ஞாயிறு, 12 மே, 2013

10,000 விதிமீறல் கட்டடங்களுக்கு விரைவில்...சீல்!'

தமிழகம் முழுவதும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு, ஏற்கனவே
நோட்டீஸ் அளிக்கப்பட்ட, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட அடுக்குமாடி கட்டடங்களுக்கு, "சீல்'
வைக்கும் நடவடிக்கையை நகரமைப்புத் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.கோவையில் கடந்த மாதம், 25ம் தேதி, தனியார் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில், நான்கு @பர் இறந்தனர். இதையடுத்து, விதி மீறியும், அனுமதியின்றியும் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.கோவை மாநகராட்சியும், டி.டி.சி.பி., எனப்படும் நகரமைப்புத் துறையின் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகளும், விதிமீறல் கட்டடங்களுக்கு "சீல்' வைக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதில், இதுவரை, 200க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு "சீல்' வைக்கப் பட்டுள்ளது.


கோவையை தொடர்ந்து, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் திட்டக்குழுமங்களிலும் இந்நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத நகரமைப்புத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை தவிர பிற மாநகராட்சிகளிலும், நகராட்சிப்பகுதிகளிலும் விதிமீறி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி கட்டடங்கள், தீ தடுப்பு வசதிகள், அவசரகால வழி இல்லாத கட்டடங்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

10,000 கட்டடங்கள்:இதில், ஏற்கனவே அதிகாரிகள் கள ஆய்வு செய்து சேகரித்த விவரங்களின் அடிப்படையில், அனைத்து உள்ளூர் திட்டக் குழுமங்களிலும், மாநகராட்சி பகுதியிலும், 2007ம் ஆண்டுக்கு பின், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதிமீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், நான்காயிரத்துக்கு மேற்பட்ட வணிக வளாகங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்களும் இதில் அடங்கும்.

இவற்றில் கோர்ட் தடை இல்லாத கட்டடங்களை, "சீல்' வைக்க அந்தந்த பகுதியில் உள்ள நகரமைப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து "சீல்' வைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது தவிர, அண்மையில் கட்டப்படும் விதிமீறல் கட்டடங்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு உள்ளூர் திட்டக்குழுமத்திலும் உள்ள அதிகாரிகளை கொண்டே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த வகையில், அமலாக்கப்பிரிவு இல்லாததால், இந்நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்கான கோப்பு, அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: