வியாழன், 21 ஜூன், 2012

மர்ம சந்நியாசி – 5 நீதிபதி ஒரு பட்டியல் தயாரித்தார்



இறுதியாக, சாட்சியங்களின் அடிப்படையில் நீதிபதி ஒரு பட்டியல் தயாரித்தார். மேஜோகுமாருக்கும் சந்நியாசிக்குமான ஒற்றுமை/வேற்றுமை பட்டியல் அது.
இந்த வழக்கு நடந்த சமயத்தில் கை ரேகைவியல் நிபுணத்துவம் அடைந்திருந்த போதிலும், வழக்கில் பயன்படுத்தப்படவில்லை.
காரணம் சந்நியாசியின் கைரேகையை ஒப்பிட்டுச் சொல்வதற்கு மேஜோ ராஜாவின் கைரேகை கிடைக்கவில்லை. இப்போது இருப்பது போன்று டிஎன்ஏ-வை வைத்து உண்மையை கண்டுபிடிக்கும் முறை அன்று இருந்திருந்தால், பாவல் சந்நியாசியின் வழக்கு எளிதாக முடிந்துபோயிருக்கும்.
சாட்சியங்கள் சந்நியாசிக்கு ஆதரவாக இருந்தாலும் பிபாவதியின் வழக்கறிஞரான சவுத்ரி விடுவதாக இல்லை. சரி, மேஜோ ராஜாதான் சந்நியாசி என்றால், அவர் எதற்கு பன்னிரண்டு ஆண்டுகள் சும்மாயிருக்கவேண்டும் என்ற கேள்வியை நீதிமன்றத்தில் எழுப்பினார். அவர் உயிருடன் இருந்திருந்தால் எப்போதோ அரண்மனைக்கு திரும்பி இருக்கவேண்டும், அப்படி இல்லாமல் 12 ஆண்டுகாலம் கழித்து வருவது ஏன்? நல்ல கேள்விதான். அதற்கான பதிலாக, சந்நியாசியின் வழக்கறிஞர் சாட்டர்ஜி சொன்னது ‘அம்னீஷியா’. அம்னீஷியாவைப் பற்றி சந்நியாசி தன்னுடைய வாக்குமூலத்தில் சொன்னதாவது, ‘நான் காட்டில் மலைப்பகுதியில் ஏதோ ஒரு குடிலில் இருந்தேன். என்னை நான்கு சாதுக்கள் கவனித்துக் கொண்டார்கள். என்னால் அவர்களுடன் பேச முடியவில்லை. பல நாள்கள் கழித்து, என்னை அவர்களுடன் வரும்படி கூறினர்.  நான் எங்கு சென்றேன் என்று நினைவில்லை. ரயில் எங்கெங்கோ பல இடங்களுக்கு சென்றதாகத் தோன்றுகிறது. நாள்கள் மாதங்கள் ஆயின, மாதங்கள் வருடங்களாயின. எனக்கு என்னுடைய குரு ஒரு நாள் தீட்சை வழங்கினார். நான் அப்போது அவரிடம், நான் யார்? எங்கிருந்து வந்தேன்? என்றேன். அதற்கு அவர், தகுந்த காலம் வரும்போது நான் உன்னை உன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார். மேலும் என்னுடைய குரு, நான் மாயை கலைந்து திரும்பினால் என்னை சந்நியாசத்தில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினார். அதற்குப் பிறகு நான் யோகி ஆக முடியும் என்றார். நான் டாக்காவுக்குச் சென்று, அங்கு சில மாதங்கள் தங்கினேன். பின்னர் அங்கிருந்து ஜெய்தேபூருக்குச் சென்றேன். பிறகு எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பியது’.
இது கட்டுக்கதை என்றார் பிபாவதியின் வழக்கறிஞர். சந்நியாசியின் கூற்றை நிரூபிக்க, நீதிமன்றத்தின் ஆதாரங்கள் கொண்டுவரப்பட்டன. பல மருத்துவர்களும் மனோதத்துவ அறிஞர்களும் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். வாதியின் சார்பில் லெஃப்டினண்ட் கர்னல் ஹில் என்பவர் விசாரிக்கப்பட்டார். இவர் ஒரு எம்.டி. மேலும் இவர் ராஞ்சியில் உள்ள ஐரோப்பிய மன நல காப்பகத்தில் சூப்பிரன்டண்டாக 30 வருடகாலம் பணியாற்றி இருக்கிறார். ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்.
பிரதிவாதியின் தரப்பில் மேஜர் துன் ஜிபாய் எம்.பி.பி.எஸ் அவர்களும், மேஜர் தாமஸ் அவர்களும் விசாரிக்கப்பட்டனர். இவ்விரண்டு மருத்துவர்களுமே, திடீர் அதிர்ச்சிக்கு (Shell shock) உள்ளான நோயாளிகளுக்கு மருத்துவம் அளித்திருப்பதாக தெரிவித்தனர். மேஜர் துன் ஜிபாய், டாக்டர் டெய்லர் எழுதிய Readings in Abnormal Psychology and Mental Hygiene என்ற புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டி, ஒருவருக்கு விபத்தோ அல்லது உடம்பில் எந்தவிதக் கோளாறோ இல்லாத போதும், ‘அம்னீஷியா’  ஏற்படக் கூடும் என்றார். இந்த ஞாபக மறதியில் பல விதங்கள் உள்ளன என்றும், அவற்றுக்கு பல மருத்துவப் பெயர்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மாதிரி ஞாபக மறதி, ரிக்ரஷனில் தொடங்கி டபுள் அல்லது மல்டிப்பிள் பெர்ஸினாலிட்டி டிஸ்ஆர்டராகவோ மாறும் என்றார்கள்.
0
இங்கிலாந்தில் ரிக்ரஷன் தொடர்பாக ஒரு பிரபல சம்பவம் நடைபெற்றது. ஹானா என்று ஒரு பாதிரியார் இருந்தார். அவர் திடீரென்று ஒரு நாள், காலையில் பிறந்த குழந்தை போன்று நடந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார். அவருடைய அறிவாற்றல் மறைந்துபோனது. முந்தைய நினைவுகள் எதுவும் இல்லை. இது ஒரு குழந்தை நிலை என்று மனோதத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த ரிக்ரஷன் பற்றிய விவரங்கள் Sidis and Goodhart எழுதிய Multiple Personality என்ற புத்தகத்தில் இருக்கிறது.
ஞாபக மறதியில் இன்னொரு வகை டபுள் பெர்சினாலட்டி அல்லது டிஸ்அஸோஸியேசன். அதாவது ஒருவர் சாதரணமானவராகத்தான் இருப்பார். ஆனால் அவருக்கு தான் யார் என்ற உணர்வு இருக்காது. இது போன்ற நபர்களைப் பற்றி பேராசிரியர் ஜேனட் (Pierre Janet) என்பவர் புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். ஒரு விசித்திரமான குறிப்பு அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. இங்கேயும் மறதிக்கு ஆளானவர் ஒரு பாதிரிதான். அவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். அவர் பெயர் ஆன்சல் பவுர்னி. அவர் திடீரென்று ஒரு நாள் வீட்டை விட்டு எங்கோ சென்றுவிட்டார். பின்னர் நூறு மைல்களுக்கு அப்பால் பென்ஸில்வேனியா மாநகரத்தில் ‘பிரவுன்’ என்ற பெயரில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வந்தார்.
ஜேனட் எழுதிய Major symptoms of Hysteria என்ற புத்தகத்திலிருந்து மேலும் ஒரு எடுத்துக்காட்டு கொடுக்கப்பட்டது. ஒரு மனிதன் தான் யார் என்பதை மறந்துவிட்டு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழிலை செய்து வந்தான். பின்னர் நான்கு மாதங்கள் கழிந்து அவன் பழைய நிலைக்குத் திரும்பினான். ஆனால் இடைப்பட்ட காலத்தில் தான் என்ன செய்து வந்தோம் என்ற எந்த ஞாபகமும் அவனுக்கு இல்லை.
0
இந்தக் கதைகளை விவரித்து சந்நியாசியை நியாயப்படுத்த முயன்றபோது, பிபாவதி சார்பில் சாட்சியம் அளித்த மருத்துவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சந்நியாசி தன்னுடைய சுற்றுப் பயணத்தின் முதல் ஆண்டில் டார்ஜிலிங்கிலிருந்து காசிக்கு சென்ற சமயத்தில் ரிக்ரஷனில் இருந்தது உண்மையானால்,  அது டிஸ்அசோசியேஷன் இல்லாமல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றனர். இரண்டாவதாக சந்நியாசி தன்னுடைய இரண்டாவது பர்சனாலிட்டியை இழந்து முதல் பர்சனாலிட்டியைப் பெற்றார் என்றால், அவருக்கு இரண்டாவது பர்சினாலிட்டியின் நினைவு இருக்காது.  மூன்றாவதாக டிஸ்அசோசியேஷன் எல்லோருக்கும் சாதாரணமாக வராது. நரம்பு வியாதி, இழுப்பு /வலிப்பு இருப்பவர்கள் அல்லது ஹிஸ்டீரியா நோயாளிகளுக்குத்தான் வரும் என்று மேஜர் தாமஸும் மேஜர் தன்ஜிபாயும் தெரிவித்தனர்.
லெப்டினண்ட் கர்னல் ஹில், மேஜர் தாமஸ் மற்றும் மேஜர் துன் ஜிபாய் சொன்ன கருத்துகளை எதிர்த்தார். மற்ற மருத்துவர்களைவிட டாக்டர் ஹில்ஸுக்குத்தான் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அனுபவம் அதிகம் இருக்கிறது. அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், சந்நியாசி குழந்தை நிலையில் இருந்ததாக எங்கேயும் குறிப்பிடவில்லை என்றார். அவருக்கு மரம், மலை, சாதுக்கள், ரயில் ……. போன்ற விவரங்கள் தெரிந்திருக்கிறதே தவிர, டார்ஜிலிங்கிலிருந்து காசி வரை என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றார் ஹில்ஸ்.
இந்த சாட்சியத்தைப் பற்றி நீதிபதி தன் தீர்ப்பில் கீழ்வருமாறு கூறினார்.
பாவல் சந்நியாசி வழக்கில் சொல்லப்பட்ட சம்பவங்கள் ஆச்சரியமாக இருக்கின்றன. ஆனால் அதற்காக அந்த சம்பவங்கள் நடைபெறவில்லை என்று சொல்லமுடியாது. இப்படியெல்லாம் நடக்குமா என்று பலர் கேட்கலாம். நடக்காது என்று யாராலும் அறுதியிட்டு சொல்லமுடியாது. இம்மாதிரி சம்பவங்கள் பல உலகளவில் நடைபெற்றிருக்கிறது என்பதற்கு பல ஆதாரங்கள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன. இரு தரப்பும் அதை ஒப்புக் கொண்டிருக்கின்றன. இது சம்பந்தமாக பல மனோ தத்துவவியல் புத்தகங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக டாக்டர் டெய்லரின் அப்னார்மல் சைக்காலஜி பல ஆதாரங்களை அளிக்கிறது.
ஆக, ஒருவர் இம்மாதிரி மனநிலைக்கு ஆட்படமுடியாது என்று எந்த காரணத்தையும் முன்வைக்க முடியாது. மேஜர் தாமஸ் அல்லது மேஜர் துன்ஜிபாய் சொல்வது போல அம்னீஷியா ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில்தான் அல்லது ஒரு குறிப்பிட்ட அளவுகோளுக்கு உட்பட்டுதான் வரும் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. சில நோயாளிகள், தாங்கள் இருக்கும் சூழ்நிலையோடு தங்களை இணைத்துக்கொள்வர். வேறு சிலர், தங்களுடைய குழப்பமான மனநிலையில், தாங்கள் இருக்கும் சூழ்நிலையோடு ஒட்டாமல் வாழ்வர். இவ்விரு வேறுபாட்டு நிலைகளுக்கு நடுவில், பலதரப்பட்ட மனநிலை கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். முதல் உலக யுத்தத்துக்குப் பிறகு Disassociation, Regression போன்ற மன நோய்களால் பல போர் வீரர்கள் அவதிப்பட்டனர். போர் வீரர்களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு War neuroses என்று அழைக்கப்பட்டது. இவர்களை குணப்படுத்துவதற்கென்றே சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட போர் வீரர்களுக்கு அவர்களுடைய பெயர், ஊர், அவர்களுடைய ரெஜிமண்ட்/ பட்டாலியன் எதுவும் நினைவில் இல்லை. போருக்கு முன்பு அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா எதுவும் சொல்லமுடியவில்லை. இருப்பினும் தாங்கள் சார்ந்திருந்த சூழ்நிலையைப் புரிந்து அவர்களால் வாழமுடிந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியிருந்தவர்களிடம் சகஜமாகப் பேசினார்கள். மற்றவர்களைப் போல எல்லாப் பொருள்களையும் பயன்படுத்தினர். புதிதாக யாராவது இவர்களைப் பார்த்தால், அவர்களால் இந்த போர்வீரர்கள் அம்னீஷியா நோயாளிகள் என்று அடையாளம் கண்டுகொள்ளமுடியாது.
மேற்சொன்ன சம்பவங்கள் பற்றி தெரிந்துகொள்ளும் போது நமக்கு வியப்பாக இருக்கிறது. அம்னீஷியா நோயாளிகளை வகைப்படுத்தமுடியும். அம்னீசியா நோயாளிகலெல்லாம் ஒரே மாதிரியானவர்கள் என்று சொல்ல முனைவது ஏற்புடையது ஆகாது. இவர்களை சட்டத்துக்கு ஆட்படுத்தமுடியாது. சில அம்னீஷியா நோயாளிகளுக்கு நினைவு திரும்புவதற்கு சில மாதங்கள் ஆகும். சிலருக்கு வருடக்கணக்கில் ஆகும்.  சிலருக்கு நினைவு திரும்பவே திரும்பாது. இந்த வழக்கில் சந்நியாசிக்கு நினைவு திரும்புவதற்கு 12 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
இந்த வழக்கில், பிபாவதி தரப்பில் நிரூபணம் செய்யவேண்டிய விஷயம் என்னவென்றால், டார்ஜிலிங்கில் தொடங்கி இந்த வழக்கு விசாரணை நடக்கும் வரை உள்ள காலத்தில் சந்நியாசிதான் மேஜோ குமார் என்பதை அடையாளப்படுத்தவில்லை. மாறாக, சந்நியாசி மேஜோ குமாராக இருக்கமுடியாது என்பதை நிரூபிக்கவேண்டும். அப்படி முடியவில்லையென்றால், டார்ஜிலிங்கிலிருந்து டாக்காவரை நடந்த சம்பவங்களில் காட்டப்படும் சிறு சிறு முரண்பாடுகள் வழக்கில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை.
வாதி தரப்பில் கொடுக்கப்பட்ட சாட்சியங்களை சந்தேகிப்பதற்கில்லை. சந்நியாசிக்கு 12 ஆண்டு காலம் அம்னீஷியா இருந்தது என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதனால்தான் மேஜோ குமார் உயிரோடு இருந்தும், அவரால் அரண்மனைக்கு திரும்பமுடியவில்லை.’
0
சந்நியாசிக்கு அம்னீஷியா இருந்தது என்று முடிவாகிவிட்டது. பிறகென்ன வழக்கை முடித்துவிட்டு தீர்ப்பு சொல்லவேண்டியதுதானே என்கிறீர்களா?
ஆனால் தீர்ப்பு சொல்வதற்கு முன்னர், நீதிமன்றம் மற்ற சில விவகாரங்களை அலச வேண்டியிருந்தது. சந்தேகத்தின் பேரில் தீர்ப்பு கூறுவது ஏற்புடையதாகாது. இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம் என்று பத்தாம்பசலித்தனமாக தீர்ப்பு சொல்ல முடியாது. ஐயமின்றி நிரூபித்தாகவேண்டும். வக்கீல் சவுத்ரி, சந்நியாசி மேஜோ குமாராக இருக்கமுடியாது, அவர் போலி என்பதை நிரூபிக்கும் விதத்தில் சில சாட்சியங்களையும் வாதங்களையும் முன் வைத்தார். அவற்றையும் பார்த்து விடுவோம். அப்போதுதான் வழக்கு முழுமை பெறும்.
பிபாவதி தரப்பில் சொல்லப்பட்ட விஷயம் இது. மே மாதம் 8 ஆம் தேதி 1909ம் வருடம் டார்ஜிலிங்கில் மழை பெய்தது என்று சந்நியாசியும் அவருக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த சாதுக்களும் சொன்னது பொய். அன்று மழையே பெய்யவில்லை. இந்த வாதம் எதிர்கொள்ளப்பட்து. மழை பெய்ததற்கான ஆதாரம் வானிலை ஆய்வு மையத்தின் மழைப் பதிவேடுகளில் இருக்கிறது என்றார் பிபாவதியின் வழக்கறிஞர் சவுத்ரி. ஒரு ஊரில் இரண்டு மூன்று இடங்களில் எவ்வளவு மழை பெய்திருக்கிறது என்று அங்குள்ள மழைப் பதிவேடுகளில் பதிவு செய்யப்படும். நீதிபதி டார்ஜிலிங்கில் மழையைப் பதிவு செய்யும் அனைத்து இடங்களுக்கும் சம்மன் அனுப்பி 1909ம் ஆண்டு, மே மாதம் 8 அல்லது 9 ஆம் தேதியில் எவ்வளவு மழை பதிவாகியிருக்கிறது என்ற அறிக்கையை அவர்களுடைய கோப்புகளிலிருந்து நீதீமன்றத்துக்குகு அனுப்பி வைக்குமாறு சம்மனில் கேட்டுக்கொண்டார்.
டார்ஜிலிங்கில் சுமார் ஆறு இடங்களில் மழை கணக்கிடப்படுகிறது. அவை பின்வருமாறு :
1) புனித ஜோசப் கல்லூரி
2) புனித பால் பள்ளிக்கூடம்
3) தாவரவியல் பூங்கா
4) டார்ஜிலிங் நகராட்சி அலுவலகம்
5) பிளண்டர்ஸ் கிளப்
6) Observatory Hill
புனித பால் பள்ளிக்கூடத்தில் பதிவாகும் மழையின் அளவை அரசாங்கம் அவ்வப்போது தன்னுடைய அரசிதழில் வெளியிட்டது. அரசிதழ் குறிப்பின் படி 1909ம் வருடம், மே 4 ஆம் தேதி காலை 8 மணியிலிருந்து – மே 12 ஆம் தேதி மாலை 4 மணி வரைக்கும் டார்ஜிலிங்கில் மழை எதுவும் பெய்யவில்லை. புனித ஜோசப் கல்லூரியின் குறிப்பின் படி மே மாதம் 11 மற்றும் 12 ஆம் தேதியன்று மழை பெய்ததாக குறிப்பு இருந்தது. அதுவும் அந்தக் குறிப்பில் மே மாதம் 12 ஆம் தேதி சுமார் 300 mm மழை பெய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
புனித ஜோசப் கல்லூரியில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை, அந்தக் கல்லூரியின் பேராசிரியர் பாதிரியார் பீல் என்பவர் நிர்வகித்து வந்தார். அவர் பாவல் சந்நியாசி வழக்கில் சாட்சியம் அளித்தார். டார்ஜிலிங்கில் மார்க்கெட் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் 500 அடி தாழ்வான பகுதியில் புனித ஜோசப் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் டார்ஜிலிங்கில் முக்கியமான இடமாக கருதப்படும் நார்த் பாயிண்டிலிருந்து சுமார் ஒன்றரை மயில் தொலைவில் கல்லூரி உள்ளது. புனித ஜோசப் கல்லூரியிலோ அல்லது புனித பால் பள்ளிக்கூடத்திலோ மழை பெய்யவில்லை என்றால் டார்ஜிலிங் மார்க்கெட்டிலும், நார்த் பாயின்டிலும் மழை பெய்யாது என்று பேராசிரியர் பீல் திட்டவட்டமாக கூறினார்.
ஆனால் ஜல்பைகுரி மாவட்டதில் (டார்ஜிலிங் ஜல்பைகுரி மாவட்டத்தில் இருக்கிறது) உள்ள அரசாங்க பதிவேட்டின் படி குறிப்பிட்ட தேதிகளில், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அளவுக்கு மழை பெய்திருந்தது.
மே மாதம் 5 ஆம் தேதி 2.41 அங்குல மழை பெய்திருக்கிறது
மே மாதம் 6 ஆம் தேதி 4.98 அங்குல மழை பெய்திருக்கிறது
மே மாதம் 7 ஆம் தேதி 5.77 அங்குல மழை பெய்திருக்கிறது
மே மாதம் 8 ஆம் தேதி 3.36 அங்குல மழை பெய்திருக்கிறது
மே மாதம் 9 ஆம் தேதி 1.15 அங்குல மழை பெய்திருக்கிறது
மே மாதம் 10 ஆம் தேதி 0.21 அங்குல மழை பெய்திருக்கிறது
மே மாதம் 11ஆம் தேதி 0.79 அங்குல மழை பெய்திருக்கிறது
மே மாதம் 12 ஆம் தேதி 2.10 அங்குல மழை பெய்திருக்கிறது
வாதி தரப்பில் டார்ஜிலிங் நகராட்சியிலிருந்து 1909ம் வருடத்திற்கான மழைக்கான பதிவேடு வரவழைக்கப்பட்டது. பிரதிவாதி தரப்பில் தாவரவியல் பூங்காவில் பதியப்பட்ட மழைக்கான விவரங்கள் அடங்கிய கோப்புகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. தாவரவியல் பூங்கா, டார்ஜிலிங் மார்க்கெட் இருக்கும் இடத்திலிருந்து கீழே தாழ்வான பகுதியில் விக்டோரியா சாலையில் அமைந்துள்ளது.
வானிலை ஆய்வாளர்கள் உள்பட அனைத்து சாட்சிகளும் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், டார்ஜிலிங் போன்ற மலைப்பாங்கான பிரதேசங்களில் எப்பொழுது வேண்டுமானாலும் மழை பெய்யும். மலைப்பிரதேசங்களில், சமதரையில் உள்ளது போல் பருவக்காற்று அடித்தால்தான் மழை பெய்யும் என்ற கணக்கெல்லாம் இல்லை. மேலும் அனைவரும் ஒப்புக்கொண்ட இன்னொரு விஷயம், மலைப்பகுதிகளிலேயே ஒரு பகுதியில் மழை பெய்யும், ஆனால் சற்றே தொலைவில் உள்ள இன்னொரு இடத்தில் மழைத் தூரல் கூட விழுந்திருக்காது. இதற்கு ஒரு உதாரணம், மே 12 ஆம் தேதி டார்ஜிலிங்கில் உள்ள புனித ஜோசப் கல்லூரியிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் மழை பெய்திருந்தது. ஆனால் புனித பால் பள்ளிக்கூடத்திலும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் மழை இல்லை. பெரும்பாலான மழைப் பதிவேடுகளில் பார்க்கும்போது மே மாதம் 8 ஆம் தேதியன்று கார்டு ரோடு ஏரியாவில் மழை பெய்திருப்பதாக காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் கார்டு ரோடு ஏரியாவுக்கு அருகாமையில் சரிசமமான உயரத்தில் அமைந்துள்ள பாசார் ஏரியாவிலோ அல்லது தாவிரவியல் பூங்காவிலோ மழை பெய்ததாக நகராட்சி மழைப் பதிவேட்டில் எந்த குறிப்பும் இல்லை.
ஆனால் நகராட்சி மழைப் பதிவேட்டை பார்க்கும்போது, அதில் சில தில்லுமுல்லுக்கள் நடைப்பெற்றிருப்பது தெரியவந்தது. பதிவேட்டில் தேதிகள் திருத்தம் செய்யப்பட்டிருந்தன.
அதேபோல் தாவிரவியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த மழைப் பதிவேடும் நம்பத் தகுந்தாற் போல் இல்லை. தாவிரவியல் பூங்காவில் உள்ள மழைப் பதிவேட்டை பராமரித்துவந்த குமாஸ்தாவை நீதிமன்றம் சம்மன் செய்தது. அந்த குமாஸ்தா 1908ம் ஆண்டு தான் வேலைக்கு சேர்ந்ததாகவும், 1908ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல், தான் மழைப் பதிவேட்டை பராமரித்து வருவதாகவும் தெரிவித்தார். பதிவேட்டில் ஒவ்வொரு வருடத்துக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருந்தது. 1903 ஆம் ஆண்டிலிருந்து மழைக்கான பதிவுகள் முதல் பக்கத்திலும், தட்ப வெட்ப நிலைக்கான பதிவுகள் மறு பக்கத்திலும் குறிக்கப்பட்டிருந்தன. 1909ம் ஆண்டு வரை இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. திடீரென்று தட்ப வெட்பநிலைப் பதிவுகள் முதல் பக்கத்திலும், மழைக்கான பதிவுகள் மறுபக்கத்திலும் மாற்றி பதியப்பட்டிருந்தன. ஏன் பதிவேடு திடீர் என்று மாற்றப்பட்டது என்று கேட்டதற்கு, அந்த குமாஸ்தா நான் மழை, தட்ப வெட்பம் என்ற தலைப்பை முன்னாடியே எழுதிவிடுவேன் என்றும் அதற்கான பதிவுகளை பின்னர் பதிவு செய்வேன் என்றும் பதிலளித்தான். நீதிபதி குமாஸ்தாவைப் பார்த்து பதிவேட்டை காண்பித்து, பதிவுகளில் குறியீடு செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட பேனா மையும் மாறியிருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும் பதிவேட்டில் பயன்படுத்தப்பட்ட மையையும் எழுதப்பட்ட எழுத்துகளையும் பார்க்கும் பொழுது அது சமீபத்தில் எழுதப்பட்டதாக தெரியவந்தது.
பதிவேட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் தாவிரவியல் பூங்காவின் க்யுரேட்டர் – மேற்பார்வையாளர் தன் கையொப்பத்தை இட்டு முத்திரையிட  வேண்டும். ஆனால் பதிவேட்டில் க்யுரேட்டர் கையெழுத்து இல்லை. 1908ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இன்று வரை, தானே திவேட்டில் குறிப்பு எழுதி வருவதாக குமாஸ்தா சாட்சியம் அளித்தான். ஆனால் அவனுடைய பணிப் பதிவேட்டை பார்த்தால் அவன் 1922 ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை விடுப்பில் சென்றிருந்தது தெரியவந்தது. இருப்பினும் குமாஸ்தா விடுப்பில் சென்ற நாட்களில் கூட அவனுடைய கையெழுத்து பதிவேட்டில் காணப்பட்டது. எனவே குமாஸ்தாவின் சாட்சியம் நம்பும்படியாக இல்லை. மேலும் மழைப் பதிவேடு உண்மையானதாக இல்லை. அதில் காணப்படும் பதிவுகள் எல்லாம் உட்புகுத்தப்பட்டிருக்கிறன. 1909 ஆம் ஆண்டு, அதற்குப் பிறகு உள்ள வருடங்களுக்கான பதிவேடுகள் ஜோடிக்கப்பட்டவை, அது உண்மையானதாக இல்லை என்று நீதிபதி முடிவுக்கு வந்தார்.
பிரதிவாதி தரப்பில், 1908ம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி அன்று மழை பெய்யவில்லை என்று ஆணித்தனமாக நிரூபிக்கமுடியவில்லை.
சரி, மேஜோ குமார் சாகவில்லை என்றால் இறந்தது யார்? அல்லது யாருடைய பிணம் எரிக்கப்பட்டது? என்ற கேள்வியை நீதிபதி எழுப்பினார்.
இது ஒன்றும் கொலை வழக்கோ அல்லது கொலை முயற்சி வழக்கோ இல்லை. இருந்தாலும் இந்த வழக்குக்கு மேஜோ குமார் இறக்கவில்லை, அவர் உடல் தீயூட்டப்படவில்லை என்பதை நிரூபித்தாக வேண்டும்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: