ஞாயிறு, 23 டிசம்பர், 2012

ஊழலில் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்புவதற்கு லஞ்ச ஒழிப்பு துறையில் பதவி கேட்கும் போலீஸ்

தமிழக போலீசில் ஊழலில் திளைக்கும் அதிகாரிகள் பலர், ஓய்வு பெற சில ஆண்டு, மாதம் இருக்கும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு டிரான்ஸ்பர் கேட்டு காத்திருப்பது தெரிய வந்துள்ளது. தாங்கள் செய்த ஊழலை மறைத்து, கடைசி நேரத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் ஓய்வு பெற வேண்டும் என்பதற்காக, இந்த முடிவுக்கு போலீஸ் அதிகாரிகள் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக போலீசில் இன்றைய காலக் கட்டத்தில், நேர்மையை விரும்பும் அதிகாரிகளை தேடிக் கண்டு பிடிக்கும் நிலையே காணப்படுகிறது. அப்படியே நேர்மையாக இருந்தாலும், உயர் அதிகாரிகள், வசூல் டார்க்கெட் கொடுப்பதால், கை நீட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுபவர்களும் உண்டு.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களே பதவிகளை அலங்கரிப்பர். கடந்த ஆட்சியின் போது, உயர் பதவிகளை வகித்தவர்கள், மக்கள் மத்தியில் பிரபலம் இல்லாத துறைகளுக்கு தூக்கி அடிக்கப்படுவது வாடிக்கை.இந்நிலையில், தமிழக போலீசில், தற்போது லஞ்ச ஒழிப்பு துறையை தேர்வு செய்வதில், இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியிடம் ஒதுக்கக்கோரி விண்ணப்பம் அளித்துள்ளவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. dinamalar.com/
கடந்த, 2012 ஜனவரி மாதத்தில், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பணி மாற்றம் செய்யக் கோரி, 35 இன்ஸ்பெக்டர்கள், 50 டி.எஸ்.பி.,கள், 15 ஏ.டி.எஸ்.பி.,க்கள் மட்டும் விண்ணப்பம் கொடுத்து காத்து இருந்தனர்.டிசம்பர் முதல் வாரத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 52 இன்ஸ்பெக்டர்கள், 75 டி.எஸ்.பி.,கள், 31 ஏ.டி.எஸ்.பி.,க்கள் என, காத்திருப்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையில் பணி வழங்க கோரி விண்ணப்பித்துள்ளவர்களில், 30 முதல், 50 சதவீதத்தினர் ஊழலில் கொடி கட்டி பறந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், கடந்த ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக செயல்பட்டவர்கள், தாமாக முன்வந்து, லஞ்ச ஒழிப்புத்துறை, உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு உட்பட பல்வேறு சிறப்பு பிரிவுகளில் பணி மாற்றம் பெற்றுச் செல்வது வாடிக்கை. ஆனால், சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை கோரி விண்ணப்பித்துள்ளவர்களில், பலர் தங்களின்
அதிகார பலத்தை பயன் படுத்தி, கோடி, கோடியாக கொட்டி குவித்துள்ளவர்கள். இவர்கள் ஓய்வு பெறுவதற்கு, சில ஆண்டு, சில மாதம் இருக்கும் நிலையில், கடைசி காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசின் வலையில் சிக்கிக் கொள்ளக் கூடாது; நிம்மதியாக பணி ஓய்வு பெற வேண்டும் என்பதற்காக, இந்த துறையை தேர்வு செய்கின்றனர்.

அந்தவகையில் லஞ்ச ஒழிப்புத்துறையை விரும்பி கேட்பவர்களின் பட்டியலை தயார் செய்து, அவர்களின் போலீஸ் துறை ஜாதகத்தை ஆராய்ந்து வருகிறோம். சேலம் மாநகரில் உதவி கமிஷனராக உள்ள ஒருவர், லஞ்ச ஒழிப்புத்துறையை வழங்க கோரி விண்ணப்பித்தார்.அவரது நடவடிக்கை பற்றி விசாரணை நடத்திய போது, அவருக்கு ஓய்வு பெற, 15 மாதமே உள்ளது. தான் சுருட்டியவற்றை எவ்வித சிரமம் இன்றி அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, இந்த துறையை கேட்பது தெரிய வரவே, அவரின் மனுவை நிராகரித்துள்ளோம். தற்போது வரை, விண்ணப்பித்துள்ளவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: