு பணிபுரிவோருக்கோ அல்லது அங்கு படிப்போருக்கோ ஆங்கிலத்தைச் சரியாகப் பேசக்கூடத் தெரியாது.
மூன்றாவதாக, எலீட் பள்ளிகள்மேட்டுக்குடிப் பள்ளிகள். இங்கே தமிழ் என்பது மருந்துக்குக்கூடச் சொல்லித்தரப்படுவதில்லை. இப்பள்ளிகளில் தமிழில் பேசினாலே அது குற்றமாகக் கருதப்படுகிறது. தமிழ் என்றால் அசிங்கம், ஆங்கிலம் என்றால் உசத்தி என்ற கருத்தாக்கம் கொண்ட பள்ளிகள் இவை. இங்கு படிப்போர் வெளியே வரும்போது தமிழ் பேசுவோர்மீது கொண்டிருக்கும் மரியாதை எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
இவை மூன்றும் சமூகத்தைக் கடுமையாகப் பாதிக்கும் தன்மை கொண்டவை. ஆனால் இன்று இவை மூன்றும்தான் வெகுவேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கருத்துகள்.
இவற்றை மாற்றவேண்டும் என்று நீங்கள் கருதினால், என் கருத்தைச் சற்றே யோசித்துப் பாருங்கள்.
பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி, ஆறாம் வகுப்பு முதல் ஒருவர் விரும்பினால் மட்டுமே ஆங்கிலமும் ஒரு மொழிப்பாடம், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது அவசியம் இல்லை, கல்லூரியில் ஒருவர் விரும்பினால் ஆங்கில வழிக் கல்வி... இவற்றைக் கொண்டுவருவதால் நாம் எதையுமே இழக்கப்போவதில்லை. இதன்மூலம் நம் நாட்டின் கல்வித்தரத்தை வெகுவாக உயர்த்தமுடியும் என்று நம்புகிறேன். நம் மாணவர்களின் தன்னம்பிக்கையையும் வெகுவாக உயர்த்தமுடியும் என்று நம்புகிறேன்.
நன்றி.

கருத்துகள் இல்லை: