வெள்ளி, 22 ஜூன், 2012

தமிழக நகைக்கடை கொள்ளை பின்னணியில் ஜார்க்கண்ட் மாவோயிஸ்டு

வேலூர்: தமிழக நகைக் கடைகளில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், ஜார்க்கண்ட் மாநில மாவோயிஸ்டுகளுக்கு வழங்கப்பட்டது தெரிய
வந்துள்ளது.
கன்னம் வைத்து...: தர்மபுரி நகை கடையில், மே மாதம், 9ம் தேதி, கொள்ளை முயற்சி நடந்த போது, வட மாநிலங்களை சேர்ந்த, ஒன்பது பேரை, போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் மிதுன் மண்டல் ஷபீகுல், ஆலம், பைரோஸ் ஆகியோர், வேலூர் மெயின் பஜாரில் உள்ள, நகை கடை ஒன்றில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சுவரில் துளை போட்டு, ஐந்து கிலோ நகைகள் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது, விசாரணையில் தெரிந்தது. இவர்கள் மூவரையும், வேலூர் வடக்கு போலீசார், காவலில் எடுத்து விசாரித்தனர். கடந்த வாரம், வேலூர் மாவட்ட குற்றப் பிரிவு டி.எஸ்.பி., மோகன் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மூன்று கொள்ளையர்களையும், மேற்கு வங்கத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை செய்தனர்.


சாப்பாட்டுக்கு வழியில்லை: மூன்று கொள்ளையர்களின் சொந்த ஊர், ஜார்க்கண்ட் மாநில எல்லையில் உள்ள மால்டா. கொள்ளையர்களின் வீடுகளில், வசதி குறைவாக இருந்தது. அங்கு விலை உயர்ந்த பொருட்கள், நகைகள் எதுவும் இல்லை. மின் விசிறி இல்லை; சமையல் காஸ் இல்லை. வீட்டில் உள்ள பெண்கள், நகைகள் அணிந்திருக்கவில்லை. சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருந்தனர். அவர்களின் வீடுகளை போலீசார் சோதனை செய்த போது, எதுவும் சிக்கவில்லை. கொள்ளையடித்த நகைகள், அங்குள்ள பெரிய பணக்காரர்களிடம் அடகு வைக்கப்பட்டுள்ளதா என விசாரித்த போது, யாரும் அவர்களிடமிருந்து நகைகளை அடகு வாங்கவில்லை எனத் தெரிந்தது. பின், மால்டாவுக்கு பக்கத்தில் உள்ள, "அமிர்கேசினி' என்ற ஊருக்கு சென்ற போது, அங்குள்ள அமிர்ஷேக் என்பவரிடம், கொள்ளையர்கள், நகைகளை கொடுத்தது தெரிந்தது. அமிர்ஷேக்கை விசாரிக்க முடியவில்லை. ஆனால், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், அமிர்ஷேக் மூலமாக, மாவோயிஸ்டுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, விசாரணையில் தெரிந்தது. இந்த நகைகளை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு மாவோயிஸ்டுகள் ஆயுதம் வாங்கவும், கை செலவுக்குப் பயன்படுத்தியதும் தெரிந்தது. இவர்களை பிடிக்க முடியாது என, அங்கிருந்த போலீசார் கூறி விட்டனர்.

64 கொள்ளை: சுவரில் துளை போட்டு, நகைகளை கொள்ளையடித்தவர்களுக்கு, கூலி மட்டும் கொடுத்துள்ளனர். மேலும், எந்தெந்த ஊரில் எந்தெந்த கடைகளில், எப்படி கொள்ளையடிப்பது என, மாவோயிஸ்டுகள், திட்டம் போட்டுக் கொடுத்துள்ளனர். கடந்த, மூன்று ஆண்டுகளில் மட்டும், தமிழகத்தில், 64 நகை கடைகளில், நகைகள் கொள்ளையடித்துள்ளதும், இவையெல்லாம் மாவோயிஸ்டுகள் கையில் கிடைத்துள்ளதும் தெரிய வந்தது. இங்குள்ள மாவோயிஸ்டுகளை பிடித்தால் தான் முழு உண்மை தெரியும் என, உள்ளுர் போலீசார் கூறினர். இதனால், கொள்ளையர்களுடன் மேற்கு வங்கம் சென்ற, வேலூர் போலீசார், வெறும் கையுடன் திரும்பினர்.

கருத்துகள் இல்லை: