கிருஷ்ணகிரிக்கு அருகிலுள்ள வெங்கடேசபுரம் என்கிற கிராமத்தில் ஸ்ரீ திருமலைவாசன் புளு மெட்டல்ஸ் என்கிற பெயரில் பதினைந்தாண்டுகளாக ஜல்லிக் கிரஷர் நடத்தி வருபவர் கோபால். பாறைகளை உடைத்து அவற்றை பல்வேறு அளவுகளில் ஜல்லிகளாக பிரித்து தமிழகத்திற்கும் அண்டை மாநிலங்களுக்கும் டன் டன்னாக அனுப்பி வைக்கிறார். இவருடைய இந்த நிறுவனம் முறையான டெண்டர் எதுவும் எடுக்காமல் அரசின் புறம்போக்கு நிலத்தை சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இதைப் போல சுற்றிலும் பல்வேறு ஜல்லி கிரசர்கள் இயங்கிவருகின்றன.
லாப வெறியை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுவதால் அரசின் எந்த விதிமுறைகளையும் இந்த நிறுவனங்கள் மதிப்பதில்லை. பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் போது சிதறி பறக்கும் கற்துகள்கள் விளைநிலங்களில் விழுகின்றன, அதே போல எந்நேரமும் காற்றில் பறக்கும் கல் தூசியும் பயிர்களில் படிகிறது. இதன் காரணமாக கடந்த பதினைந்து ஆண்டுகளில் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பாழாக்கப்பட்டிருக்கிறது.
இதற்கெதிராக கொந்தளித்த இப்பகுதி விவ்சாயிகள் இந்நிறுவனத்திற்கு எதிராக காவல் நிலையத்திலும், அதிகாரிகளிடமும் புகார் அளித்தனர். எந்த நடவடிக்கையும் இல்லை. மீண்டும் மீண்டும் முறையிட்டனர். அதன் பிறகு காவல்துறை நடவடிக்கை எடுத்தது. நடவடிக்கை கிரானைட் கொள்ளையர்கள் மீது அல்ல புகார் கொடுத்த விவசாயிகள் மீது ! பாகலூர் காவல் துறை கிரானைட் கொள்ளையர்கள் மீது புகார் கொடுத்த விவசாயிகள் மீதே பொய் வழக்குகளை போட்டு சிறையில் தள்ளியது.
2007-ம் ஆண்டு இந்த திருமலைவாசன் நிறுவனத்தின் முதலாளி மீது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் இரண்டே முக்கால் கோடி ரூபாய் அபராதம் விதித்தார். இன்று வரை அந்த தொகையையும் அரசு வசூலிக்கவில்லை.
போலீசும், அரசு அதிகாரிகளும் கிரானைட் கொள்ளை கும்பலுக்கு துணைபோவதை அம்பலப்படுத்தியும் சட்டவிரோதமான முறையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, அரசு விதிகளை பின்பற்றாமல் விளை நிலங்களை பாழடித்து வரும் திருமலைவாசன் முதலாளி கோபாலை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்கக் கோரியும் ‘விவசாயிகள் விடுதலை முன்னணி’, ‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ ஆகிய நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் கடந்த 8.11.2012 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாகலூர் பகுதி பு.ஜ.தொ.மு அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தோழர் சின்னசாமி, மோகன், ஆகியோர் கண்டன உரையாற்றினர். பு.ஜ.தொ.மு மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கிரசர் முதலாளி கோபால் மீது மாவட்ட ஆட்சியர் விதித்த அபராத தொகையை (ரூபாய் இரண்டரை கோடி) உடனடியாக வசூலிக்கவேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நட்ட ஈடு வழங்கவேண்டும், விவசாய நிலத்தை நாசப்படுத்தும் நிறுவனங்களை உடனடியாக இழுத்து மூடி அதன் உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தை திரளான மக்கள் கூடி நின்று கவனித்தனர். இந்த பிரச்சினையை கையிலெடுக்க அந்த பகுதியிலுள்ள எந்த கட்சியும் முன்வரவில்லை என்றால் அதன் பொருள் அவர்கள் ஒரு பக்கம் நிற்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக